முக்கிய தொழில்நுட்பங்களில் வளர்ந்த முன்னணி நாடாக உள்ளது சீனா
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் மாதத்தில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனவும் உக்ரைனுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவரவும் தீவிரம் காட்டினர். உக்ரைனுடனான ஒப்பந்தத்தில் அந்நாட்டின் கனிமவளங்கங்களை கைப்பற்றும் திட்டமும் உள்ளது.
தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தேவையான டிஸ்ப்ரோசியம், நியோடைமியம், ஸ்காண்டியம் மற்றும் இட்ரியம் போன்ற அரிய கனிமங்கள் அதிகளவு உள்ள இடமாக கிரீன்லாந்து உள்ளது. (வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு தேவையான பதினேழு அரிய கனிமங்கள் அங்குள்ளது.) கிரீன்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள டென்மார்கிற்கு சொந்தமான பகுதி. இதனால் இயல்பாகவே அப்பகுதி ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) விதிகளுக்கு உட்பட்டது. 2011 இல், ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய மூலப்பொருட்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் இந்த அரிய கனிமங்களும் அடங்கும். அதன் பிறகு 2023 இல் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய மூலப்பொருட்களுக்கான சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டம் முக்கியமான கனிமங்கள் மற்றும் உலோகங்களின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஐரோப்பிய கண்டத்திற்கான இறக்குமதியை ஊக்குவித்தது.
கனிமங்களை கைப்பற்றும் திட்டம்
இதே நேரத்தில் அபடைட் முதல் ஜிர்கோனியம் வரை மற்றும் லித்தியம் முதல் டைட்டானியம் வரை என அரிய கனிமங்கள் உக்ரைனில் இருகின்றது என தெரியவந்தது. உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த ராணுவ உதவிக்கு கட்டணமாக உக்ரைனில் இருந்து குறைந்தபட்சம் 500 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கனிமங்களை கொடுக்க வேண்டும் என டிரம்ப் சொன்னார். நான் கனிம வள பாதுகாப்பை விரும்புகிறேன் என்றும் டிரம்ப் பிப்ரவரி மாத துவக்கத்தில் நிருபர்களிடம் சொன்னார்.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்களுக்கு தேவையான அரிய கனிமங்களில் கிட்டத்தட்ட முழு அளவையும் தற்போது சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்கின்றன.
2024 டிசம்பர் இறுதியில் சீனாவின் தொழில்நுட்பத் துறை மீது அமெரிக்கா கடுமையான தடைகள் மற்றும் வரிகளை விதித்தது. இதற்கு பதிலடியாக சீன அரசாங்கம் அமெரிக்காவுக்கு ஆண்டிமனி, காலியம், ஜெர்மானியம் உளிட்ட சில கனிமங்களை (40 ஜிகாபாஸ்கல்கள் அல்லது ஜிபிஏக்களுக்கு மேல் கடினத்தன்மை கொண்டவை ) ஏற்றுமதி செய்வதை தடை செய்தது. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமையிலான அரசு அமெரிக்காவில் இருந்து உயர்-பட்டைவழி நினைவக சிப்களை (High Bandwidth Memory) சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தியது.
இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு மற்றும் சிப் தயாரிப்பு உபகரணங்கள் உற்பத்தியில் சீனாவின் வளர்ச்சியை அமெரிக்கா தடுக்க முயற்சித்தது. சீனா உலக நாடுகளுடன் வைத்துள்ள பொருளாதார உறவுகள் மேற்குலக நாடுகளில் ஒரு நெருக்கடியை உருவாகியுள்ளது. இதனால்தான் கிரீன்லாந்து மற்றும் உக்ரைனின் கனிமவளங்களை கைப்பற்றுவது குறித்து டிரம்ப் பேசியுள்ளார்.
ரஷ்யா-சீனாவை பிரிக்கும் திட்டம்
அமெரிக்காவின் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் உக்ரைன் போரை ஏன் நிறுத்த விரும்புகிறார்கள் என புரிந்துகொள்ள முடியும். இந்த போரில் அமெரிக்கா எதையும் பெறவில்லை, இது ஐரோப்பிய முதலாளித்துவ வர்கத்தின் கௌரவம் தொடர்பான விஷயமாக மாறிவிட்டது. ரஷ்யாவுடனான உறவுகளை டிரம்ப்பால் மீண்டும் துவங்க முடிந்தால் அவர் ஒப்பந்தத்தின் படி உக்ரைனில் உள்ள கனிமங்கள் மீதான உரிமைகளை பயன்படுத்துவதற்கும், கிரீன்லாந்தின் வளங்களை (நேரடியாக அமெரிக்காவுடன் ஆக்கிரமிப்பதற்கு பதிலாக) கட்டுப்படுத்தவும் அதை பயன்படுத்தலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவுடனான ரஷ்யாவின் கூட்டணியை பலவீனப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கும். இதுவே ‘ரிவர்ஸ் கிஸிஞ்சர்’ திட்டமாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் தலைமையிலான ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஹென்றி கிஸிஞ்சர் 1960களின் பிற்பகுதியில் சோவியத் யூனியனை தனிமைப்படுத்துவதற்காக சீனாவுடன் அமெரிக்கா நட்பை உருவாக்க வேண்டும் என வழிகாட்டினார். இப்போது டிரம்பின் ரிவர்ஸ் கிஸிஞ்சர் அணுகுமுறை ரஷ்யா-சீனா உறவுகளை உடைத்து சீனாவை தனிமைப்படுத்த முயல்கிறது.
2022 பிப்ரவரி 4 அன்று, சீனா மற்றும் ரஷ்யா எல்லையற்ற நட்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கையெழுத்திட்ட இருபது நாட்களுக்குப் பிறகு ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. போர் பற்றி கவலைகள் இருந்தபோதும் சீனா போரில் ரஷ்யாவை முழுமையாக ஆதரித்தது. எனவே அமெரிக்கா திட்டமிட்டு வருகிற ரிவர்ஸ் கிஸிஞ்சர் திட்டத்தில் ரஷ்யா – சீனா உறைவை உடைப்பதன் சாத்தியம் குறைவே. இருப்பினும் ரஷ்ய பெருமுதலாளிகளில் ஒரு பிரிவினர் மேற்குலக நாடுகளுடன் மீண்டும் நல்லுறவை துவங்க ஆர்வமாக உள்ளனர்.
உக்ரைனில் போர் நிறுத்தத்தை கொண்டு வருவதால் அமெரிக்காவுக்கு இழப்பு எதுவும் ஏற்படாது. உலகப் பொருளாதாரத்தின் மீது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு ரஷ்யாவும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இல்லை. எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிமங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் மூலப்பொருள் ஏற்றுமதியாளர் தான் ரஷ்யா. மேலும் ரஷ்யா அணு ஆயுதங்கள் மூலம் தன்னைத் தாக்காது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும், ஏனென்றால் அது தற்கொலைக்கு சமமானது. அதே போல ஐரோப்பிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களால் தனது நாட்டுக்கு அச்சுறுத்தள் ஏற்படக்கூடாது என்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை ரஷ்யா எதிர்பார்க்கின்றது என்பதும் அமெரிக்காவுக்குத் தெரியும்.
சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம்
சீனாவை ஒரு தீவிரமான அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதுகின்றது. டிரம்ப் வரி விதிப்புகளையும், ஆக்கிரமிப்பு திட்டங்களையும் அறிவிக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே ஒரு சிறிய சீன நிறுவனம் டீப்சீக் என்ற இயந்திர கற்றல் செயற்கை நுண்ணறிவை வெளியிட்டது. இது தொழில்நுட்பம் மற்றும் கணிதம் தொடர்பான வேலைகள் உட்பட பல வகைகளில் அமெரிக்க நிறுவனத்தின் சாட்ஜிபிடியை விட கணிசமான அளவில் சிறப்பாக செயல்படுகிறது.
சமூக ஊடக தளமான சீன செயலி டிக்டாக்கை தடை செய்ய உள்ளதாக அமெரிக்கா தெரிவித்ததை தொடர்ந்து, அச்செயலியின் அமெரிக்க பயனர்கள் டிக்டாக் செயலிக்கு பதில் மேற்கத்திய சமூக ஊடகத்திற்கு மாறாமல் மீண்டும் சீனாவின் சியாவோங்ஷு என்ற ரெட் நோட் செயலியை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
சீனாவின் அணுக்கரு இணைவு சாதனமான எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர்கண்டக்டிங் டோகாமாக் (EAST), 2023 இல் 403 வினாடிகள் வரை நிலையான உயர்-கட்டுப்பாட்டு பிளாஸ்மா நிலையை உருவாக்கியது. இதுவே தற்போது 1,066 வினாடிகள் (சுமார் 17.77 நிமிடங்கள் ) வரை இந்த நிலை நீடிக்கின்றது என பிசிக்ஸ் வேர்ல்ட் தளம் ஒரு செய்தியை குறிப்பிட்டது. இந்த தொழில் நுட்ப வளர்ச்சி அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் மிக முக்கியமான மைல்கல்லாகும். இந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக கதிரியக்க கழிவுகள் இல்லாமல் அதிகளவு சுத்தமான ஆற்றலை சீனாவால் உற்பத்தி செய்ய முடியும்.
சீனாவின் திட்டமிட்ட வளர்ச்சி
இந்த வளர்சிகள் தற்செயலானவை அல்ல, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தின் நீண்டகால திட்டமிடலால் உருவானது. 1978 இல் முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்த காலத்திலிருந்து, சீன பொருளாதாரத்திற்கு பயன் இல்லாத வெளிநாட்டு மூலதனம் மற்றும் தொழில்துறையை தனது நாட்டிற்குள் அனுமதிப்பதில் சீனா எச்சரிக்கையாகவே இருந்துள்ளது. தனது சந்தையை வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு பலனாக தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பரிமாற்றம் செய்து கொண்டது சீனா.
குறைந்த ஊதியத்தில் அதிக தொழிலாளர் சக்தியை விரும்பிய பல வடக்கு உலக நாடுகளின் நிறுவனங்கள் இந்த பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்டன. சீன அரசாங்கம் தனது உயர் கல்விகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது. தனியார் நிறுவனங்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கியது. மேலும் ஏற்றுமதிகளிலிருந்து கிடைக்கும் உபரியை நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தியது. இத்தகைய திட்டமிடப்பட்ட முன்னேற்றங்களால் சீனாவின் தொழில்துறை உள்நாட்டு உற்பத்திக்கு பழைய தொழில்நுட்பங்களை அல்லது தொழிலாளர்களின் அதிக உடல் உழைப்பை மட்டுமே சார்ந்து இருக்காமல் உற்பத்தி சக்திகளை மேம்படுத்துவதற்கும் உதவியது.
2023 செப்டம்பரில் ஹெயிலோங்ஜியாங் மாகாணத்திற்கு ஜனாதிபதி ஜி ஜின்பிங் சென்றிருந்த போது “புதிய தரமான உற்பத்தி சக்திகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இந்த சொல்லை பயன்படுத்துவதற்கு முன்பே, இந்த யோசனை சீனாவின் புதிய தொழிற்சாலைகளில் (மனிதர்கள் இன்றி முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் தொழிற்சாலைகள்) கொடுவரப்பட்டது.
2024 மார்ச்சில் இரண்டு கூட்டங்கள் நடந்தது, அப்போதே “புதிய தரமான உற்பத்தி சக்திகள்” என்ற சொற்றொடர் சீன அரசின் வேலை அறிக்கையில் எழுதப்பட்டது. 2024 ஜூலையில் நடந்த பிளினத்தில், புரட்சிகரமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உற்பத்தி சக்திகளில் புதுமையை புகுத்துவது, தொழிற்துறையில் தீவிரமாக மாற்றதை கொண்டு வருவதுடன் தொழிற்சாலைகளை தீவிரமாக மேம்படுத்துவது என்ற கருத்தை தீவிரப்படுத்தியது.
தொழில் நுட்ப போட்டியில் தோற்ற அமெரிக்கா
ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் 2001 இல் நிறுவப்பட்டு ஆஸ்திரேலிய ராணுவத்தால் நிதியளிக்கப்படும் ஆஸ்திரேலிய கொள்கை வடிவமைப்பு நிறுவனம் ஒரு தொழில்நுட்ப கண்காணிப்பு கருவியை உருவாக்கியுள்ளது. அந்த கருவி உலகவில் அறுபத்து நான்கு முக்கியமான தொழில்நுட்பங்கள் பற்றிய பதிவுகளை வைத்திருக்கிறது.
2024 ஆகஸ்டில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 21 ஆண்டுகள் ஆய்வு செய்து முக்கியமான தொழில் நுட்பங்களின் வளர்ச்சியில் எந்தெந்த நாடுகள் முன்னணியில் உள்ளன என்பதை தெரிவித்துள்ளது. 2003 மற்றும் 2007 க்கு இடையில், 64 தொழில்நுட்பங்களில் சுமார் 60 தொழில்நுட்பங்களில் அமெரிக்கா முன்னணியில் இருந்தது. அப்போது சீனா வெறும் 3 தொழில்நுட்பங்களில் மட்டுமே முன்னணியில் இருந்தது.
2019 – 2023 க்கு இடையில் 64 தொழில்நுட்பங்களில் 7 இல் மட்டுமே அமெரிக்கா முன்னணியில் இருந்தது. சீனாவோ 57 தொழில்நுட்பங்களில் முன்னணியில் இருந்தது. மேம்பட்ட குறை கடத்தி (செமிகண்டக்டர் சிப் தயாரித்தல்), புவியீர்ப்பு உணரிகள், உயர் செயல்திறன் கொண்ட கணினி, குவாண்டம் உணரிகள், விண்வெளிக்கு ஆராய்ச்சிக்கு தேவையான ஏவுதல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் சீனா முன்னணியில் உள்ளது.
அமெரிக்காவோ அணு கடிகாரங்கள், மரபணு பொறியியல், அணு மருத்துவம் மற்றும் கதிரியக்க சிகிச்சை, குவாண்டம் கணினி, சிறிய செயற்கைக்கோள்கள், தடுப்பூசிகள், நோய் தடுப்பு மற்றம் குணப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. வளர்ச்சிக்காக சீனாவின் அதிகளவு முதலீடுகள் மற்றும் பல ஆண்டுகால திட்டமிடல் இப்போது பலனளிக்கிறது என்று அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
புதுமைகளுக்கான அர்ப்பணிப்பு சீன சமூகம் முழுவதும் பரவியுள்ளது. ஷாங்காயில் உள்ள லிங்காங் என்ற புதிய பகுதியில் நிறுவப்பட்டுள்ள உள்ளூர் அரசாங்கம் புதிய தரமான உற்பத்தி சக்திகள் மூலம் தொழில்துறை கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்த மிக வேகமான கணினி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு தொழில்துறை பகுதிக்கான கொள்கைகளை வகுத்துள்ளது.
சீனா திட்டமிட்டு வளர்ந்த இக்காலக்கட்டதில் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் அறிவியல் வளர்ச்சிக்கான நிதிகளை அதிகமாக வெட்டியது. “சீன தொழில்நுட்ப ஆதிக்கத்தின் வாய்ப்பை இந்த உலகம் தீவிரமான விசயமாக எடுத்துக்கொண்டு இப்போதே தயாராகத் துவங்க வேண்டும்” என்ற தலைப்புடன் சாந்தம் ஹவுஸ் (chantham House) என்ற இணையதளம் 2025 ஜனவரி மாத இறுதியில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. தலைப்பில் அமெரிக்கா என நேரடியாக கூறாமல் ‘உலகம்’ என மொத்தமாக குறிப்பிட்டது தான் அந்த கட்டுரையில் சுவாரஸ்யமான விசயம். ஏனென்றால் ‘மிகவும் தீவிரமான சூழ்நிலையில், அமெரிக்காவை சீனாவால் விரைவாக முந்திவிட முடியும்’ என்று கட்டுரையாளர் தனது கட்டுரையில் கவலைபட்டுள்ளார்.
மறைந்த சிங் வம்ச கவிஞரும் தூதருமான ஹுவாங் ஜுன்சியன் (1848-1905) 1891 இல் ஈபிள் கோபுரத்தின் பார்வை காட்சியகத்திற்கு மின்தூக்கி மூலம் சென்றார். அங்கிருந்து அவர் பார்த்து அனுபவித்த அசாதாரண காட்சிகளை “ஈபிள் கோபுரத்தில் ஏறும்போது ” என்ற தலைப்பில் கவிதையாக எழுதினார். “உலகின் மிகவும் வளமான லட்சகணக்கான ஏக்கர் நிலங்களை” அங்கிருந்து பார்த்தார். இந்த காட்சியை அனுபவிக்க அவருக்கு உதவிய தொழில்நுட்பம் அவரை கவர்ந்தாலும், தரையில் இருந்த விஷயங்களால் அவர் அதில் குறைவாகவே ஈர்க்கப்பட்டார்:
பழங்காலத்தில் ஐரோப்பா முழுவதும் போர்களமாக இருந்தது.
அவர்கள் போரை விரும்புபவர்கள் எளிதில் சமரசமாக மாட்டார்கள்.
ஆறு பெரிய பேரரசர்கள் இன்றும் கண்டத்தை பிரிக்கிறார்கள்,
ஒவ்வொருவரும் நாங்கள் தான் உலகின் மிக வலிமையான தலைவர் என்று பெருமை பேசுகிறார்கள்.
இந்த நபர்கள் நத்தை ஓட்டில் உள்ள மன்னர்களைப் போல உள்ளனர்.
(தங்களை பற்றி மிகையாக மதிப்பிடுகிறார்கள்)
அவர்கள் வெற்றிகளையும் தோல்விகளையும் கணக்கிடுவதில் தங்கள் நேரத்தை வீணடித்தனர்.
வரி விதிப்புகள், ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள், அணு ஆயுதங்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் என இன்றும் போர்க்களத்தில் பேசப்படும் வார்த்தைகள் பெருமளவு மாறவில்லை. கொரோனா தொற்று நோய் பரவலின் போது, இந்தியா போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளிடம் இருந்து “மோதலை விட ஒத்துழைப்பு” என்பது முக்கியம் என்பது போன்ற வார்த்தைகள் முக்கியமானதாக இருந்தது. அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை முடக்கவோ, பினோக்கி செல்ல வைப்பதற்கோ முயற்சிப்பதை விட, பூமியின் நன்மைக்காக சீனாவுடன் ஒத்துழைக்க முடிவு செய்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்.
Tricontinental இணையத்தில் விஜய் பிரசாத் எழுதிய China has already Become the Leader in Advanced Critical Technologies என்ற செய்தி மடலின் தமிழ் மொழிப்பெயர்ப்பு.
தமிழில் : சேது சிவன்