Tamil Marx

கட்டுரைகள்

சிவப்பு புத்தக தினம் எதற்கு ?

சிவப்பு புத்தக தினம் எதற்கு ?
  • PublishedFebruary 20, 2025

“உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் நாம் இழப்பதற்கு எதுவுமில்லை அடைவதற்கு ஒரு பொன்னான உலகம் உள்ளது”. 177 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு இளைஞனின் முழக்கம் இது. அந்த முழக்கத்தின் நோக்கத்திற்கான பயணம் இன்று தொடர்கின்றது.

ஏன் புத்தகங்களுக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டும்?

புத்தகம் வாசிப்பதென்பது பலருக்கும் அன்றாட பழக்க வழக்கங்களில் ஒன்றுதானே ? அதற்கென்று தனியாக ஒரு  நாள் கொண்டாட வேண்டுமா ? ஆம், வேண்டும். நாம் பெற்ற அனுபவங்களை எப்படி நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பது? அதற்கு தான் புத்தகங்கள் தேவைப்படுகின்றன.

அதிலும் மார்க்சியம் சொல்வது போல முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தில் உள்ள இந்த உலகத்தை, தொழிலாளர்கள் தலைமையிலான உலகமாக மாற்றுவதற்கான  பணியில், அதாவது தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான ஒரு ஆட்சியை அமைக்கும் பணியில் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக வாசிப்பை ஒரு இயக்கமாக கொண்டு செல்வது தான் சிவப்பு புத்தக தினம்.

பல கண்டங்களை தாண்டி நாடு இனம் மொழி ஜாதி ஆண் பெண் என எந்த பாகுபாடும் இன்றி மார்க்சிய கருத்துகளையும் மார்க்சிய சித்தாந்தங்களையும் மக்களிடம் கொண்டு கொண்டு போய் சேர்ப்பது தான் இந்த தினத்தின் நோக்கம். இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதுவுடைமை சித்தாந்தத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

புரட்சிக்கு விதை

1848 பிப்ரவரி 21 ,லண்டனில் இரண்டு இளைஞர்கள் ஒரு சிவப்பு வண்ண அட்டை போடப்பட்ட ஒரு 23 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாது இந்த புத்தகம் தான் உலகையே புரட்டிப் போடப் போகிறது என்று, காரல் மார்க்சும்,ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் இந்த புத்தகம் தான்.

பரந்துபட்ட ஐரோப்பிய கண்டம் முழுவதும் புரட்சிக்கு விதை போட்ட புத்தகம் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையும் மூலதனமும். அதுவரை அரசர் என்றால் கடவுளின் குழந்தை அவர் புனிதமானவர் என்று கருதப்பட்ட காலத்தில் அவர்கள் தலையில் சுத்தியலால் அடித்து அவரும் சாதாரண மனிதரே..! என உலகுக்கு சொல்லிய பிரெஞ்சு புரட்சியை பெற்றெடுத்த வரிகளும் இந்த புத்தகத்தினுடையதே..!

கடந்த சில ஆண்டுகளாக, சமூக இயக்கங்கள், இடதுசாரி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்பு ,இளைஞர் அமைப்பு, பெண்கள் அமைப்பு  மற்றும் இடதுசாரி பதிப்பகங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பிப்ரவரி 21 அன்று  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியீட்டு தினத்தை”RED BOOKS DAY – சிவப்பு புத்தக தினம்” என கொண்டாடி வருகின்றனர்.

உலகமயமான சிவப்பு புத்தகம் 

இந்த நாள் “இடதுசாரி புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் முன்னெடுத்த மக்கள் இயக்கங்கள்” ஆகியவற்றைக் கொண்டாடுகிறது. கியூபாவில் ஆரம்பித்து பூமியின் மறு பக்கமாக பிலிப்பைன்ஸில் இருக்கும் மக்களும் தங்கள் தாய் மொழியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இந்த தினத்தில் வாசிக்கின்றனர்..!

மார்க்சியம்-லெனினிசம் பற்றிய புத்தகங்களை பொது இடத்தில் படித்து, புரட்சிகர உணர்வைப் பரப்பவும், சோசலிசத்தை நோக்கிய வேகத்தை அதிகரிக்கவும் வலதுசாரிகளின் ஆபத்தான வளர்ச்சியை பொதுமக்களுக்கு உணர்த்திடவும் இந்த தினம் பிரச்சார தினமாக பயன்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட இந்த வாசிப்பு இயக்கம் நிறுத்தப்படவில்லை,  நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்போது ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

வர்க்க ஒற்றுமை

நாடு, மதம், மொழி, சாதி, இனம் போன்ற பிரிவுகளால் துண்டாடப்பட்டு கிடக்கும் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒரு குடும்பம் தான் என்பதை மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படை ஆணிவேர் பொருளாதார ஏற்ற தாழ்வுதான். பொருளே முதல் எனும் பொருள்முதல்வாதமே நம் கருத்தியல்.

இந்த தினத்தின் நோக்கம் கருத்துக்களைக் கொண்டு போய் சேர்ப்பது மட்டுமல்ல, வளர்ந்து வரும் வலதுசாரி  சக்திகளையும், கார்ப்பரேட் ஆதிக்கத்தின் நிலையையும் மக்களை உள்வாங்கிக்கொண்டு அதற்கு எதிராக வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுப்பதற்குமான தினம்.

இந்துத்துவத்திற்கு எதிராக நிற்போம்

மராட்டிய மாநிலத்தில் பிறந்து மார்க்சிய கொள்கையாளராகவும் பொதுவுடமை தலைவராகவும் விளங்கியவர் கோவிந்த் பன்சாரே. சிவாஜி யார்? என்ற புத்தகத்தில் சிவாஜி மத நல்லிணக்கத்தை பாதுகாத்தவர் என எழுதியதால் இந்து மத வெறியர்களால் 20215 பிப் 20 அன்று சுட்டுப்  படுகொலை செய்யப்பட்டது நாம் அனைவருக்கும் தெரியும்.

காந்தி முதல் பன்சாரே வரை ஆன்மீக வாதிகளோ இடதுசாரிகளோ யாரெல்லாம் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா அமைப்புகளின் உண்மை முகத்தையும் போலித்தன்மையை மக்களிடையே அம்பலப்படுத்திக்கின்றார்களோ அவர்களை எல்லாம் படுகொலை செய்வதுதான் இந்துத்துவா அமைப்புகளின் வேலை.

இதனை எதற்காக குறிப்பிடுக்கின்றேன் என்றால் சமூக மாற்றத்திற்காக  நாம் முன்னெடுத்துள்ள போராட்ட பாதையில் இந்துத்துவா கும்பல்களை எதிகொள்வதும் அம்பலப்படுத்துவதும் முக்கிய கடமையாகும்.

அதனையும் சிவப்பு புத்தக தினத்தில் நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம். சிவப்பு புத்தக தினத்தில் சமூக மற்றத்திற்கான பிரச்சாரத்திற்கு வலிமை சேர்ப்போம்.

கட்டுரையாளர் தோழர் தீபக்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *