சிரியாவில் என்ன நடக்கிறது?
நவம்பர் 27 அன்று ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் நெருப்புடன் விளையாடுவதாக நேரடியாக எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கை வந்த 24 மணி நேரத்திற்குள் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் இட்லிப்பில் பகுதியில் இருந்து அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ மீது திடீரெனெ தாக்குதல்களை தொடுத்தன.
ரஷ்யா மற்றும் ஈரானின் ஆதரவுடன் ஆட்சி செய்யும் சிரிய ஜனாதிபதி அல் அசாத் இன் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி வரும் அமெரிக்க சார்புடன் இயங்குகிற மற்றும் அவற்றை பின்பற்றுகின்ற ஊடகங்கள் உண்மையிலேயே அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் செயல்படுகிற இந்த பயங்கரவாத குழுக்களை கிளர்ச்சியாளர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டு வருகின்றன.
தற்போது சிரியா மீது அல்-கொய்தா துணை அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற அல்-நுஸ்ரா, ஐஸ்ஐஸ், துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சி (TIP) சிரிய தேசிய ராணுவம் என்ற துருக்கி ஆதரவு படை உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் கூட்டுப்படைகளின் தாக்குதல் நடைபெற்று வருகிறது.இந்த திடீர் தாக்குதலை தனது கூட்டாளிகளுடன் சிரியா எதிர் கொண்டு வருகிறது.
ஈரானின் ஆதரவுடன் இராக் நாட்டில் செயல்பட்டு வருகிற பாப்புலர் மொபிலைசேசன் ராணுவம் (popular Mobilization force ) உள்ளிட்ட சில ராணுவக் குழுக்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், ரஷ்ய விமானப்படை ஆகியவை சிரியா ராணுவத்துடன் இணைந்து பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த கூட்டுப்படைகள் தாக்குதல் துவங்கிய பிறகு சுமார் 200 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்களும் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கின்ற நேரத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான அல் அசாத் இன் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என ரஷ்யா, ஈரான், உள்ளிட்ட நாடுகள் உறுதி தெரிவித்துள்ளன.
பயங்கரவாதிகளின் தாக்குதல் சிரியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்ற வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் M-5 ( அலெப்போ-ஹாமா-டமாஸ்கஸ் ) நெடுஞ்சாலை வரை நீண்டுள்ளது. இந்த சாலை ஜோர்டான், துருக்கி எல்லை வரை செல்லும் சர்வதேச இணைப்பு சாலையாகவும் உள்ளது.
எனவே அந்நாட்டு அரசுக்கு இந்த சர்வதேச சாலையை பாதுகாப்பது மிக அவசியமானதாக உள்ளது. சிரியாவில் 2011 முதல் நடந்து வருகிற உள்நாட்டு போரில் 2017 – 2020 காலகட்டத்தின் போது ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுடன் சிரியப் படைகள் கைப்பற்றி இருந்த அலெப்போ நகரத்தின் மீது தான் தற்போது பயங்கரவாதிகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி கைப்பற்றியது.
இந்த பயங்கரவாத தாக்குதல் தானாக நடக்கவில்லை. அமெரிக்க மற்றும் நேட்டோ உறுப்பினரான துருக்கி ஆகிய நாடுகளின் உளவுத்துறைகள் பல ஆண்டுகளாக பல்வேறு பயங்கரவாதப் பிரிவுகளை ஒன்றிணைத்து திட்டமிட்டு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் மார்ச் மாதம் நடைபெற வேண்டியது. ஆனால் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகு திடீரென நடத்தப்பட்டுள்ளது என சில ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் உள்ள ராணுவ நிபுணரான பிரிகேடியர் ஜெனரல் ஹைதம் ஹஸ்ஸூன் பயங்கரவாதிகள் தாக்குதல் துவங்கிய பிறகு கொடுத்த பேட்டியில் ஒருமுக்கியமான விசயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலை துவங்குவதற்கான தயாரிப்புகள் முன்பே துவங்கப்பட்டு விட்டது என்றும், தாக்குதலுக்குத் திட்டமிடுவதற்காக இந்த குழுக்கள் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒரு கூட்டு திட்டத்திட்டத்தை ஆரம்பித்தன என அதில் உறுதிப்படுத்தியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் திட்டத்துடன் சிரியா ஜனாதிபதி அல் அசாத்துக்கு எதிராக பயங்கரவாதவாதிகளை வைத்து அரங்கேற்றப்பட்ட உள்நாட்டு போரின் போதே அக்குழுக்களுக்கு கட்டளையிடவும், வழி நடத்தவும் ஜோர்டான் மற்றும் துருக்கியின் தலைநகரங்களில் அந்தந்த நாடுகளின் உளவுத்துறைகள், அமெரிக்காவின் சிஐஏ உள்ளிட்ட உளவுத் துறைகள் ஒன்றிணைந்த கூட்டணி அமைக்கப்பட்டது. உளவுத்துறைகளின் வேலையை ஒருங்கிணைப்பதற்கான அலுவலகமும் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகளின் இந்த கூட்டுப்படைகளின் துள்ளியமான தாக்குதலுக்கு உதவும் வகையில் சிரிய ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை துருக்கியின் உளவுத்துறை கொடுத்துள்ளது.
பயங்கரவாத படைகளின் திட்டங்கள் மற்றும் நகர்வுகளை சிரிய ராணுவமும் உளவுத்துறையும் கண்டறிந்து விடாமல் என திசை திருப்புவதற்காக மின்னணு மற்றும் ஊடக தாக்குதல்களையும் துருக்கி உளவுத்துறை மேற்கொண்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார்.
அதாவது அமெரிக்காவின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இந்தத் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற துருக்கி உளவுத்துறை ஆரம்பம் முதல் பல்வேறு உதவிகளை பயங்கரவாதிகளுக்கு செய்து வருகிறது. இந்த பயங்கர வாதிகளுக்கு இஸ்ரேலும் உதவுவதாக சில சிரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
துருக்கி உளவுத்துறை அல் கொய்தாவின் துணை அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ( எச்டிஎஸ்), துருக்கிக்கு விசுவாசமாக உள்ள சிரிய தேசிய ராணுவம் (SNA) ஆகிய பல பயங்கரவாத குழுக்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பயங்கரவாதக்குழுக்களும் தங்களுக்கு பணம் கொடுக்கிற அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் நலன்களை நிறைவேற்ற தற்போது போரிட்டு வருகின்றன.
மத்திய கிழக்கில் போர் பதட்டம் மிக தீவிரமாக உள்ள சூழலில் இஸ்ரேல் அல்லது நேட்டோ நாடான துருக்கி உள்ளிட்ட நாடுகளின் ராணுவம் நேரடியாக சிரியாவின் மீது தாக்குதல் நடத்தினால் அது ஈரான் மற்றும் ரஷ்யாவை போருக்குள் தீவிரமாக இழுப்பதுடன் விரிவான போராக மாறும். உலகப் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடியில் தள்ளும்.
இத்தகைய விரிவடைந்த போரை அமெரிக்க ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் முதலாளிகளே தற்போதைக்கு ஆதரிக்க வேண்டிய மன நிலையில் இல்லை. ஏனெனில் அவர்களது மூலதனத்தை அதிகரித்துக்கொள்ள மிகப்பெரிய போரை விரும்ப மாட்டார்கள் அதற்கு மாறாக இது போன்ற சிறிய அளவிலான உள்நாட்டு யுத்தத்தை ஊக்குவிப்பார்கள். என சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்கு சிரியா வழியாக ஆயுதங்கள் வருகின்றன என குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ள சூழலில் சிரியாவின் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பு தனது ராணுவ வலிமையை அதிகரித்து விடும் என இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பயப்படுகின்றன.
தற்போதைய போர் சூழல் மேற்கு நாடுகளுக்கு மட்டுமல்ல சிரியாவிற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதாவது பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள அலெப்போ மட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக பயங்கரவாதிகள் வசம் உள்ள இட்லிப் உள்ளிட்ட சில பகுதியையும் சிரியா மீட்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த நடவடிக்கைள் சில நாட்களில் முடிவடையாது, இப்போர் பல மாதங்கள் கூட தொடரலாம். எப்படி ஆயினும் அப்பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் திட்டத்தில் வெற்றி பெற சிரியா எந்த எல்லைக்கும் செல்லும். குறிப்பாக மத்திய கிழக்கில் சிரியா மீது நடத்தப்படும் பயங்கரவாதிகளின் தாக்குதல் ஈரான் மற்றும் ரஷ்யாவை நேரடியான பிராந்திய அளவிலான அழுத்ததிலேயே வைத்திருக்க திட்டமிட்டு இருக்கலாம். மறைமுக போரின் காரணமாக இஸ்ரேல் அமெரிக்கா துருக்கி மீது நேரடி அழுத்தங்கள் இல்லை.
ஆனால் போரின் காரணமாக உருவாக்கப்படும் அகதிகள் எங்கே செல்வார்கள் ? எல்லா காலத்திலும் போரால் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பாதிப்புகளை சந்திக்கின்றனர்.லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து சுமார் 4.5 லட்சம் மக்கள் அகதிகளாக சிரியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிரியாவிலும் தீவிரமடையும் போர் அம்மக்களை மேலும் அதிகளவில் போர் இல்லாத ஐரோப்பாவை நோக்கி செல்லத் தூண்டும் சூழல் உள்ளது.
மேற்கு நாடுகளால் தூண்டி விடப்பட்டுள்ள போர் மற்றும் வறுமையின் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து அளவுக்கதிகமான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றி வருகின்றனர்.இது அந்நாடுகளில் மிகப்பெரிய அரசியல் விவாதங்களாகவும், அரசியல் பொருளாதார பிரச்னைகளாகவும் மாறியுள்ள சூழலில் ஐரோப்பிய நாடுகள் இந்த போரை தொடர அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.