“இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஹைட்டி புரட்சியை மனிதத்தன்மையற்ற கடனால் பிரான்ஸ் நசுக்கியது”-விஜய் பிரசாத்
1791 ஆகஸ்ட் மாதம் புயல் சூழ்ந்த ஒரு இரவில், டட்டி புக்மேன் (1767-1791) மற்றும் செசில் ஃபாட்டிமான் (1771-1883) ஆகிய இருவரும் பிரான்சுக்கு சொந்தமான பகுதியான வடக்கு செயிண்ட்-டொமிங்கில் உள்ள பொய்ஸ் கைமனில் ஒரு கூட்டத்தை நடத்தினர். அடிமைப்படுத்தப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்களின் மத்தியில் நடத்தப்பட்ட அவர்களது உரை பிரான்ஸ் நாட்டவரின் பண்ணைகள் முழுவதும் பெரும் கிளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. புக்மேன் கிரேயோல் மொழியில் பேசிய வார்த்தைகள் பல தலைமுறைகளாக நினைவில் வைக்கப்பட்டு, இறுதியில் வரலாற்று புத்தகங்களில் இடம்பெற்றன. அந்த அளவிற்கு அந்த வார்த்தைகள் வலுவானவை.
வெளிச்சம் தரும் சூரியனை படைத்த கடவுள், அலைகளை எழுப்பி புயலை ஆளுகிறார், மேகங்களில் மறைந்திருந்தாலும், அவர் நம்மைக் கவனிக்கிறார். வெள்ளையர் செய்வதை அவர் பார்க்கிறார். வெள்ளையரின் கடவுள் தனது குற்றங்களின் மூலமாக அவனை ஈர்க்கிறார். ஆனால் நமது கடவுள் நாம் நல்ல செயல்களைச் செய்ய அழைக்கிறார். அவர் நமது ஆயுதங்களை வழிநடத்தி நமக்கு உதவுவார். நம்மை பலமுறை அழவைத்த வெள்ளையர்களின் கடவுளின் சின்னத்தைத் தூக்கி எறியுங்கள். நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஒலிக்கின்ற சுதந்திரத்தின் குரலைக் கேளுங்கள்.
1789 பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுத்திய அதிர்வு புக்மேன் மற்றும் ஃபாட்டிமான் நடத்திய கூட்டத்தின் முடிவிலும் எதிரொலித்தது. அது அவர்களது மனிதநேயத்தின் பாரம்பரியங்களாக இருந்த ஆப்பிரிக்க மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்து பெறப்பட்டவை அது சக்திவாய்ந்ததாக இருந்தது. இவை இரண்டுமே அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள் வெகுண்டு எழுந்தனர். பிரெஞ்சு முதலாளிகளின் பண்ணைகளை எரித்து, தங்களை அடிமைப்படுத்தி உரிமை கொண்டாடியவர்களைக் கொன்றனர். ஆப்ரிக்கர்களின் பழிவாங்கல் கொடூரமானதாக இருந்தது. அப்படி கொடூரமான பழிவாங்கல் கூட ஆப்ரிக்கர்களின் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறையை பிரதிபலிக்க முடியவில்லை.
பண்ணை உரிமையாளர்களின் மனநிலையை பற்றி அறிய, அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த சிந்தனைகளை படிக்க வேண்டும். இது ஆன்டிகுவாவில் ஒரு வெள்ளையின பண்ணையாளர் கேப்டன் ஜான் நியூட்டனிடம் கூறியது, அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் வர்த்தகராக இருந்து அந்த அடிமை முறையின் ஒழிப்பாளராக மாறிய அவர், இதையும் மற்ற உதாரணங்களையும் 1787 இல் தாட்ஸ் அப்பான் தி ஆப்பிரிக்கன் ஸ்லேவ் டிரேட் என்ற சிறு நூலில் பதிவு செய்தார்:
அவர்களுக்கு மிதமான வேலை அதிகமான நல்ல உணவு கொடுத்து நன்றாக நடத்தி அவர்களின் வாழ்க்கையை முதுமை வரை நீட்டிக்க உதவுவதா? அல்லது, அவர்களின் உழைப்பு சக்தியை உறிஞ்சி கடைசி வரை இழுத்து, சிறிது நேர ஓய்வு கடுமையான வாழ்க்கை முறையும் கொடுத்து அவர்களை பயனற்றவர்களாக்கி வேலை செய்ய முடியாத நிலைக்கு வேகமாக தேய்ந்து போகவிடுவதா? அதன் பின் அவர்க இடத்தை நிரப்ப புதிய அடிமைகளை விலைக்கு வாங்குவது?
அந்த இரவு துவங்கிய கிளர்ச்சியை டூசெயின்ட் லவெர்ச்சுர் (1743-1803) வழிநடத்தினார். 1791 ஆம் ஆண்டில், தனது பாட்டனால் கல்வி கற்றுக்கொண்ட லவெர்ச்சுர், ஒரு பண்ணையில் நிர்வாகியாக இருந்தார் (ஜூலியஸ் சீசரின் கமென்டரீஸ் ஆன் தி காலிக் வார்ஸ் உட்பட பல புத்தகங்களை எடுத்து படிக்க அனுமதித்த பதவி, இது அவருக்கு ராணுவ அறிவை கொடுத்தது). லவெர்ச்சுர் மற்றும் பிற கிளர்ச்சித் தலைவர்கள் பிரான்ஸ் நாட்டை வீழ்த்த ஸ்பானியர்களுடன் சிறிய கூட்டணி அமைத்தனர். அதனால் பிரான்ஸ் பிரிட்டிசுடன் இணைந்தது. ஐரோப்பியர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள உண்மையான அச்சுறுத்தலை ஒடுக்குவதற்கு தங்கள் சொந்த பகைகளை ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது.
அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் கிளர்ச்சி. பாரிஸில் மாக்ஸிமிலியன் ரோபஸ்பியரால் வழிநடத்தப்பட்ட ஜாக்கோபின்களின் எழுச்சி சமநிலை மேலும் மாற்றியது. 1794 பிப்ரவரியில், ரோபஸ்பியர் மற்றும் ஜாக்கோபின்கள் பிரெஞ்சு காலனி அரசுகளின் அடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டுவர தேசிய மாநாட்டு ஆணையை ஆதரித்தனர். இது பிரெஞ்சு படைக்கும் லவெர்ச்சுரின் படைகளுக்கும் இடையே ஸ்பானியர்கள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்க தூண்டியது. குடிமக்களே ஆயும் ஏந்துங்கள்! என்ற கோசத்தை எழுப்பினார்கள்.
ரோபஸ்பியர் இறுதியில் வீழ்த்தப்பட்டார். 1799 இல் நெப்போலியன் போனபார்ட் முதல் கான்சுலாக அதிகாரத்திற்கு வந்தார் மற்றும் பிரான்சுக்கும் ஆப்பிரிக்க புரட்சிப் படைகளுக்கும் இடையிலான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தார். அதில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆணையும் அடங்கும். 1802 முதல் 1803 வரை, பிரான்சின் விஸ்கவுண்ட் ஆஃப் ரோச்சாம்போ காலனியின் பிரெஞ்சு கட்டுப்பாட்டை மீட்டெடுக்க செயிண்ட்-டொமிங்கின் வடக்குப் பகுதியில் பயங்கரவாத ஆட்சியை நடத்தினார். ஒரு உதாரணம் ஆப்பிரிக்கர்களை வேட்டையாட 1,500 க்யூபன் மாஸ்டிஃப் நாய்களைப் பயன்படுத்தினார். ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கலகக்காரர்களை மூச்சுத் திணற சாக வேண்டும் என செய்ய கந்தகத்தை எரித்து விஷவாயுவை பரப்புவர்.
ரோச்சாம்போ பிரெஞ்சு வீரர்களிடம், ‘இனி நான் உங்களிடமிருந்து தைரியத்தை எதிர்பார்க்க மாட்டேன் உங்களது கோபம் வேண்டும் என கூறினார். அவர்கள் லே கேப் (இப்போது கேப்-ஹெய்டியன்) அருகே உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக உடல்களை வீசினர். அதனால் நீண்ட காலமாக, மக்கள் அங்கு பிடிக்கப்பட்ட மீன்களை உண்ண மறுத்தனர். லவெர்ச்சுர் 1802 இல் பிரான்ஸ் படையால் கைது செய்யப்பட்டு, ஒரு வருடத்தில் ஜுரா மலைகளில் உள்ள சிறையில், சுவிஸ் எல்லைக்கு அருகில் இறந்து போனார். இருப்பினும், அவரது படை தொடர்ந்து ஜீன்-ஜாக்ஸ் டெசலைன்ஸின் கட்டுப்பாட்டின் கீழ் விடாமல் போராடியது. 1804 புத்தாண்டு தினத்தில், டெசலைன்ஸின் படைகள் பிரான்சின் அடிமை தனத்தில் இருந்து சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தி, தங்கள் நாட்டிற்கு ஹாய்டி (இப்போது ஹைட்டி, ‘மலைகளின் நிலம்’ என்ற டாய்னோ வார்த்தை) என மறுபெயரிட்டன.
மூன்றாம் உலக நாடான ஹைட்டி மக்கள் முதல் வெற்றிகரமான புரட்சியை நடத்தினர். போர் முடிந்த கடைசி மாதங்களில், டெசலைன்ஸ் தனது மகள் கேத்தரின் ஃப்ளோனிடம், பிரான்சின் தேசிய கொடியிலிருந்து வெள்ளைப் பகுதியை அகற்றி, சிவப்பு மற்றும் நீலத்தை ஒன்றாக தைத்து, சுதந்திரக் கொடியில் சுதந்திரம் அல்லது மரணம் என்று எழுதும்படி கேட்டார். அவர்கள் தங்கள் சுதந்திரத்தை வென்ற பிறகு அவ்வார்த்தைகள் கொடியிலிருந்து நீக்கப்பட்டன.
அடிமைகளின் மீது கட்டி உருவாக்கப்பட்ட அமெரிக்கா ஹைட்டியின் புரட்சி தன் சொந்த மண்ணுக்கும் வரலாம் என அஞ்சியது. 1792 இல், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் தனது வெளியுறவுத்துறை செயலாளர் தாமஸ் ஜெஃபர்சனுக்கு ஆப்ரிக்கா அடிமைகளின் புரட்சியை அடக்க பிரான்ஸ் பண்ணை முதலாளிகளுக்கு உதவ 75 மில்லியன் டாலர் உதவி அனுப்பும்படி அறிவுறுத்தினார். ‘மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள அண்டை நாடுகளில் நடந்த புரட்சிகள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடிமைகளின் மனதில் கணிசமான உணர்ச்சியை தூண்டி இருப்பதாக தெரிகிறது என ஜூலை 1802 இல், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்சன், அமெரிக்காவிற்கான பிரிட்டனின் தூதர் ரூஃபஸ் கிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். கிளர்ச்சிக்கான பெரும் மனநிலை அவர்களிடையே வெளிப்படையாகத் தெரிகிறது’. அதனால்தான் ஜெஃபர்சனும் அவரது அமைச்சரவையும் ஹைட்டி புரட்சியை ஒடுக்குவதற்கு ஏதாவது ஒரு வழியை கண்டறிய முயன்றனர்.
1806 பிப்ரவரி 21 அன்று, ஜெஃபர்சன் ‘செயிண்ட். டொமிங்கோ தீவின் சில பகுதிகளுடன்’, அதாவது ஹைட்டியுடனான வர்த்தகத்தைத் தடை செய்தார். 1824 இல், தென் கரோலினா செனட்டர் ராபர்ட் ஹேன் அதைத் தெளிவாகக் கூறினார். ‘ஹைட்டி தொடர்பாக எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது. நாங்கள் ஒருபோதும் அவளது சுதந்திரத்தை ஏற்கமாட்டோம். முடியாது. எங்கள் ஒன்றியத்தின் பெரும் பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதைக்கூடத் தடுக்கிறது என்றார். ஏனெனில் ஹைட்டியின் சுதந்திரம் அமெரிக்க அடிமைத்தனத்திற்கு ஒரு சவாலாக இருந்தது.
1825 ஆம் ஆண்டில், கப்பல்துறை இராஜதந்திரத்தின் ஒரு செயலில், பிரான்சின் மன்னர் சார்லஸ் -10 ஹைட்டி நீர்நிலைகளுக்கு போர்க்கப்பல்களின் கப்பற்படையை அனுப்பி, அந்த நாடு தனது காலனி மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட உழைப்பாளர்களை இழந்ததற்கான ‘இழப்பீடாக’ 150 மில்லியன் ஃபிராங்குகள் செலுத்த வேண்டும் என்று கோரினார். இந்த தொகை ஹைட்டியின் வருடாந்திர பட்ஜெட்டை விட பத்து மடங்காகவும், லூசியானா நிலத்திற்காக அமெரிக்கா செலுத்திய தொகைக்கு சமமாகவும் இருந்தது. இழப்பீட்டை தர ஹைட்டி பிரான்ஸ் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியது. அதன் பின் ஒருபோதும் வெளியேற முடியாத கடன் வலையில் விழுந்தது. 1825 முதல் 1947 வரை ( 100 ஆண்டுகளுக்கு மேல்) ஹைட்டி இறுதியாக கடனைச் செலுத்தி முடித்த போது அதன் செல்வத்தில் 80 சதவீதம் அதாவது சுமார் 21 பில்லியன் டாலர் கடனாக செலுத்தியுள்ளது. மேலும் ஹைட்டியை பெரும் குழப்பத்தில் நெருக்கடியான நிலையில் தள்ளியது. (கேட்ட நட்ட தொகையின் மதிப்பைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகச் ஹைட்டியர்கள் செலுத்தியதாக மதிப்பிடப்படுகிறது). இது மிக மோசமான சுரண்டல். பிரான்சோ, கடனை வாங்கிய வங்கியோ இதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை.
ஹைட்டி எழுந்து நிற்க முயன்ற ஒவ்வொரு முறையும், அது கீழே தள்ளப்பட்டது. 1915 ஆம் ஆண்டில், அமெரிக்காவுடன் நட்பு பாராட்டிய ஹைட்டி ஜனாதிபதி ஜீன் வில்ப்ரன் கியூம் சாம் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஹைட்டியின் புதிய அரசாங்கம் தனது இறையாண்மையை செதுக்க முயன்றபோது அமெரிக்க ராணுவம் தலையிட்டது. 1934 வரை பத்தொன்பது ஆண்டுகள் அந்த சிறு தீவை ஆக்கிரமித்தது. பின் 1957 முதல் 1986 வரை தனது ஆதரவாளரான துவாலியர் என்ற கொடூரமான சர்வாதிகாரியின் ஆட்சியை அமைத்தது. 1990 டிசம்பர் மாதம் ஹைட்டி விவசாயிகளிடையே வேரூன்றியிருந்த திடீர் வெள்ளம் போன்ற மக்கள் சக்தி முன்னாள் மத குரு ஜீன பெர்ட்ராண்ட் அரிஸ்டைட் 70 சதவீத வாக்குகளுடன்ஜனாதிபதியாக வெற்றி பெற வைத்தது இதற்கு முன் எந்த ஹைட்டியரும் இத்தகைய வெற்றியை பெறவில்லை . இது மீண்டும் லவெர்ச்சுர் போல அல்லது 1844 இல் நடந்த பிக்கெட் கிளர்ச்சி மற்றும் அதன் ல’ஆர்மே சஃப்ராண்டே (துயரப்படும் ராணுவம்) போல இருந்தது. அரிஸ்டைடின் தலைமைத்துவமும் விவசாயிகள் மீதான அர்ப்பணிப்பும் இந்த ஆட்சியின் மீது கடந்த கால நிகழ்வுகளைப் போலவே அச்சுறுத்தலாக இருந்தன.
எட்டு மாதங்களுக்குப் பிறகு, 1991 செப்டம்பர் 30 அன்று அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட ராணுவமும் காவல்துறையும் அரிஸ்டை ஆட்சியை கவிழ்த்தன. இறுதியாக, உலக நாடுகளின அழுத்தம் காரணமாக அரிஸ்டைட் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் 1994 முதல் 1996 வரை தனது பதவிக்காலத்தை முடிக்க அனுமதிக்கப்பட்டார்.
2000 த்தில் அரிஸ்டைட் இன்னும் பெரிய வெற்றி பெற்றார். 90 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆட்சிக் கவிழ்ப்பும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட நெருக்கடி ஆகியவை முதல் பதவிக் காலத்தை தீவிரமாக்கியது. இழப்பீடாக பிரான்ஸ் 22 பில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்தப் பிரச்சினை 19 ஆம் நூற்றாண்டின் உடன்படிக்கைகளில் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், அத்தகைய இழப்பீடு எதுவும் செலுத்தப்படாது என்றும் பிரான்ஸ் கூறியது. அரிஸ்டைட் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவால் 2004 இல் ஆதரித்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் தூக்கி எறியப்பட்டு, இழப்பீட்டுக்கான ஹைட்டியின் கோரிக்கையை மறுதலித்த ஒரு ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது. பணப் பிரச்சினை, புயல்கள், நிலநடுக்கங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிந்தைய ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைகளின் ஊடுருவல், காலரா நோய்த்தொற்று மற்றும் பரவலான பாலியல் வன்கொடுமை என நாடே மோசமான நிலைக்கு சென்றது.
வெளிநாட்டு கடன் எனும் பேய், பணவாட்டம், காடுகள் அழிப்பு, அமெரிக்க உற்பத்திப் பொருட்களைக் குவிப்பதன் மூலம் உள்நாட்டு விவசாயத்தின் வீழ்ச்சி, குறைந்தபட்ச ஊதிய மசோதாவைத் தடுத்தது, தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஜனாதிபதியின் படுகொலை, மிக சமீபத்தில், கும்பல் வன்முறையின் தாக்கம் ஆகியவற்றிற்கு அடியில் ஹைட்டி புதைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ஹைட்டி சுவாசிக்க அனுமதிக்காத ஏகாதிபத்தியவாதிகளினால் உருவானது. உலகில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெற்றிகரமான புரட்சியை நடத்திய முதல் மக்கள் ஹைட்டியர்கள் என்ற உண்மையை ஏகாதிபத்தியவாதிகளால் ஒருபோதும் மன்னிக்க முடியவில்லை.
2025 பிப்ரவரி 20 அன்று, ஹைட்டி கவிஞரும் ஓவியரும் பிராங்கெடியென் டெல்மா, போர்ட்-அவ்-பிரின்ஸில் 88 வயதில் இறந்தார். அவர் தன் வாழ்நாளில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மனிதரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான ஹைட்டி தாய்க்கு 1936 இல் பிறந்தவர் என்ற உண்மையை பிரதிபலித்து நின்றார். பிராங்கெடியென் எதிர்காலத்திற்காக ஏங்கும் மக்களுக்கு குரல் கொடுத்து அதில் சோதனைகள் இருந்தபோதிலும் தனது தாய்நாட்டில் தங்கினார். அச்சுறுத்தலின் முடிவில் 1986 இல் எழுதப்பட்ட அவரது அற்புதமான உறக்கமின்மை மலர்கள் என்ற புத்தகத்தின் மூலமாக பிராங்கெடியென் சிந்தித்தார்.
கனவு காண்பது சந்தேகத்திற்கு இடமின்றி சுதந்திரத்திற்கு அழைத்து செல்லும் முதல் பாதையாகும்.
கனவு காணுதல் என்பது ஏற்கனவே சுதந்திரமாக இருப்பதாகும்.
பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதிய 17 ஆவது செய்தி மடல், தமிழில் சேது சிவன்