அம்பானியும் காரல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடும் 1- சிவக்குமார்
முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்? அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் மதிப்பை விட அவர்களது கூலி ஏன் குறைவாக உள்ளது? இதற்கும் காரல் மார்க் சொல்லும் உபரி மதிப்பு கோட்பாட்டிற்கும் என்ன தொடர்பு என பேசும் கட்டுரை மூன்று பகுதிகளாக உள்ளது.
பகுதி – 1
1. முதலாளி வர்க்கம் (அம்பானி), தொழிலாளி வர்க்கம் (இரா நல்லகண்ணு)
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த இரண்டு ஆளுமைகளை எடுத்துக் கொள்வோம். ஒருவர் பெயர் திருபாய் அம்பானி. 1932 இல் பிறந்தார், 2002 இல் இறந்தார். இன்னொருவர் பெயர் இரா நல்லகண்ணு, 1920 வாக்கில் பிறந்தார். நூற்றாண்டு கடந்து இன்றும் வாழ்கிறார்.
திருபாய் அம்பானி இறக்கும்போது அவருக்குச் சொந்தமான சொத்துகளின் மதிப்பு இன்றைய பண மதிப்பில் ரூ 24,000 கோடி. அவர் அப்போது உலகின் 138 ஆவது பெரிய பணக்காரராக இருந்தார். அவர் விட்டுச் சென்ற வணிகப் பேரரசை அவரது இரு மகன்களும் பங்கிட்டுக் கொண்டனர். மூத்த மகனான முகேஷ் அம்பானி இப்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர். அவரது சொத்து மதிப்பு ரூ 9 இலட்சம் கோடி. அதில் பெரும்பகுதி திருபாய் அம்பானி உருவாக்கி விட்டுச் சென்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பில் முகேஷ் அம்பானியின் பங்கு ஆகும்.
தோழர் இரா நல்லகண்ணு நூற்றாண்டு கடந்து இன்றும் வாழ்ந்து வருகிறார். கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டியாக அவரது வாழ்க்கை தொடர்கிறது. சமீபத்தில், தமிழ் பத்திரிகையான ஆனந்த விகடன் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி ரூ 1 இலட்சம் நிதி அளித்த போது, அந்த நிதியை தனது கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்திடம் கொடுத்து விட்டார், ஐயா நல்லகண்ணு.
அம்பானி யார்? நல்லகண்ணு யார்? இந்த உலகின் ஒவ்வொரு மனிதரையும் போல அவர்கள் தனிமனிதர்கள் அல்ல. சமூகத்தின் குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். சொல்லப் போனால் எதிரெதிர் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள்.
திருபாய் அம்பானி முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர், முதலாளியாக வாழ்ந்தவர், பெரும் செல்வத்தைக் குவித்தவர். ஐயா நல்லகண்ணு தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர். தொழிலாளி வர்க்கப் போராளியாக வாழ்ந்தவர், கம்யூனிச இயக்கத்தின் தலைமகனாய் திகழ்பவர்.
திருபாய் அம்பானியும் அவரது மகனும் இந்தியாவின் முதல்நிலை பணக்காரர்கள் ஆனது எப்படி? அவர்கள் முதலாளிகளாக இருந்ததால், முதலாளிகளாக செயல்பட்டதால் அவர்கள் பணக்காரர்களாக ஆனார்கள் என்று சொல்வதை யாரும் மறுக்க மாட்டார்கள். முதலாளித்துவ ஆதரவாளர்களும் சரி, கம்யூனிஸ்டுகளும் சரி அதில் உடன்படுவார்கள்.
ஆனால், அம்பானி எப்படி தனது செல்வத்தைக் குவித்துக் கொண்டே போனார் என்ற கேள்விக்கு தொழிலாளி வர்க்கம் சொல்லும் விடை தனித்துவமானது, உண்மையானது. இந்த விடையை முழுமையாக முரணின்றி தொகுத்து வழங்கியவர் தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசிரியர் கார்ல் மார்க்ஸ்.
2. அம்பானியின் செல்வப் பெருக்கத்துக்கு ஆதாரமான இன்றைய சமூக வாழ்க்கை
அம்பானி போன்ற முதலாளிகளின் செல்வத்துக்கு ஆதாரமாக இருப்பது மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் இடையிலான உறவு. இந்த உறவுக்கு அடிப்படையாக இருப்பது ஒவ்வொருவரும் தத்தமது உற்பத்திப் பொருட்களை சந்தையில் பணத்துக்கு விற்பதும் தமக்குத் தேவையான பொருட்களை சந்தையில் பணம் கொடுத்து வாங்குவதும் ஆகும்.
அதாவது, இன்றைய உலகில் அம்பானி போன்ற முதலாளிகளாக இருந்தாலும் சரி தொழிலாளர்களும் சரி சந்தையில் பொருட்களை வாங்குகின்றனர்.
தொழிலாளர்கள் தமது வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். முதலாளிகளும் வாழ்க்கைக்குத் தேவையான பல பொருட்களை வாங்குகின்றனர். அவை, மனிதர்கள் தாங்கள் சமூகத்தில் உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருட்கள். அரிசி, மளிகை, போக்குவரத்து, பொழுதுபோக்கு இன்னும் பலவகையான பொருட்கள் அதில் அடங்கும். முதலாளிகள் அதிக விலைக்கு விற்கும் பொருட்களையும் (எடுத்துக்காட்டாக விலை கூடிய சோப்பு, அல்லது விலைகூடிய சமையல் எண்ணெய்) தொழிலாளிகள் குறைந்த விலைக்கு விற்கும் பொருட்களையும் வாங்கலாம். ஆனால், இரண்டுமே அவரவர் தத்தமது வாழ்க்கையை நடத்துவதற்குப் பயன்படுபவையே.
இந்தப் பொருட்களை வாங்குவதற்கு அவர்கள் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பொருட்களின் மதிப்பின் அடிப்படையில் அவற்றுக்கு பணத்தில் விலை கொடுக்கப்படுகிறது.
சந்தையில் விற்கவும் வாங்கவும் செய்யப்படும் பொருட்களை சரக்குகள் (commodities) என்று அழைக்கிறோம். அந்த விற்றல் வாங்கல் பரிவர்த்தனைக்கு அடிப்படையாக அமைவது அவற்றின் மதிப்பு (value)
எந்த ஒரு சரக்கின் மதிப்பும் அதாவது அதற்குச் சந்தையில் எவ்வளவு பெறுமானம் என்பது அதை உருவாக்கத் தேவைப்படும் மொத்த மனித உழைப்பினால் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ கத்தரிக்காயின் சந்தை மதிப்பு அல்லது விலை, அதனை உற்பத்தி செய்யத் தேவையான உழைப்பையும், அதன் உற்பத்தியில் பயன்படும் பிற பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான உழைப்பையும் பொறுத்தது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் நிலவும் உற்பத்தி நிலைமைகளில் அதை உற்பத்தி செய்ய எவ்வளவு உழைப்பு தேவையோ அவ்வளவுக்கு மட்டுமே உழைப்பை செலவிட்டிருக்க வேண்டும்.
அப்படியானால், ஒருவரிடம் பணம் இருக்கிறது என்றால் அவர் மதிப்புள்ள ஏதோ ஒன்றை ஏற்கனவே விற்று கையில் பணத்தை வைத்திருக்க வேண்டும் (அல்லது அப்படி பணத்தை ஈட்டிய ஒருவரிடமிருந்து அதனைப் பெற்றிருக்க வேண்டும்). இந்த விற்பனையைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.
இப்போதைக்கு, அம்பானி போன்ற முதலாளிகளும் சரி தொழிலாளி வர்க்கமும் சரி சந்தையில் பொருட்களை வாங்கும்போது அவற்றின் மதிப்புக்குச் சமமான பணத்தைக் கொடுத்து வாங்குகிறார்கள். அவற்றைப் பயன்படுத்தி தங்களது சொந்த நுகர்வை நிறைவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது, தமது வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துகிறார்கள்.
3. தொழிலாளர்களின் நுகர்வு
ஓர் எளிய தொழிலாளி தனது வாழ்க்கையை நடத்த சந்தையில் சரக்குகளாக நாள்தோறும் வாங்க வேண்டிய பொருட்கள் (பால், காய்கறி முதலியன), வாரம் தோறும் வாங்க வேண்டிய பொருட்கள் (அரிசி, இறைச்சி முதலியன), மாதம் தோறும் வாங்க வேண்டிய பொருட்கள் (பேருந்துப் பயண அட்டை, வீட்டு வாடகை, செல்போன் ரீசார்ஜ் முதலியன), அவ்வப்போது வாங்க வேண்டிய பொருட்கள் (ஆடை அணிகலன்கள், மருத்துவச் செலவு, கல்விச் செலவு முதலியன), ஆண்டுக்கு ஒரு முறை வாங்க வேண்டிய பொருட்கள் எனப் பல வகைகள் உள்ளன.
- சில அவரது தனிப்பட்ட தேவைகளுக்கானவை (உணவு, உடை, இருப்பிடம் முதலியன)
- சில அவர் செய்யும் வேலையின் தன்மை தொடர்பானவை (உடல் உழைப்பாளிக்குத் தேவையான பொருட்கள் வேறு, மூளை உழைப்பில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான பொருட்கள் வேறு)
- பெரும்பகுதி அவரது குடும்பத்துக்குத் தேவையானவை
- இன்னும் ஒரு பகுதி அவர் செய்யும் வேலைக்குத் தேவையான கற்றலுக்கும் பயிற்சிக்கும் தேவையானவை.
இவை அனைத்தும் சேர்த்து, ஒரு எளிய தொழிலாளி குடும்பத்தோடு சமூக மனிதராக வாழவும் ஒரு தொழிலாளியாக உழைக்கவும் ஓர் ஆண்டுக்கு ரூ 3 இலட்சம் ஆவதாக வைத்துக் கொள்வோம்.
எளிய தொழிலாளியாக இல்லாமல் தேர்ச்சி பெற்ற தொழிலாளியாக இருந்தால் அவரது படிப்புக்கும் பயிற்சிக்கும் அவர் பணம் செலவிட்டிருந்தால், அதுவும் அவரது செலவில் சேரும். எடுத்துக்காட்டு – ஒரு பொறியாளர், ஒரு மருத்துவம், தொழில்நுட்ப தொழிலாளி, மென்பொருள் தொழிலாளி. அவர்களது வாழ்க்கைத் தேவையில் இந்த மதிப்புகளும் சேர்வதால் அவர்களது ஆண்டு செலவு ரூ 6 இலட்சம், ரூ 18 இலட்சம், ஏன் ரூ 60 இலட்சம் கூட இருக்கலாம்.
இந்தத் தொகை இருந்தால்தான் ஒரு தொழிலாளி தனது வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். அந்தத் தொகை அவருக்கு எப்படி கிடைக்கிறது? யார் அதைக் கொடுக்கிறார்கள்? எதற்காகக் கொடுக்கிறார்கள்? அதாவது, தொழிலாளி எந்தப் பொருளை விற்று பணத்தைப் பெறுகிறார்? மேலும், கூடுதல் கேள்வியாக சந்தையில் விற்கும் இந்தப் பொருட்களை எல்லாம் யார் விற்கிறார்கள்? யார் அதனை உற்பத்தி செய்தார்கள்?
இந்தக் கேள்விகளை இங்கே நிறுத்தி விட்டு, முதலாளிகளின் தரப்புக்கு வருவோம்.
4. உற்பத்தியைத் தொடங்கிக் கட்டுப்படுத்தும் முதலாளி வர்க்கம்
அம்பானி போன்ற முதலாளிகள் தங்களுக்கும் தங்களது குடும்பத்துக்கும் தேவையான பொருட்களை வாங்குவதோடு மட்டுமின்றி இன்னொரு வகையான பொருட்களையும் வாங்குகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களிடம் கூடுதல் பணம் இருக்கிறது, தொழிலாளி வர்க்கத்திடம் இருப்பதை விடப் பெருமளவு பணம் இருக்கிறது. தமது சொந்த வாழ்க்கைத் தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கான பணத்தை விடப் பெருமளவு பணத்தை வைத்திருக்கிறார்கள்.
அவர்களிடம் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? எதை விற்று அவர்கள் பணத்தைப் பெறுகிறார்கள்? இந்தக் கூடுதல் பெருமளவு பணத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?
இந்தக் கேள்விகள் அனைத்துக்குமான விடை ஒன்றாகவே அமைந்துள்ளது.
தங்களது கூடுதல் பணத்தை முதலாளிகள் மூலதனமாக மாற்றுகிறார்கள். அப்படி என்றால் அவர்கள் ஒரு பயனுள்ள பொருளை உற்பத்தி செய்து சந்தையில் விற்க வேண்டும். அதில் இலாபம் ஈட்டி மூலதனமாக முதலீடு செய்த பணத்தைப் பெருக்க வேண்டும். மூலதனம் என்பதன் பொருள் அதுதான். அதன் மதிப்பு அதிகரிக்க வேண்டும், அதாவது முதலாளிகள் முதலீடு செய்த பணம் அதிகப் பணமாக மாற வேண்டும். அப்போதுதான் அது மூலதனம் ஆகிறது.
எனவே, முதலாளிகள் சந்தையில் உற்பத்திக்கான பொருட்களை வாங்குகிறார்கள். அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் நூல் உற்பத்தி ஆலையை எடுத்துக் கொள்ளலாம். இது வாகன உற்பத்தி முதலாளிக்கும் பொருந்தும், செல்போன் உற்பத்தி முதலாளிக்கும் பொருந்தும், ஆயத்த ஆடை உற்பத்தி முதலாளிக்கும் பொருந்தும். அவர்கள் வாங்கும் பொருட்கள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், அனைவருமே பணத்தைக் கொடுத்து உற்பத்திக்கான அந்தப் பொருட்களை சந்தையில் வாங்குகிறார்கள் என்பது பொதுவானது.
அது உற்பத்திக்குத் தேவையான கட்டிடமாக இருக்கலாம், இயந்திரங்களாக இருக்கலாம் (ரிலையன்ஸ் பாலியெஸ்டர் நூலை உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களை வாங்கும்) கச்சாப் பொருட்களாக (ரிலையன்சின் நூல் ஆலைக்கு பாலியெஸ்டர் இழைகள்) இருக்கலாம். இவை ஒவ்வொன்றுக்கும் மதிப்பு உள்ளது. இவை ஒவ்வொன்றும் மனித உழைப்புச் செலுத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. எனவே, அவற்றுக்கு மதிப்பு உள்ளது. அந்த மதிப்புக்கு நிகரான பணத்தொகையைக் கொடுத்து முதலாளி அவற்றை வாங்குகிறார். இதை திருபாய் அம்பானியோ, முகேஷ் அம்பானியோ நேரடியாக தாங்களே செய்யலாம், அல்லது தமது ஊழியர்கள் மூலம் வாங்கலாம்.
அவற்றை மட்டும் வாங்கி வைத்தால் போதாது. எதுவும் உற்பத்தியாகி விடாது. முதலாளியின் பண மதிப்பு தானாக பெருகி மூலதனமாக ஆகிவிடாது. இதனுடன் இன்னொன்றைச் சேர்க்க வேண்டும். அதுதான் மனித உழைப்பு மூலம்தான் இந்த உற்பத்திக்கான அடிக்கூறுகள் வேறு ஒரு உற்பத்திப் பொருளாக மாற முடியும்.
தோழர் சிவக்குமார் மூலதனம் வாசிப்பு குழு