நாடாளுமன்றத்தை முடக்கும் மோடி அரசு
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 துவங்கி டிசம்பர் 20 வரை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பை நீர்த்து போக செய்யும் அளவிற்கான ஏதேச்சதிகார போக்கை ஆளும் பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
கிட்டத்தட்ட நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் பல நாட்கள் எதிர்கட்சி உறுப்பினர்களின் போராட்டத்தை காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டு நாள் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கும் சூழல் என்பது உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் செய்ததற்கான காரணம் மிகவும் முக்கியமானது. அமெரிக்க நீதிமன்றம் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஒரு ‘சர்வதேச ஊழல்வாதி’ என்று குற்றம்சாட்டி அவருக்கு பிடிவாரண்டை பிறப்பித்திருந்தது. இந்தியாவின் தினக்கூலி வேலை செய்யும் மக்களும்,மாத ஊதியம் வாங்குகிறவர்களும், மத்திய தர வர்க்கமும் கட்டுகிற வரி பணம் துவங்கி, நமது வங்கி கணக்குகளில் பிடித்தம் செய்யப்படும் பணம் என ஏழை, எளிய மக்களின் உழைப்பில் உருவான அத்தனை தொகையும் இந்திய பெருமுதலாளிகளின் வங்கி கணக்கில் கடன் தள்ளுபடி செய்த பணமாக மாறிக்கொண்டுள்ளது.
இந்திய மக்களின் வரி பணத்தை எல்லாம் சுரண்டி கொழுத்து உயிர் வாழும் இந்நிய முதலாளிகளான அதானி, அம்பானி போன்றவர்களின் சொத்து மதிப்புகள் மோடியின் ஆட்சிகாலத்தில் பல மடங்குகள் உயர்ந்துள்ளன. 5,000 கோடி ரூபாய் செலவில் அம்பானியின் மகன் திருமணம் நடைபெற்றது என்பது இதனை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதானி சர்வதேச பெரும்பணக்காரர்ஙளின் வரிசையில் முதல் 10 இடங்களில் இருப்பதும் அதனையே சுட்டிக்காட்டுகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தியாவின் மக்கள் பணத்தை சுரண்டி கொழுத்த அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தது. அதானியின் விவகாரத்தை நாடாளுமன்ற அவைகளில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எம்.பி-க்கள் அமலியில் ஈடுபடுவதும், விவாதத்தை மறுப்பதும், நாடாளுமன்றம் முடங்குவதும் என இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தது.
மணிப்பூரில் பற்றிய நெருப்பு இன்னும் அணையவில்லை. நாடு சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. மாணவர்கள் போதை வன்முறை கலாச்சாரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன. வேலையில்லாமல் இந்திய இளைஞர்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு வருகிறது. போதை கலாச்சாரத்திலிருந்து மீள முடியாதவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்கள். வரலாறு காணாத விலைவாசி உயர்வு இந்திய உழைக்கும் வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.
இறுதி வரை இது போன்ற விவகாரங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது இந்திய நாட்டின் அரசியலமைப்பை மாற்றி, மாநில அரசுகளே இல்லாமல் செய்யும் வேலையையும், தனது சர்வாதிகார போக்கை நிலைநிறுத்தும் மசோதாவாக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது.இடதுசாரிகள், எதிர்கட்சிகள், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்த மசோதா குறித்தும், இந்திய குடியரசின் 75 ஆம் ஆண்டு சிறப்புரையின் போதும் இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கு பெரும்பங்காற்றிய அண்ணல் அம்பேத்கரின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சரித்த்தை ஆளும் ஆர் எஸ் எஸ் பாஜகவில் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
நாடாளுமன்றத்தில் ‘அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது தற்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்பின் விழுமியங்கள் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன.
உழைப்பு சுரண்டல், பொருளாதார சமத்துவமின்மை, சமூக ஒடுக்குமுறைகள், தீண்டாமை கொடுமைகள் என அனைத்தையும் இந்திய மண்ணில் வேரறுக்க இன்றைக்கும் ஜனநாயக சக்திகளுக்கு அம்பேத்கர் ஒரு முக்கிய ஆயுதமாக இருகின்றார்.
ஆனால், மதவாத அரசியல், சனாதன பிரச்சாரம், மத-சாதி கலவரங்கள், கார்ப்பரேட் ஆதரவு என அனைத்து சமூக சீர்கெடுகளையும் தலைமை தாங்கி நடத்தி வரும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் தற்போது அம்பேத்கர் மீது வெறுப்பை கொட்டுகிறார்கள். இந்தியாவின் சாதிய மதவாத சக்திகளையும், பன்முக கலாச்சாரம் கொண்ட நாட்டை ஒற்றை கலாச்சாரமாக மாற்ற துடிக்கும் அரசியலையும், சுரண்டல் சமூகத்தை ஆதரிக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிரான போராட்டத்தில் அம்பேத்கர் காட்டிய ஒளியை உயர்த்தி பிடிக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு அனைத்து ஜனநாயக, மதசார்பற்ற அமைப்புகளுக்கு எழுந்துள்ளது.
தோழர் . M.E.நிரூபன்