Tamil Marx

கட்டுரைகள்

ஆரோக்கியமான உணவை பெற முடியாத நிலையில் 300 கோடி மக்கள்

ஆரோக்கியமான உணவை பெற முடியாத நிலையில் 300 கோடி மக்கள்
  • PublishedApril 15, 2025

போதுமான கலோரிகளைக் கொண்ட உணவுகளை விட ஆரோக்கியமான  உணவின் விலை மிக அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, மூன்று பில்லியன் (300 கோடி) மக்கள் ஆரோக்கியமான உணவை பெற முடியாத நிலையில் உள்ளனர்

ஆரோக்கியமான உணவு என்பது நாளொன்றுக்கு ஒரு மனிதனுக்கு தேவையான கலோரிகள் கொண்ட உணவு உண்பதை விட ஒவ்வொரு நபரின் ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான  ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும் . நல்ல ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்களையும் பெற நமக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை.

இந்த உணவு முறைக்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அத்தியாவசிய கலோரிகள் நிறைந்த உணவின் விலையை விட அத்தியாவசிய உணவுக்கான விலை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.  உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நிலைமை இதுதான். இதன் விளைவாக 300 கோடி மக்கள் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை உணவுக்காகச் செலவிட்டாலும், ஆரோக்கியமான உணவை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

ஆரோக்கியமான, சத்தான உணவை உண்ண வேண்டியது மிக அடிப்படையான மனிதத் தேவைகளின் ஒன்றாகும். இருப்பினும் கோடிக் கணக்கான மக்கள் இது கிடைக்காமல்   இருக்கிறார்கள். அவர்கள் ‘மறைக்கப்பட்ட பசி’, அதாவது  மிகக் குறைந்த இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ அல்லது அயோடின் போன்ற நுண்ணூட்டச்சத்துத் தேவைகளால் பாதிக்கப்படுகின்றனர்

சத்தான உணவை ஒருவர் சாப்பிடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக பெரும்பாலான மக்கள் அதை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். முதலில் ஒரு மனிதனின் உடலுக்கு தேவையான அடிப்படையான கலோரிகளை போதுமான அளவு பெறுவது. இந்த கலோரி உணவு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பெரும்பாலான நாடுகளில்  மலிவான மாவுச்சத்துள்ள உணவுகள் மற்றும் தானியங்களாக மட்டுமே இந்த கலோரி உணவுகள் கிடைக்கின்றன.  சோளம் அல்லது அரிசிமாவு போன்றவற்றில் இருந்து இந்த கலோரி கிடைக்கிது. இது மற்ற அனைத்து முக்கிய ஊட்டசத்துக்கள் இல்லாத ஒரு உணவாகும். ஏழை நாடுகளில் உள்ள உணவுகளை பொறுத்தவரை, மக்கள் தங்கள் கலோரிகளில் பெரும்பகுதியை மாவுச்சத்துள்ள உணவுகளிலிருந்து மட்டுமே பெறுகிறார்கள்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ‘உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை’ அறிக்கையின் படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான செலவில் போதுமான ஆற்றல் கொண்ட உணவை உண்ண முடியும். ஆனால் உணவுக்கான செலவுகளும்  அடிப்படை உணவு அல்லாத தேவைகளுக்கான செலவுகளும் ஒரு நபரின் வருமானத்தை விட அதிகமாக இருக்கும்போது ஆரோக்கியமான உணவை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கிடையே உணவுச் செலவை ஒப்பிட்டுப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள், 2021 ஆம் ஆண்டில் 1.1 பில்லியன் மக்களால் மிகவும் அடிப்படையான ஆற்றலுக்கு போதுமான உணவை வாங்க முடியாத நிலை உள்ளது என்று மதிப்பிட்டுள்ளனர் . இது உலக மக்கள் தொகையில் 14% ஆகும். ஊட்டச்சத்தின் அடிப்படையில் ஒப்பிட்டால் இவர்கள் அனைவரும் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன்  உள்ளனர்.

மக்களுக்கு உண்மையிலேயே தேவைப்படுவது பலவகையான சத்தான உணவு. போதுமான கலோரிகளை பெறுவது முக்கியம், ஆனால் ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட வாழ்க்கையை வாழ அது போதுமானதாக இல்லை. இது தானியங்கள் மற்றும் மாவுச் சத்துள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள் மற்றும் நமது உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

பெரும்பாலான நாடுகள் ‘உணவு வகைகளின் அடிப்படையில் ஆரோக்கியமான உணவுக்கான வழிகாட்டுதல்களை’ உருவாக்கியுள்ளன. அவை ‘ஆரோக்கியமான உணவு’ எப்படி இருக்கும் என்பதற்கான பரிந்துரைகளை வழங்குகின்றன. சமநிலையான உணவை உண்ண வேண்டும் . தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் ஆகியவை நீண்ட கால ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகளாக கருதப்படுகின்றன. இதற்கான வழிகாட்டுதல்களும் இதில் அடங்கும்.

தேசிய உணவு அடிப்படையில் உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். உலகளாவிய ‘ஆரோக்கியமான உணவு’  என்று எதுவும் இல்லை, குறிப்பாக மக்கள் சாப்பிடுவதில் வலுவான கலாச்சார வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது இது எழுகிறது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் பிராந்திய ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் உணவு வகைகளை பட்டியலில் வைத்துள்ளனர்.

ஆரோக்கியமான உணவு, போதுமான கலோரி கொண்ட உணவை விட மிகவும் அதிக விலையில்  உள்ளது. ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதற்கு உலகம் முழுவதும் சராசரியாக ஒரு நாளைக்கு $3.67 (ரூ.306.30)  செலவாகிறது. இத்தகைய அதிக விலையின் காரணமாக தான் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

உலகின் ஏழ்மையான பல நாடுகளில்  குறிப்பாக துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகள் முழுவதும் – பெரும்பாலான மக்களுக்கு இந்த விலை கொடுத்து 3 வேளையும் சாப்பிட முடியாது. பல நாடுகளில், ஆரோக்கியமான உணவு 80% க்கும் அதிகமானவர்களுக்கு கிடைக்காத ஒன்றாகவே உள்ளது.

ஆரோக்கியமான உணவின் விலையை உலகெங்கிலும் உள்ள நாடுகளின் சராசரி வருமானத்துடன் ஒப்பிடும்போது, ஏழ்மையான நாடுகளில் ஆரோக்கியமான உணவின் விலை சராசரி வருமானத்தை விட அதிகமாக உள்ளது. இந்த நாடுகளில் ஒரு சராசரி நபர் தங்கள் பணத்தை உணவுக்காக செலவிட்டாலும் அவருக்கு ஆரோக்கியமான உணவை வாங்கும் நிலமை இல்லாமல் தான் உள்ளது. இந்த நிலையை எதிர்கொள்ளும் முக்கியமான நாடாகவும் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா உட்பட இத்தகைய நாடுகளில் உள்ள மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க தங்கள் வருமானம் முழுவதையும் செலவிட வேண்டும்.

பணக்கார நாடுகளிலும் கூட சராசரி வருமானம் உணவு செலவுகளை விட மிக அதிகமாக தான் உள்ளது. இந்த நாடுகளில் சராசரி வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் வருமானத்தில் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியுடன் ஆரோக்கியமான உணவை வாங்க முடியும். பிரான்சில் சராசரி நபர் தங்கள் வருமானத்தில் 6%,  டென்மார்க்கில், 5% மட்டுமே உணவுக்காக, செலவிட வேண்டும். இந்த ஒப்பீடு காட்டுவது என்னவென்றால், உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்னும்  ஆரோக்கியமான உணவை பெற முடியாத நிலை உள்ளது என்பதே.

நமது வருமானத்தில் அனைத்தையும் அல்லது பெரும்பாலானவற்றை உணவுக்காக செலவிட முடியாது. ஏனெனில் பிற அத்தியாவசிய பொருட்களுக்கும் நாம் செலவிட வேண்டிய தேவை உள்ளது. இத்தகைய சூழலில் தான் உலகம் முழுவதும் சுமார் 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவுக்கு செலவு செய்ய முடியாமல் உள்ளனர்.

 

தோழர் சந்தோஷ்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *