செயற்கை தொழில்நுட்ப உலக சந்தையை பிடிக்க முன்னேறும் சீனா
செயற்கை தொழில்நுட்ப சந்தையை பிடிக்க சீனா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருகின்றது.சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றத்தை கண்டு பயந்த அமெரிக்க அரசு சீனாவின் சில முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது தடை விதித்தது. இந்த தடைகள் மூலம் அந்நாட்டின் குறைக்கடத்தி உற்பத்தியை முடக்கி , செயற்கை நுண்ணறி துறையில் சீனாவின் வளர்ச்சியை தடுக்க முயன்றது. ஆனால் அந்த தடைகள் உலக நாடுகளின் மீது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் செலுத்தி வரும் ஆதிக்கத்திற்கு சவால் விடும் நிலைக்கு சீனாவை வளர்ச்சியை நோக்கி உந்தி தள்ளியுள்ளது.
2024 மே மாதம் சீனாவின் குறைக்கடத்தி ( semiconductor ) துறைகளை மேம்படுத்த சுமார் 47 பில்லியன் டாலர்களை சீன அரசு முதலீடாக ஒதுக்கியது. இந்த நிதி ஒதுக்கீடு அந்நாட்டின் உள்நாட்டு சிப் துறையை வலுப்படுத்தத் துவங்கியுள்ளது. மின்னணு துறை, வாகன உற்பத்தி, தொலைத்தொடர்பு மற்றும் அதனைவிட மேம்பட்ட துறைகளில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் உலகளாவிய தொழில் போட்டிகளுக்கும் ‘புதிய எண்ணெய்’ என வர்ணிக்கப்படுகின்ற இந்த குறைக்கடத்திகள் தான் முக்கியமான பொருளாக உள்ளன.
( இரண்டாம் உலகப்போருக்கு பிறகு எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தும் நாடே உலகை கட்டுப்படுத்தும் நாடக இருந்து வந்தது. சர்வதேச அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியாக எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தும் நாடுகள் இருந்தன. தற்போதைய தொழில் நுட்ப உலகில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மிக முக்கியமான பொருளாக உள்ள குறைக்கடத்தி எண்ணைய் வளத்தின் முக்கியத்துவத்தை அடைந்துள்ளது.)
சீனாவின் இந்த நிதி முதலீடு குறைக்கடத்தி உற்பத்தி சர்வதேச நிறுவனம் மூலம் உள்நாட்டில் குறைக்கடத்திகள் உற்பத்தியை அதிகரிப்பதையும் வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மீதான சார்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய ஒருங்கிணைந்த தொழில்துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை சீன அரசாங்கம் வகுத்துள்ளது. அக்கொள்கை இந்த முக்கியத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.
அமெரிக்க தடைகள்
சீனாவின் வளர்ச்சியை முடக்க அமெரிக்கா சீனா மீது விதித்த தடைகள் மற்றும் விநியோகச் சங்கிலி மறுசீரமைப்பு கொள்கை அமெரிக்காவிற்கே பின்னடைவை உருவாக்கியுள்ளது. அதாவது அமெரிக்காவின் இந்த கட்டுப்பாடு சீனா குறைக்கடத்தி துறையில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, குறைந்த சக்தியை எடுத்துக்கொண்டு செயல்படும் சிப் வடிவமைப்பு, லித்தோகிராஃபி போன்ற துறைகளில் வலுவான போட்டியாளராக தன்னை உருவாக்கிக்கொள்ள உதவியுள்ளது.
அமெரிக்க-சீனா போட்டியின் தாக்கம்
அமெரிக்கா தன் நாட்டின் மீது விதித்துள்ள தொழில்நுட்ப தடைகள் சீனாவின் பார்வையில் ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் உள்ளது. அமெரிக்கா நீண்ட காலமாக செலுத்தி வந்த உலகளாவிய ஆதிக்கத்தைத் தற்போதும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தின் மூலம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் சீன குறைக்கடத்திகள் உலக சந்தைகளில் நுழையும் போது, சீனாவின் செல்வாக்கு சீராக வளர்ந்து வருகிறது. சீனாவின் இத்தகைய முன்னேற்றத்தைத் தடுக்க அமெரிக்கா முயற்சித்த போதிலும், சீனாவின் குறைக்கடத்தித் தொழில்துறை வேகமாக வளர்ந்துள்ளது. சீனா குறித்து விமர்சனம் எழுதும் பலரும் தற்போதைய அமெரிக்க-சீனப் போட்டியை புதிய அச்சுறுத்தலாக இல்லாமல் குறைக்கடத்தித் துறையின் வளர்ச்சிக்கான ஒரு ஊக்க சக்தியாக கருதுகின்றனர்.
அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளின் காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறக்குமதி அமெரிக்காவுக்குள் குறைந்திருந்தாலும், சீனாவின் குறைக்கடத்தி கொள்முதலில் உருவாகியுள்ள ஒட்டுமொத்த தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என சில சீன நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறைக்கடத்திகளுக்கு சீன அரசு ஜப்பானை தான் அதிகம் நம்பியுள்ளது. ஜப்பானுக்குப் பிறகு நெதர்லாந்தை சார்ந்துள்ளது. குறைக்கடத்திகளுக்காக அமெரிக்காவை சார்ந்து இருப்பதை சீனா கணிசமாக குறைத்துள்ளது. எனினும் அமெரிக்காவின் தடைகள்/ கட்டுப்பாடுகள் ஜப்பான், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் தைவான் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் நீட்டிக்கப்படுவதால், சீனா அதன் விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்தி வருகின்றது. அதாவது சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை நோக்கி சீனா தனது சந்தையை விரிவுப்படுத்துகின்றது.
தடைகளை படிகளாக மாற்றும் சீனா
அமெரிக்காவின் தடைகள், சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை தற்செயலாக துரிதப்படுத்துவது போன்ற சூழல் சீனாவில் நிலவுகின்றது. இரு நாடுகளுக்கு இடையிலான குறைக்கடத்தி தொழில் போட்டி ‘நூற்றாண்டின் மோதல்’ என்று அழைக்கப்படும் இந்த சூழல், உலக சந்தையின் தேவை மற்றும் அமெரிக்க தடைகளால் தூண்டப்பட்டு, சீனாவின் புது முயற்சிகளை உந்தியுள்ளது.
இது உயர் தொழில்நுட்பத்திற்கான உற்பத்தியில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான ஒரு வலிமையான போட்டியாளராக சீனாவை நிலைநிறுத்தியுள்ளது. தொழில்நுட்ப விமர்சகரன சென் ஜிங், அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் சிப் வடிவமைப்பு, சிப் தயாரிப்பிற்கு தேவையான உபகரணங்கள் உற்பத்தி மற்றும் கணினி மென்தகடுத் தயாரிப்பு ( wafer fabrication ) ஆகியவற்றில் சீனாவின் வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளன என தெரிவித்ததுடன் அமெரிக்கா அதன் வலுவான போட்டியாளரை வளர்த்துள்ளது என கூறியுள்ளார்.
குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் ஹு ஜிஜின், சீனாவின் குறைக்கடத்தி துறையின் விரைவான வளர்ச்சி, அமெரிக்க சிப்களுக்கு மற்றாக சீன சிப்களை இந்த உலகிற்கு வழங்குகிறது. இது உலகளாவிய தொழில்நுட்பத்தின் பல்வகைப்படுத்தலுக்கு பங்களிக்கிறது என்று தெரிவித்துள்ளார். சீனாவின் தொழில் இன்னும் சில மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பின்தங்கியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டாலும், அமெரிக்காவின் தடைகள் ஒரு முக்கிய சந்தைக்கான தேவையை கட்டுப்படுத்துவதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கே பிரச்னைகளை உருவாக்காகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
போட்டியின் ஆண்டாக திகழும்
2025 இல் உலக சந்தையில் சிப் உற்பத்தியில் உள்ள போட்டி தீவிரமடையும் என்று சீனாவில் பலர் கணித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் விதிக்கும் வரிகளின் காரணமாக இந்த வர்த்தகப் போர் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் சீன சமூக அறிவியல் அகாடமியை சேர்ந்த யூ யோங்டிங் குறிப்பிட்டுள்ளார். 2024 டிசம்பர் மாதம் அமெரிக்கா சீனாவின் உயர் தர ( mature ) குறைக்கடத்திகள் மீது பிரிவு 301 விசாரணையைத் துவங்கியது. அந்த குறைக்கடத்தி 14nm ( நானோ மீட்டர் ) அல்லது 28nm ( நானோ மீட்டர் ) அளவுடைய சிப்கள் என வரையறுக்கப்படுகிறன. சீனாவின் மைக்ரோ பிளாக்கிங் எனப்படும் சீன சமூக ஊடக வெய்போ பக்கத்தின் பெய்ஜிங் நியூஸ் அமெரிக்காவின் தடைகளை “தொழில்நுட்ப கொடுமைப்படுத்துதல்” என்று விமர்சிக்கின்றது.
மேம்பட்ட வளர்ந்த தொழில்நுட்பங்கள் மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, குறைக்கடத்தி உற்பத்தி சர்வதேச நிறுவனம் (SMIC) போன்ற சீன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் 28nm ( நானோ மீட்டர் ) அளவுள்ள சிப்களின் உற்பத்தி திறனை வெற்றிகரமாக அதிகரித்துள்ளனர். நன்கு மேம்படுத்தப்பட்ட இந்த குறைக்கடத்திகளை சீன தயாரிப்பு ( made in china ) என உள்நாட்டில் விற்பனையை ஊக்குவித்துள்ளன. 2020 உலக சந்தையில் 28nm-65nm சிப் விற்பனையில் 18 சதவீதமாக இருந்த சீனாவின் பங்கு 2024 இல் 31.5 சதவீதமாக வளர்ந்தது. மேலும், STMicroelectronics மற்றும் Qualcomm போன்ற உலகளாவிய நிறுவனங்கள் சீன கணினி மென்தகடுத் தயாரிப்பு ( wafer fabrication ) தொழிற்சாலைகளுக்கு தங்கள் ஆர்டர்களை கொடுத்துள்ளன. இது சீனாவின் குறைக்கடத்தி உற்பத்தி சூழலை மேலும் வலுப்படுத்துகிறது.
திட்டமிட்ட முதலீடுகள், தொழில் விரிவாக்கம்
சீனாவின் குறைக்கடத்தி தொழில் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக மெமரி சிப்கள், கணினி மென்தகடு (wafer foundries), சிப் தயாரிக்கும் இயந்திரங்கள் ( chip equipment) உள்ளிட்டவை அதிகமாக தயாரிக்கப்படுகிறது. சீனாவில் உள்நாட்டு சந்தையில் குறைக்கடத்தி உற்பத்தி செய்யும் இயந்திரத்திற்கான தேவை 2008 முதல் 2023 வரை சுமார் 40 மடங்கு வளர்ந்துள்ளது.
நார்த் ஹுவாச்சுவாங் (North Huachuang) சீனா மைக்ரோ ( China Micro) போன்ற நிறுவனங்கள் சந்தையில் விற்பனையை வலுவாக அதிகரித்துள்ளன. அதேபோல சீனா ரிசோர்சஸ் மைக்ரோ (China Resources Micro), ஹைசிலிகான் ( HiSilicon), BYD போன்ற குறைக்கடத்தி நிறுவனங்கள் இணையம், தகவல் தொடர்பு, மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான குறைக்கடத்தி சிப்களை உற்பத்தி செய்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் கொடுத்து வருகின்றன. 2023 இல், சீன குறைக்கடத்தி உபகரண நிறுவனமான NAURA உலகளாவிய முதல் 10 நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. இந்த வளர்ச்சி உலகளவில் குறைக்கடத்தி சந்தையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலக சந்தை
சீன சிப் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது உலக சந்தையில் 15 சதவீதம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 இல், சீனா உலகளாவிய கணினி மென்தகடு உற்பத்தி திறனில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உலக சந்தையில் பங்களித்தது. மேலும் 2032 ஆம் ஆண்டுக்குள் இந்த உற்பத்தி 86 சதவீத வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீன குறைக்கடத்திகள் உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் வெய் சாவோஜூன் கூறிய போது 2024 இல் 3,600 க்கும் அதிகமான சீன சிப் உற்பத்தி நிறுவனங்கள் 646 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான விற்பனையை ஈட்டும் என்றார். மேலும் 731 நிறுவனங்கள் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாயை தாண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அரசின் நேரடி முதலீடு
சீன குறைகடத்தி உற்பத்தி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், உற்பத்திக்கான உயர்தர பொருட்கள், மேம்பட்ட லித்தோகிராபி உபகரணங்கள் மற்றும் திறமையான தொழிலாளர் பற்றாக்குறை போன்ற சவால்களை இன்னும் எதிர்கொள்கிறது. இவற்றை சமாளிக்க, வளர்ச்சியிலும் சிப் உற்பத்தியில் முதன்மை இடத்தைய பிடிக்க ஊக்குவிப்பதற்காக சீனா அரசாங்கம் இத்துறையில் நேரடி முதலீடு செய்கிறது மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்துகிறது.
குறைந்த சிப் உற்பத்தியில் (lower – end chip production) சீனா சிறந்து விளங்கினாலும், உயர்தர சிப் உற்பத்தி ( high – end chip production ) சந்தையில் இன்னும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்த இடைவெளியை பூர்த்தி செய்ய, எலக்ட்ரானிக் வடிவமைப்பு தானியக்கமயமாக்கல் (EDA) மற்றும் எலக்ட்ரானிக் துறையில் அதிகம் அறியப்படாத கதநாயகன் என சொல்லப்படுகின்ற அனலாக் சிப் ஆகிய துறைகளுக்கு இடையே இணைப்புகளை உருவாக்கும் மற்றும் கையகப்படுத்தும் வேலை சீனா செய்கிறது. சந்தையை ஒருங்கிணைக்கும் சீன அரசின் கொள்கைகளும் இந்த முறை உற்பத்தியை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
( குறைந்த விலை சிப் உற்பத்தி (lower – end chip production) என்பது உலக சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் மற்றும் அது தொழில்நுட்ப உலகின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும். அதே நேரத்தில் உயர்நிலை சிப் உற்பத்தி ( high – end chip production ) என்பது அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடுகளை செயல்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை முன்னோக்கி உந்தித் தள்ளுகிறது. )
தொடர்ச்சியான ஆதரவு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், சீன நிறுவனங்கள் உலக சந்தையில் உள்ள போட்டியாளர்களுடனான இடைவெளியை குறைத்து முதன்மை இடத்தை நோக்கி முன்னேறி வருகின்றன. இருப்பினும் சீனா கூறிவருவது போல குறைகடத்திகளில் சுயசார்பு மற்றும் உற்பத்தியில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்றால் உலக சந்தையில் முன்னேறும் அதே அதே நேரத்தில் சீனாவுக்கு நிலையான முதலீடு, புதுமையான மற்றும் சீனாவிற்கான முன்னுரிமைகளுடன் திட்டமிட்ட ஒழுங்குமுறை ஆகியவையும் தேவைப்படும்.
நன்றி : இந்த கட்டுரை ஆங்கில இணைய இதழான தி ப்ரிண்டில் வெளியானது
கட்டுரையாளர் :- சனா ஹாஷ்மி, தைவான்-ஆசியா எக்ஸ்சேஞ்ச் பவுண்டேஷனில் பணியாற்றுபவர்.
தமிழில் சேது சிவன்