Tamil Marx

சர்வதேசம்

உயிரை குடிக்கும் அமெரிக்க காப்பீட்டு நிறுவனங்கள்

உயிரை குடிக்கும் அமெரிக்க காப்பீட்டு நிறுவனங்கள்
  • PublishedDecember 21, 2024

அமெரிக்காவை சேர்ந்த யுனைடெட் ஹெல்த்கேர் (UHC)தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சன் டிசம்பர் 4 அன்று  மன்ஹாட்டனில் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு செல்லும் போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகத்தை உலுக்கியது. இந்த படுகொலை அமெரிக்கர்களின் துயரத்தின் ஒரு பகுதியையும், கார்ப்பரேட்டுகள்  மருத்துவதுறையில் நடத்தும் கொள்ளையையும் மீண்டும் சமூகத்தில் பேசு பொருளாகியுள்ளது.

தாம்சனின் மரணத்தை அறிவிக்கும் முகநூல் பதிவில் சுமார் 42,000 க்கும் அதிகமான மக்கள் சிரிப்பு குறிகளை ( laughing emonji )  கொடுத்து அவரது மரணத்தை கொண்டாடினர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகம் உடனடியாக இப்பதிவை நீக்கிவிட்டது.

இதன் வெளிப்பாடாக  பிரையன் தாம்சன் கொலையை பலர் வரவேற்பதும் கொலைசெய்த்தாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கொண்டாடுவதும், அந்த கொலையில் தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். எந்த குற்றத்திற்கும் மரணம் தீர்வை தந்து விடாது என கூறப்படுகிற நிலையில் ஒருவரின் மரணத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள் எனும்போது அதனை நாம் சற்று விரிவாக பார்க்க வேண்டியுள்ளது.

இந்த கொலைக்கு பின்னணி அமெரிக்காவில் உள்ள மோசமான லாபவெறிகொண்ட காப்பீட்டு நிறுவனங்களின் கொள்ளை தான். மனிதனின் உழைப்பை சுரண்டி மூலதனத்தை பெருக்கிக்கொண்ட கார்ப்பரேட்கள் அதே மனிதன் உடல் நலனை பாதுக்காப்பதற்காகவோ, தனது சிகிச்சைக்காகவோ மருத்துவமனையை தேடி செல்லும் போது காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக மீண்டும் அம்மனிதனை உறிஞ்சி தனது மூலதனத்தை பெருக்கிக்கொள்கின்றன. இதுதான் அமெரிக்காவின் சுகாதாரத் துறையில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களின் உண்மை முகம்.

அத்தகைய ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிதான்  தாம்சன். அவரை 26 வயதான லூய்கி மங்கியோன் என்ற நபர் சுட்டு படுகொலை செய்தார்.

அமெரிக்காவின் சுகாதாரத் துறை உலகளவில் அதிக முன்னேற்றம் கண்ட துறையாக உள்ளதுடன், மிகவும் விலையுயர்ந்த சுகாதார அமைப்பாகவும் உள்ளது. பணம் இல்லையென்றால் குறிப்பாக காப்பீடு நிறுவனங்களில் பதிவு செய்யவில்லை என்றால்  அமெரிக்கரால் எளிதாக சிகிச்சை பெறவே முடியாது.

அமெரிக்காவில் ஒருவர் மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் என்றால் அவருக்கு காப்பீடு அவசியமானது.மக்களுக்கு சேவைசெய்யும் விதமாக அரசுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய காப்பீட்டு துறை தனியாரிடம் உள்ளது. இவர்கள் பல வகைகளில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

இதனால் அமெரிக்க மக்கள் தங்களை சுரண்டி லாபம் பார்க்காத சுகாதார அமைப்பு வேண்டும் என கோரிக்கைகளை பல காலமாக எழுப்பி வருகின்றனர். தாம்சன் படுகொலை செய்யப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட ஒரு ‘காலப் ஆய்வின் (Gallup) முடிவுகள்  அமெரிக்க மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அது அரசங்கத்தின் கட்டாயமான பொறுப்பு எனவும் மக்கள் கருத்தை தெரியப்படுத்தியுள்ளது.

காலப் ஆய்வில் பதில் அளித்த 36 சதவீதமான மக்கள்  சுகாதாரத்துறையில் அரசு தலையிடத்தேவை இல்லை என எதிர்மறையான கருத்தை கொண்டுள்ளனர்.  அதே நேரத்தில் சுமார் 62 சதவீத அமெரிக்கர்கள் அரசுதான் மக்களுக்கு சுகாதாரம், முறையான  மருத்துவ சேவைகளை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சுமார் 75 சதவீதமான மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் போது  காப்பீட்டு நிறுவனங்கள் பல காரணங்களை சொல்லி காப்பீட்டு பணத்தை கோரமுடியாமல்  (Claim) தடுப்பதையும், நோயாளிக்கு முன்பே இருந்த உடல்நலக்குறைபாடுகளை காரணமாக காட்டி, இதனால் தான் தற்போது அவரது உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது இதனால் காப்பீட்டு அடிப்படையில் சிகிச்சை பெற முடியாது எனவும் அந்நிறுவனங்கள் மறுக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

ஒரு அமெரிக்க தொழிலாளி குறைந்தபட்சம் ஒரு மதத்திற்கு 422 டாலர்கள் அதாவது 40 ஆயிரம் ரூபாய் காப்பீடு செலுத்த செலவு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அதேபோல statista ஆய்வுகள் கடந்த 10 ஆண்டுகளில் இந்த காப்பீட்டு செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கிறது. 2020 கணக்கெடுப்பின் படி ஒரு அமெரிக்கர் தனது மாத ஊதியத்தில் சுமார் 11.6 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டும்.

தற்போது அமெரிக்காவில் வேலையின்மை, வீடற்ற சூழல் என பொருளாதார நெருக்கடிகளும், பணவீக்கமும் அதிகரித்து வரும் நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள்  அதிக கட்டணம் வசூலிக்க அரசாங்கம் அனுமதிக்க கூடாது என அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து வருகின்றனர்.

தாம்சன் கொல்லப்படுவதற்கு முன்பு, மற்றொரு காப்பீட்டு நிறுவனமான ஆன்தெம் ப்ளூ கிராஸ் ப்ளூ ஷீல்ட், ஒரு பயனாளி காப்பீட்டை பெரும் விதியில் அறுவை சிகிச்சையின் போது  மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ள அனைத்து நாட்களுக்கும் மருத்துவமனையின் கட்டணத்திற்கு  பணம் செலுத்த  முடியாது  என அறிவித்தது. இந்த நடவடிக்கையை அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் அனஸ்தீசியாலஜிஸ்ட்ஸ் (ASA) கண்டித்துள்ளது.

ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து செலுத்தினால் சிகிச்சையை பொறுத்து அவர் அறுவைசிகிச்சை முடிந்து மீண்டுவர சில நாட்கள் கூட ஆகும் இந்த காலத்தில் ( சில மணிநேரம் அல்லது 1 நாளில் அறுவை சிகிச்சை முடிந்தால் கூட ) அறுவை சிகிச்சை நடைபெறும் தினத்திற்கான தொகையை மட்டுமே பெறமுடியும்.  தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பில் இருந்தாலும் அதற்கான பணத்தை பெற முடியாது என காப்பீட்டு நிறுவனங்கள் கூறுவது கண்டிக்க தக்கது ஏற்க முடியாது. இது இழிந்த முறையில் நோயாளிகளிடம் பணம் பறிக்கும் நடவடிக்கை எனவும் மயக்க மருந்து நிபுணர்கள் கண்டித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போதுள்ள தனியார்மயமாக்கப்பட்ட சுகாதாரத் துறையின் கீழ், அந்நாட்டின் உழைப்பாளி மக்கள் தங்களின் மருத்துவ நலனை கவனத்தில் கொண்டு  பல கோடிக்கணக்கான டாலர்களை கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களில் செலுத்துகின்றனர். அந்த நிறுவனங்கள் மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் போது தேவையான பணத்தை கொடுப்பதற்கு பதிலாக எப்படியெல்லாம் பணத்தை  திருட முடியுமோ அதற்கு தேவையான வகையில் சட்டதிருத்தங்களை செய்து கொள்கின்றன. தொழிலாளர்களிடம் இவ்வாறு திருடுகிற பணத்தைக் கொண்டு தங்கள் மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கிக்கொள்கின்றன.

அமெரிக்காவின் சந்தையில் 15 சதவீதத்துக்கும் அதிகமான  பங்கைக் கொண்ட மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு நிறுவனமாக  இருக்கும் யுனைடெட் ஹெல்த்கேர்  போன்ற நிறுவனங்கள், நோயாளிகளுக்கு தேவைப்படும் போது காப்பீட்டு தொகையை கொடுக்காமல் மறுத்து வருகின்றன.

2021 இல் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தாம்சன் பதவி ஏற்றார்.அதற்கு முன்பு  காப்பீடு செலுத்திய மக்களுக்கு பல்வேறு  காரணங்களின் அடிப்படையில் காப்பீட்டை  மறுக்கும் (காப்பீட்டு பணத்தை நோயாளிகளால் கோர முடியாது) விகிதம் 8 சதவீதமாக ஆக இருந்தது. அவர் பதவி ஏற்ற பின்பு 2022 இந்த மறுப்பு விகிதம் 22.7 சதவீதமாக உயர்ந்தது. அதே போல அந்நிறுவனத்தின் லாபமும்  2021  இல் 12 பில்லியன் டாலர்களில்  இருந்து 2023 இல் 16 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது.

யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் காப்பீட்டு மறுப்பு விகிதம் அமெரிக்காவின் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என  தனியார் நிதித் தளமான வேல்யு பென்குயின் ( ValuePenguin) நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதனால் யுனைடெட் ஹெல்த்கேர் குழுமம், இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு நிறுவனமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்களை சுரண்டுவதன் மூலம் அந்நிறுவனம் 189 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை வருமானமாக பெறுகிறது.  இதன் மூலம் அந்நிறுவனம்   மக்களுக்கு  எப்படியெல்லாம் காப்பீட்டு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இந்த நிறுவனத்தின் இத்தகைய மோசமான கொள்ளை  ஊடக விசாரணையையும்  அமெரிக்காவின் செனட் விசாரணையையும் தூண்டியது.

ப்ரோ பப்லிக்கா (ProPublica) என்ற ஊடகத்தின் விசாரணை மூலம் மனநல மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான காப்பீட்டு கவரேஜைக் கட்டுப்படுத்த அதற்கான அல்காரிதத்தைப் பயன்படுத்தி யுனைடெட் ஹெல்த்கேர் மக்களை சுரண்டி வந்தது கண்டறியப்பட்டது.

அதேபோல செயற்கை நுண்ணறிவையும் இந்த காப்பீட்டு நிறுவனம் பயன்படுத்தி வந்தது, இதன் மூலம் வயதான நபர்களை  அவர்களுக்கான காப்பீடு காலத்திக்கிற்கு முன்பாகவே அத்திட்டத்தில் இருந்து வெளியேற்றியுள்ளது. அதாவது சுமார் 90 சதம் வரை பிழையாகியுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான  மக்களின் காப்பீட்டு பணம் கொடுக்கப்படாமல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல முதியவர்கள் சிகிச்சை பெற முடியாமல் பராமரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவானது. அல்லது மேலும் லட்சக்கணக்கான டாலர்களை கையில் இருந்து செலவு செய்ய வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இந்த கொள்ளைகளில் இருந்து தப்பிக்க தான் மிக மிக அவசியமான சுகாதார துறையையும் காப்பீட்டு துறையையும் அமெரிக்கர்கள்  பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் எனவும் ஒருமுறை மட்டுமே பணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் சுகாதாரத்துறையையும் காப்பீட்டு துறையையும் தனியாரிடம் இருப்பதால் முதலாளித்துவத்தின் கோரமான சுரண்டலில்  பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல்  யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட லூய்கி என்ற இளைஞன்  கொலைகாரனாகவும் மாற்றப்பட்டுள்ளான்.

 

கட்டுரையாளர் : – சேது சிவன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *