Tamil Marx

கட்டுரைகள்

வறுமை ஒழிப்பில் சாதித்த கேரள மாடலும் சீன மாடலும்; உலக நாடுகளுக்கு வழிகாட்டிகள்

வறுமை ஒழிப்பில் சாதித்த கேரள மாடலும் சீன மாடலும்; உலக நாடுகளுக்கு வழிகாட்டிகள்
  • PublishedJune 1, 2025

2025-இன் இறுதியில், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தையும் விட கேரளா தீவிர வறுமையை முழுமையாக ஒழித்து, சோசலிச பாதையில் ஒரு சான்றாக நிற்கிறது. பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட முற்போக்கான நில சீர்திருத்தங்கள், வலுவான உள்ளாட்சி அமைப்பு, பொது சுகாதாரம் மற்றும் கல்வி முறைகள், மற்றும் பெண்களால் வழிநடத்தப்படும் (women-led empowerment initiatives,)முயற்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த மாநிலம் சமத்துவமான வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

ராணுவ மோதல்களும் போர் நடவடிக்கைகளுமே தேச பற்று என தலைப்புச் செய்திகளாக வெளி வந்து வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை மற்றும் பொது சுகாதார நெருக்கடிகள் போன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளில் இருந்து அனைவரின் கவனத்தையும் திசை திருப்புகின்றன. ஒரு நாட்டின் மகத்துவம் அதன் ஆயுத பலத்தில் இல்லை மாறாக அந்த நாட்டின் மக்களின் நல்வாழ்வில் தான் அடங்கி உள்ளது.

தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் (EPEP) 

தீவிர வறுமை ஒழிப்புத் திட்டமானது துல்லியமான தரவு, கிராமப்புறங்களில் மக்களின் பங்கேற்பு, மற்றும் பல நிலை நலத்திட்ட தலையீடுகள் ஆகியவற்றை இணைத்து, 64,000 குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவித்துள்ளது . கேரள இடது ஜனநாயக முன்னணி அரசினால் 2021-ல் தொடங்கப்பட்ட தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் (EPEP) உலகளவில் பாராட்டப்படும் ஒரு முன் மாதிரியாக உள்ளது. கேரள மாநில திட்டக் குழுவின் 2024 பொருளாதார ஆய்வின்படி, இத்திட்டம் உள்ளூர் வார்டுகளில் 1,18,309 ஏழைக் குடும்பங்களை அடையாளம் கண்டு உணவு, வருமானம், வீடு மற்றும் சுகாதாரம் ஆகிய நான்கு படிநிலை சரிபார்ப்பு முறை மூலம் உறுதி செய்யப்பட்டது.

இந்த முறை மூலம் 64,006 குடும்பங்கள் தீவிர வறுமையில் இருப்பது தெரியவந்தது.இதில் 81% குடும்பங்கள் கிராமப்புறங்களில் வசித்து வந்தன. மலப்புறம் மாவட்டத்தில் 8,553 குடும்பங்கள் தீவிர வறுமையில் இருப்பது கண்டறியப்பட்டது. கோட்டயம் மாவட்டத்தில் 1,071 குடும்பங்கள் தீவிர வறுமையில் இருப்பது கண்டறியப்பட்டது. இவ்வாரு ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுப்புகள் நடந்தன.

சுகாதார நெருக்கடிகளால் சுமார் 40,000 குடும்பங்களை பாதித்திருந்தன. உணவு பாதுகாப்பின்மையால் 34,523 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 15,091 குடும்பங்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான வீடுகள் இன்றி இருந்தன.

இந்த எண்ணிகக்கைள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான துள்ளியமான திட்டங்களை உருவாக்க வழிவகுத்தன. அதாவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உணவு தேவைகள், சுகாதார தேவைகள் என உடனடி நிவாரணம், தற்காலிக வீடுகள், வேலைவாய்ப்பு உதவி என குறுகிய கால ஆதரவு மற்றும் நீண்ட கால தீர்வுகளளுக்கான திறன் பயிற்சி, நிரந்தர வீடுகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன.

உதாரணமாக, அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும் குடும்பங்கள் நவீன படுத்தப்பட்ட கேரள அரசு மருத்துவமனைகள் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றன. அதே சமயம் கூட்டுறவு அமைப்புகள் மூலம் சுயதொழில் வாய்ப்புகளை பெற்றன.

கேரளாவின் சோசலிச நடைமுறைள்

கேரளாவின் வறுமை ஒழிப்பு கட்டமைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது ஜனநாயக முன்னணி (LDF) ஆகியவற்றால் வழிநடத்தப்பட்ட நீடித்த சீர்திருத்த நடைமுறைகளை அடிப்படையாக கொண்டது . இந்த சீர்திருத்தங்கள் 1970-களில் 59.79% இருந்த மாநிலத்தின் வறுமையை 2011-ல் வெறும் 11.03% ஆக குறைக்க உதவியது.

கேரளாவின் முன்னேற்றத்தின் ஒரு முக்கிய அங்கம் அதன் விரிவான விவசாய சீர்திருத்த திட்டமாகும். நில சீர்திருத்தங்கள், வாடகை விவசாயிகளுக்கு நில உரிமையை வழங்கியது, நிலம் வைத்திருப்பதற்கு உச்ச வரம்புகளை உறுதியாக அமல் படுத்தியது, அதீத நிலத்தை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மறுபங்கீடு செய்வதன் மூலம் உறுதியான சமூக படிநிலைகளை தகர்த்தது.

இந்த நடவடிக்கைகள் ஆதிக்க சாதியினரின் நிலப்பிரபுத்துவத்தின் பாரம்பரிய ஆதிக்கத்தை குறைத்தது, கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தியது . மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு (LSGs) கணிசமான நிதி மற்றும் நிர்வாக அதிகாரத்தை உறுதிப்படுத்திய தன் மூலம், மாநிலம் பஞ்சாயத்துகள் உள்ளூர் யதார்த்தங்களுக்கு ஏற்ப நலத் திட்டங்களை வடிவமைக்கவும் செயல்படுத்தவும் செய்தது.

கொரா தொற்றுநோயின் போது, இந்த கட்டமைப்பு முக்கியமானது என நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் சமூக சமையலறைகள் (community kitchen) வேகமாக உருவாக்கப்பட்டன மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் என பல அமைப்புகளின் தன்னார்வலர்கள் உதவி தேவைப்படுவோருக்கு உதவவும், உணவு விநியோகத்திற்கும் உதவினர். இது போன்ற செயல்கள் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்தது மற்றும் செயல்படுத்தலில் பொறுப்புணர்வை அதிகரித்தது.

சுகாதாரத்துறையை மேம்படுத்திய திட்டம் 

மாநிலத்தின் நீண்டகாலமான பொது சுகாதாரம் மற்றும் கல்வியின் மீதான வளர்ச்சிக்கான முதலீடுகள் கேரளாவில் மனித சமூக வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. 2017-ல் தொடங்கப்பட்ட ஆர்த்ரம் மிஷன், சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் முதன்மை சுகாதார மையங்களை மேம்படுத்தியது.

மருத்துவ சேவைகளை அணுகுவதை எளிதான செயலாக மாற்றியது. கேரளாவின் 96.2% எழுத்தறிவு விகிதம், உலகளாவிய கல்வி, தொழில் பயிற்சி மற்றும் பொது பள்ளிக் கல்வி ஆகியவற்றில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் மனித சமுகத்தின் வளர்ச்சிக்கு தேவையான கல்வி, சுகாதாரம், அறிவியல் தொழில் நுட்பம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தொழில்களில் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட முதலீட்டின் விளைவாகும்.

பெண்கள் பங்களிப்பு கேரளாவின் வளர்ச்சியின் மையமாக உள்ளது.குறிப்பாக 1998-ல் தொடங்கப்பட்ட குடும்ப ஶ்ரீ திட்டம் மூலம். 45 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களுடன், குடும்ப ஶ்ரீ உலகின் மிகப்பெரிய பெண்கள்-வழிநடத்தப்படும் வறுமை ஒழிப்பு முயற்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

நுண்நிதி, தொழில் முனைவோர், கூட்டு விவசாயம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றின் இணைந்த முயற்சியின் மூலம், இந்த திட்டம் லட்சக்கணக்கான பெண்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளை சவாலாக எதிர்கொள்ளவும் செய்துள்ளது.

இந்த முயற்சிகள் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் உறுதியான சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆகும். அகாதி ரஹித கேரளம்( Agathi Rahitha Keralam) போன்ற முயற்சிகள் முதியோருக்கான ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை ஆகியவற்றை வழங்கும் ஒரு விரிவான பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த திட்டங்களின் உள்ளடக்கம், கண்ணியம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை முன்னுரிமையாகக் கொண்ட ஒரு மக்கள் நலன் மாநிலமாக கட்டியெழுப்புவதில் கேரளாவின் உறுதி பிரதிபலிக்கின்றது.

இந்த தூண்கள் சமத்துவம், மறுபங்கீடு மற்றும் மக்களின் பங்கேற்பு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றி இருக்கும் ஒரு சோசலிசம் சார்ந்த வளர்ச்சி பார்வை, குறிப்பாக உலகின் தெற்கு நாடுகளின் சூழலில், நவதாராளவாத பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சாத்தியமான மாற்றத்தை எவ்வாறு வழங்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

சீன மாடலும் கேரள மாடலும்

கேரளாவின் சாதனைகளை வேறு எந்த மாநிலங்கலுடனும் ஒப்பிட முடியது. அந்த சாதனைகள் உலக நாடுகளுடன் ஒப்பிடப்பட வேண்டியது அவசியம். கேரளாவின் தீவிர வறுமையை ஒழிப்பதற்கான இலக்கு மற்றும் நடவடிக்கைகள், சீனாவின் வறுமை ஒழிப்பு மற்றும் நிவாரண திட்டதை ஒத்துள்ளது.

சீனா நாடு முழுவதும் நிலவும் வறுமையை குறைக்கும் நடவடிக்கையை 1970-களின் பிற்பகுதியில் தொடங்கியது. 2014 மற்றும் 2020 க்கு இடையில் சீனா மேற்கொண்ட தீவிரமான முயற்சி தீவிர வறுமையை அனுபவித்து வந்த தனிநபர்களை வறுமையில் இருந்து வெளியேற்றியது. சீனாவை போல கேரளாவின் தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் (EPEP), 2021-ல் துவங்கப்பட்டது,

கேரளா மற்றும் சீனா ஆகிய இரண்டுக்கும் இடையேயான பொதுவான மற்றும் முக்கிய விசயம் வறுமையில் இருந்த மக்களை துல்லியமான அடையாளம் காண்பதாகும். சீனாவின் வறுமை ஒழிப்பு பிரச்சாரம் 2014-ல் ஒரு பெரிய நாடு தழுவிய ஆய்வு படி தொடங்கியது. இது தேசிய வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்த 89.62 மில்லியன் மக்களை அடையாளம் கண்டது. இதேபோல், கேரளா உள்ளூர் சுய, அரசு நிறுவனங்கள், கிராம சபைகள் மூலமாக ஆய்வு சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொண்டது. இந்த செயல்முறை மூலமாக தீவிர வறுமையில் வாழ்ந்த 64,006 குடும்பங்களை கேரள அரசு அடையாளம் கண்டது.

இரண்டாவது குடும்பங்களை வறுமையில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்கள். சீனாவில், வறுமையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருமான உருவாக்கம், திறன் பயிற்சி, மருத்துவ சேவை, வீடு வழங்குவது சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கைக்கான இடம்பெயர்வு ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

கேரளா மூன்று விசயங்களை செய்தது. உணவு அத்தியாவசிய மருத்துவ உதவிகள உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்தது. பிறகு குறுகிய கால ஆதரவுகளாக வகைப்படுத்தப்பட்ட தற்காலிக வீடுகள், வேலைவாய்ப்பு உதவிகளை வழங்கியது மற்றும் நீண்ட கால தீர்வுகளான நிரந்தர வீடுகள், திறன் பயிற்சிகள் கூட்டுறவு நிறுவனத்தின் மூலமாக சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தது.

சீனா மற்றும் கேரளா ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் அரசுகளின் தீவிர வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளும் பொதுமக்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதில் உள்ளூர் அமைப்புகளின் கட்டமைப்புகளின் வலுவான பங்கை எடுத்துக்காட்டுகின்றன. சீனா கிராமப்புற அதிகாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் என 30 லட்சத்துக்கும் அதிகமான நபர்களை கிராமப்புறத்தில் வறுமை ஒழிப்பு முயற்சிகளை செயல்படுத்தவும் அதை கண்காணிக்கவும் பயன்படுத்தியது.

கேரளாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், பெண்களால் வழிநடத்தப்படும் குடும்ப ஸ்ரீ இயக்கத்துடன் சேர்ந்து, மக்கள் தேவைகளை அடையாளம் கண்டு, அச்சேவைகளை வழங்குவது மற்றும் வறுமையை நீக்கும் பொறுப்புணர்வை மேலும் உறுதி செய்தல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தது.

எனினும் இன்னும் சவால்கள் தொடர்கின்றன. தீவிர வறுமையை ஒழித்த போதிலும், சீனாவில் நகர்ப்புற-கிராமப்புற பகுதிகளுக்கு இடையிலான வருமான இடைவெளிகள் உள்ளது. அதேசமயம் கேரளா அத்தியாவசிய செலவினங்கள் உயர்வு முதியோர் மக்கள் உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்கிறது.

சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான மையத்தின் 2024 ஆய்வு, தீவிர வறுமையில் உள்ள குடும்பங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிர்ச்சிகரமான திடீர் மாற்றங்களால் வறுமைக்கு தள்ளப்பட்டதாக கண்டறிந்துள்ளது. உதாரணமாக குடும்பத்தில் நன்றாக சம்பாதித்து வந்த உறுப்பினரின் மரணம் அல்லது மிக மோசமான மருத்துவ பிரச்சனை. இந்த ஆய்வு, நிலமை மேலும் மோசமாவதை தடுக்க உள்ளாட்சி அமைப்பு (LSG) மட்டங்களில் மோசமான வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களை முன்னெச்சரிக்கையாக அடையாளம் காணவும் ‘ நிவாரண நிதிகளை’ வழங்கவும் வலியுறுத்தியது. வறுமை மாறக்கூடியது தான், ஆனால் அதற்கு தொடர்ச்சியான கவனம் தேவைப்படுத்துகிறது என்பதை மறந்து விடக்கூடாது.

வறுமையை குறைத்து: வளர்ச்சியை கொண்டு வருவது

தீவிர வறுமையை ஒழிப்பதில் கேரளா அடைந்த சாதனையானது, தெற்குலக நாடுகளில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கான அடித்தளத்தை அமைக்கிறது. இந்த சவால்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவு மட்டுமல்ல, மாறாக அத்தகைய தொழில்நுட்பங்கள் சமமற்ற சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதன் விளைவாகும். கேரளாவில் உருவாகும் கொள்கை திசை, எவ்வாறு நாடுகள் புதுமையை ஏற்றுக்கொள்வதுடன் சமத்துவம், நிலைத்தன்மை மற்றும் மனித நல்வாழ்வு ஆகியவற்றை முன்னுரிமையாகக் கொள்ளவேண்டும் என்பதற்கான மதிப்புமிக்க துல்லியமான அறிவுகளை வழங்குகிறது.

தானியங்கி (automation) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழிலாளர் சந்தைகளை மாற்றத் தொடங்கியதால், கேரளா ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துவங்கியுள்ளது. தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்க்காமல், அம்மாநிலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற வளர்ச்சியடைந்த துறைகளில் முதலீடு செய்கிறது.

உதாரணமாக, கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (KFON) முயற்சி ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை இணைய உரிமையை உறுதி செய்கிறது.இதன் மூலம் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை எளிதாக்குகிறது. அதே நேரத்தில், கேரள அரசு swiggy Zomato Uber Ola போன்ற இணையதளத்திலா இயங்கும் கிக் தொழிலாளிகளுக்கான பொருளாதார பாதுகாப்புகளை வலுப்படுத்துகிறது. அதாவது இத்தொழிலாளர்களுக்கான நல வாரியங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருவது உள்ளிட்டவை. இந்த முயற்சிகள் சீனாவின் ‘பொது வளரீச்சி” (Common Prosperity) கூறுகளை எதிரொலிக்கின்றன,

கேரளாவின் நிலையான வளர்ச்சிக்கான உறுதிப்பாடு அதன் விகிதாசார ஆளுமை மாதிரியால்(decentralised governance model) ஆதரிக்கப்படுகிறது. அதிகாரம் அளிக்கப்பட்ட பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சூழல்-குறிப்பிட்டதாக்க வளர்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்கிறது.

உதாரணமாக, ஹரிதா கேரளா மிஷன், மழைநீர் சேகரிப்பு, இயற்கை விவசாயம் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை மக்களிடையே ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உள்ளூர் கட்டத்திலேயே ஒருங்கிணைக்கிறது. இந்த அணுகுமுறை சீனாவின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்துடன் (rural revitalisation strategy) ஒத்துப்போகிறது. சீனாவில் நகர்ப்புறத்திற்கும் கிராமப்புறத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான முதலீடுகளை பயன்படுத்துகிறது.

இந்த முயற்சிகள் அனைத்தும் உற்பத்தி அல்லது இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், மக்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு வளர்ச்சி மாதிரிக்கான கேரளாவின் உறுதியை காட்டுகின்றன. பொருளாதார, சூழலியல் நிலைத்தன்மை மற்றும் மனித நேயம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், அரசு வழக்கமான முதலாளித்துவ பொருளாதார நடைமுறையை சவாலாக எதிர்கொள்ளும் ஒரு பாதையை உருவாக்குகிறது.

கேரளாவின் வெற்றி, சமூக நீதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் மூலம் வறுமையை வெல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இது இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளுக்கும் ஒரு நம்பிக்கையூட்டும் எடுத்துக்காட்டாக உள்ளது!

 

The Globetrotter இல் “அதுல் சந்திரா” எழுதியது கட்டுரையை தழுவி தமிழில் தோழர் தீபக்.

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *