Tamil Marx

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் கட்டுரைகள்

இஸ்ரேல் அரசாங்கம் போரை விரும்பினாலும், பெரும்பாலான இஸ்ரேலியர்கள் போரை விரும்பவில்லை – சந்தோஷ்

இஸ்ரேல் அரசாங்கம் போரை விரும்பினாலும், பெரும்பாலான இஸ்ரேலியர்கள் போரை விரும்பவில்லை – சந்தோஷ்
  • PublishedApril 24, 2025

இஸ்ரேலியர்கள் போரின் தாக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் சிக்கல் குறித்து கவலைப்படுவதாகவும், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை விரும்புவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இஸ்ரேல் தனது சர்ச்சைக்குரிய பட்ஜெட்டை முன்வைத்த போது, ​​நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், “இது ஒரு போர் பட்ஜெட், கடவுள் விரும்பினால், இது வெற்றி பட்ஜெட்டாகவும் இருக்கும்” என்று கூறினார். இருப்பினும், பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட ஆய்வுகள் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் போரையோ அல்லது ‘வெற்றி பட்ஜெட்டையோ’ விரும்பவில்லை என்று கூறுகின்றன.

நிதியமைச்சர் போரை குறித்து பேசியது மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, இஸ்ரேல் இப்பகுதியில் 35,000 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பாலஸ்தீனத்தில் குறைந்த பட்சம் 18,000 தாக்குதல்களும் லெபனான் மீது 16,000 தாக்குதல்களும் அடங்கும்.

15 மாதப் போருக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தமானது கடந்த மாதம் இஸ்ரேல் ராணுவம் காசா முழுவதும் திடீர் வான்வழித் தாக்குதல்களை நடத்திய போது முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தம் முறிந்ததிலிருந்து காசாவில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய அரசாங்கம் குடிமக்களுடன் முரண்படுவதாக கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இஸ்ரேல் மக்களில் குறிப்பிடத்தகுந்த அளவு போர்நிறுத்தத்தை ஆதரிக்கின்றனர். ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கைக்கான சுயாதீன மையமான இஸ்ரேல் ஜனநாயக நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 72% இஸ்ரேலியர்கள் பிப்ரவரியில் ஹமாசுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளைத் இஸ்ரேல் தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பிப்ரவரி மாத ஆய்வில் இஸ்ரேலியர்களில் குறைந்தது பாதி பேர் அக்டோபர் 7 நடந்த தாக்குதலுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினர். பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 73% பேர் அவர் குறைந்தபட்சம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினர்.

நெதன்யாகுவிற்கு மக்களின் ஆதரவு குறைந்து வரும் நிலையானது இஸ்ரேலியர்களுக்கு  தங்கள் நாட்டு விவகாரங்களின் மீது அதிகரித்து வரும் அவநம்பிக்கையுடன் ஒத்துப்போகிறது. மார்ச் மாத ஆய்வில் பதிலளித்தவர்களில் 38% பேர் மட்டுமே எதிர்காலத்தில் “இஸ்ரேலின் ஜனநாயக நிலைமை” குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினர். 59% க்கும் அதிகமானோர் அதைப் பற்றி அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

இஸ்ரேலில் அந்த நாட்டின் பொருளாதாரம் குறித்தான அவநம்பிக்கையும் வளர்ந்து வருகிறது. பட்ஜெட் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், பதிலளித்தவர்களில் 33% பேர் மட்டுமே நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைமை குறித்து நம்பிக்கையுடன் இருந்தனர். 63.6% க்கும் அதிகமானோர் பொருளாதாரத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர். பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பிறகு, அந்த அவநம்பிக்கையாளர்களின் அளவு 72.7% ஆக அதிகரித்தது. உண்மையில், 65% க்கும் அதிகமானோர் இந்த பட்ஜெட் சில குழுக்களின் குறுகிய நலன்களுக்கு சேவை செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த பட்ஜெட் போரினால் ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்யும் அளவுக்கு கடன் அளவை குறைக்காது என்று இஸ்ரேல் வங்கியின் ஆளுநர் அமீர் யாரோன் கூறியுள்ளார். இஸ்ரேலின் நிதிப் பற்றாக்குறை 2024 இல் 8.2% ஆக அதிகரித்தது. இது 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் இருந்ததை அதிகமாகும்.

இந்த ஆண்டு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கான செலவு $29.7 பில்லியனாகும். இது அதன் பட்ஜெட்டில் மிக அதிக ஒதுகீடாகும். கடந்த ஆண்டு காசா மற்றும் லெபனானுடனான அதன் போர் நடவடிக்கைகளில் $31 பில்லியனை செலவிட்டது.

இஸ்ரேல் குறித்த சமீபத்திய OECD அறிக்கை, இராணுவச் செலவுகள் பிரச்சனைக்குரியது என்பதைக் குறிக்கிறது. ஏனென்றால் அது மற்ற வகையான பொதுச் செலவுகளுக்கு இணையாக உள்ளது. OECD நாடுகளில் பாதுகாப்பு அல்லாத செலவினங்களின் பட்டியலில் கடைசி ஐந்து நாடுகளில் இஸ்ரேல் இடம் பெற்றுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இஸ்ரேலின் சுகாதாரச் செலவுக்கு ஒதுக்குவது  5% மட்டுமே. இது OECD நாடுகளின் சராசரி அளவான 7% ஐ விடக் குறைவு. இதேபோல், ஒரு மாணவருக்கு இடைநிலைக் கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான அதன் செலவும் OECD சராசரியை விடக் குறைவு.

இஸ்ரேல் மீண்டும் இனபப்டுகொலைத் தாக்குதல்களைத் துவங்குவதை சவுதி அரேபியா, கத்தார், ஈரான் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன. அமெரிக்கா கண்டிக்கவில்லை. இருந்தாலும், பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகள், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது அதிகமான அமெரிக்கர்கள் இஸ்ரேலைப் பற்றி எதிர்மறையான  எண்ணத்தை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

 

இந்த கட்டுரை The Hindu 15 April 2025 நாளிதழில் Data Point பகுதியில் வெளியானது.

தமிழில் – தோழர் சந்தோஷ்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *