ஜெர்மன் இளைஞர்களிடையே தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி அரசியல் போக்குகளின் வளர்ச்சி
ஜெர்மனியில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த தேர்தல் முடிவு, தீவிர வலதுசாரி மற்றும் பிற்போக்குவாதி கட்சிகள் வளர்ந்துள்ளதை தெளிவாகக் காட்டுகின்றது. அதே நேரத்தில், இடதுசாரிகளும் மக்கள் ஆதரவுடன் வளர்ந்துள்ளனர் என்பதை இது காட்டுகின்றது.
இத்தேர்தலில், பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU) அதன் கூட்டணிக் கட்சியான கிறிஸ்தவ சமூக ஒன்றிய (CSU) கட்சியுடன் இணைந்து வெற்றி பெற்றுள்ளது. தீவிர வலதுசாரி கட்சியான, குடியேற்ற எதிர்ப்பு ஜெர்மனிக்கான மாற்று (AfD) கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னாள் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மூன்றாவது இடத்தில் உள்ளது. இடதுசாரி கட்சி என்ற தோற்றத்தில் இயங்கி வரும் பசுமைக் கட்சி (Green Party) நான்காவது இடத்தையும், இடதுசாரிக் கட்சியான டை லிங்கே (Die Linke) ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இளைஞர்களிடையே தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி ஆதரவு
இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெளியான சில அறிக்கைகள், ஜெர்மனியில் குறிப்பாக 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி அரசியல் என இரண்டாகப் பிரிந்து நிற்பதை வெளிக்காட்டியுள்ளது.
டிமாப் (Dimap) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. குறிப்பாக, வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 25 சதவீதமானோர் இடதுசாரிகளையும், 21 சதவீதமானோர் தீவிர வலதுசாரிகளையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜெர்மனியில் தீவிர வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகளுக்கு இடையிலான கருத்து மோதல் மற்றும் அரசியல் பிரச்சாரத்தின் தாக்கத்தை பிரதிபலிக்கின்றது.
பெண்கள் மற்றும் ஆண்களிடையே வலதுசாரி இடதுசாரி ஆதரவு
இத்தகைய அரசியல் போக்கு பெண்கள் மத்தியிலும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் செயல்படும் தலைமுறை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறுவனரும் மனோவியல் நிபுணருமான ருசிகேர் மாஸ் கூறியபோது, வாக்களிக்கும் நடைமுறையைப் பார்க்கும் போது, இளம் ஆண்கள் தீவிர வலதுசாரிகளான குடியேற்ற எதிர்ப்பு ஜெர்மனிக்கான மாற்று (AfD) கட்சிக்கும், பெண்கள் இடதுசாரிகளுக்கும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து ஜெர்மனிக்கு வரும் மக்களால் ஆபத்து உருவாகும் என குடியேற்ற எதிர்ப்பு ஜெர்மனிக்கான மாற்று கட்சி (AfD) தூண்டிவிட்ட இனவாத அரசியல், ஆண்கள் மத்தியில் மாற்றத்தை உருவாக்கி இனவெறியைத் தூண்டியுள்ளது. மேலும், அதற்கு அக்கட்சி தீர்வைத் தரும் என செய்த பிரச்சாரம் அவர்களுக்கு இளைஞர்களின் வாக்கைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
அதேபோல, தீவிர வலதுசாரிகளும் பிற்போக்குவாதிகளும் வெற்றி பெற்றால், அது பெண்களின் உரிமைகளையும் பன்முகத்தன்மையும் கேள்விக்குறியாகும் என்ற அச்ச உணர்வு பெண்கள் மத்தியில் இருந்ததாகவும், இதனால் அவர்கள் இடதுசாரிகளைத் தேர்வு செய்ததாகவும் ருசிகேர் மாஸ் தெரிவித்துள்ளார். இந்த தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி ஆதரவு போக்கு, 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் அதிகமாக இருந்தது போல, பிற தலைமுறையினரிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசுமைக் கட்சியின் வீழ்ச்சி இடதுசாரிகளின் வளர்ச்சி
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும், சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் பசுமைக் கட்சி நடத்தி வந்த போராட்டங்களே, 2021 தேர்தலில் அவர்களுக்கு 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் இருந்து 23 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காததாலும், கொள்கைகளை முறையாகப் பின்பற்றாததாலும், இந்த தேர்தலில் அவர்கள் வெறும் 10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
அதாவது, தங்களின் சொந்த அடையாளங்களை வளர்த்துக்கொள்ளாததால், லிபரல்கள் என அழைக்கப்படும் தாராளவாதிகளான பசுமைக் கட்சி மற்றும் முன்னாள் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகியவை தோல்வியைச் சந்தித்துவிட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார பிரச்சனைகளின் தாக்கம்
ஜெர்மன் ராணுவப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை ஆராய்ச்சியாளராக உள்ள ஜாஸ்மின் ரிதில் கூறியபோது, தீவிர வலதுசாரிக்கு மாற்று நாங்கள்தான் என இடதுசாரிகள் காட்டினர். குறிப்பாக, கொரோனா பொது முடக்க காலத்தில், 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களை சமூகப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இடதுசாரிகள் அணிதிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல், பொது முடக்க காலத்தில் இந்த இளைஞர் பிரிவினர் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இதனை இடதுசாரிகள் அடையாளப்படுத்தினர். ஆனால், பசுமைக் கட்சியினர் இதில் தோல்வியடைந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, பசுமைக் கட்சியினரும், சமூக ஜனநாயகக் கட்சியினரோடு கூட்டணி அரசாங்கத்தில் பங்கேற்காத காரணத்தால், அவர்களை விட இடதுசாரிகள் தீவிரமாக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வர முடிந்தது.
இளைஞர்களை ஈர்க்க சமூக ஊடகங்களில் பிரச்சாரம்
“ஜெர்மனியில் இளைஞர்கள்” என்ற ஆய்வின் இயக்குனர் கிளாஸ் ஹர்ரெல்மேன், 14 மற்றும் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் கணக்கெடுப்பின் அடிப்படையில், பணவீக்கம், போர் தீவிரமாவது பற்றிய பயம், ஜெர்மனியில் உருவாகியுள்ள வீடுகள் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைவது போன்ற அடிப்படைப் பிரச்சினைகள், காலநிலை நெருக்கடியை விட மிகவும் மோசமாக இருப்பதாகவும், இந்த நிலை மாற வேண்டும் என இளைஞர்கள் விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல இளைஞர்கள் ஏன் பசுமைக் கட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவில் இருந்து விலகி, இடதுசாரிகளுக்கு ஆதரவாகத் திரும்பியதற்கு இதனைக் காரணமாகத் தெரிவித்துள்ளார். மேலும், சமூக ஊடகப் பிரச்சாரங்களும் இளம் வாக்காளர்கள் மத்தியில் இடதுசாரிகள் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு ஜெர்மனிக்கான மாற்று (AfD) ஆகிய இரண்டு கட்சிகளும் அதிக வாக்குகள் பெறக் காரணமாக இருந்தது எனக் குறிப்பிடுகின்றார்.
-சேது சிவன்