Tamil Marx

இந்திய பொருளாதாரம் தொழிலாளர் போராட்டங்கள்

வாரம் 55 மணி நேரம் கார்ப்பரேட்டுக்கு வேலை மீதி வீட்டு வேலை இந்திய பெண்களை சுரண்டும் சமூக

வாரம் 55 மணி நேரம் கார்ப்பரேட்டுக்கு வேலை மீதி வீட்டு வேலை இந்திய பெண்களை சுரண்டும் சமூக
  • PublishedSeptember 26, 2024

இந்தியாவில் இளம் பெண்கள் வாரந்தோறும் 55 மணிநேரம் வேலை செய்கிறார்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரிகை- தகவல் தொடர்புத் துறைகளில் பணிபுரியும் பெண்கள் வாரத்திற்கு சுமார் 56.5 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகிலேயே இந்தியாவில் தான் பெண்கள் மீதான பணிச்சுமை கொடூரமான முறையில் அதிகமாக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

வேலை அழுத்தத்தால் ஏற்பட்ட மரணம்

கடந்த வாரம் புனேவில் உள்ள எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணிபுரிந்த Chartered accountant அன்னா செபாஸ்டியன் பேராயிலி (26) பணி அழுத்தத்தின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம், கார்ப்பரேட் நிறுவனங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான பணிச்சுமை பற்றிய விவாதங்களை தீவிரப்படுத்தியது.

அன்னா செபாஸ்டியன் மரணத்திற்கு அதிக பணி அழுத்தம் (இரவு நேரப் பணி) தான் காரணம் என அவரது தாயார் அனிதா அகஸ்டின் எர்ன்ஸ் அண்ட் யங் இந்தியாவின் தலைவர் ராஜீவ் மேமானிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மீதான சுரண்டல்

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) தரவுகளின்படி, “தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு , பத்திரிகை துறைகளில் பணியாற்றும் பெண்கள் வாரத்திற்கு சராசரியாக 56.5 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

வாரத்தில் ஐந்து நாட்கள் பணியாற்றினால் நாளொன்றுக்கு 11 மணி நேரமும். ஆறுநாட்கள் பணியாற்றினால் தினமும் ஒன்பது மணி நேரத்திற்கு அதிகமாகவும் பணியாற்றுகின்றனர்.

இளம் பெண் தொழில் வல்லுநர்கள் நிலைமையோ பரிதாபமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப் பணிகளில் 15-24 வயதுடைய பெண்கள் வாரந்தோறும் சராசரியாக 57 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் 55 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளின் லாபத்தை அதிகரித்து கொடுக்கும் இடமாக இந்தியா உள்ளது
Cheap labour கள் ( குறைந்த சம்பளம் கொடுத்து அதிக வேலை வாங்குவது ) உள்ள இந்தியாவை தங்களது வெளிநாட்டு சேவைக்காக ( project செய்து கொடுப்பதற்காக) இந்த தொழில் நுட்ப நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

அதிக அழுத்ததை சந்திக்கும் இந்திய பெண்கள்

இது போன்ற சுரண்டல்களால் இந்திய பெண்கள் தான் உலகளவில் மிக அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.
உதாரணமாக, ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரிகை துறைகளில் உள்ள பெண்கள் வாரத்திற்கு சராசரியாக 32 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள், ரஷ்யாவில் உள்ள பெண்கள் 40 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்ப துறையில் குறைவாக உள்ள பெண்கள்

இந்தியப் பெண்கள் இந்தத் துறைகளில் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வேலைகளில் 8.5 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் பணியாற்றுகின்றனர். தகவல் தொடர்புத் துறையில் 20 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். பல நாடுகளில் இந்தத் துறைகளில் பெண்கள் பெருமளவில் பணியாற்றுகின்றனர். 145 நாடுகளில் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களை பிரதிநிதித்துவத்தில் இந்தியா 130-ஆவது இடத்தில் உள்ளது.

குடும்பப் பெண்களின் நிலை அதை விட மோசம்

வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவலகத்தில் மட்டும் இல்லாமல் வீட்டிலும் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவர்களுக்கு நாளொன்றுக்கு 7 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரையே ஓய்வு கிடைக்கிறது.

வேலைக்கு செல்வதற்கு முன் சம்பளம் இல்லாத வேலையான வீட்டு வேலையில் 5 முதல் 6 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள்.

வேலைக்கு செல்லாத ஆண்கள் செய்யும் வீட்டு வேலையும் குறைவே

வேலைக்கு செல்லும் பெண்களுடன் ஒப்பிட்டால் வேலைக்குச் செல்லாத ஆண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் நேரம் மிகக் குறைவாகும். அதாவது அவர்கள் மூன்று மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரையே வீட்டு வேலைக்காக செலவிடுகிறார்கள்.

ஆனால் திருமணமாகி வேலைக்கு செல்லும் பெண்கள் சுமார் 8 மணி நேரம் வீட்டு வேலைக்காக மட்டும் செலவிடுகின்றனர். அதுவே திருமணமான ஆண்கள் அதிகபட்சம் மூன்று மணி நேரம் மட்டுமே வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

சுருக்கமாகக் சொன்னால் திருமணத்திற்குப் பின் பெண்களின் வேலை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. ஆண்களின் வேலை குறைந்துவிடுகிறது.

மேலும், வீட்டு வேலைகளில் பெண்கள் செலவிடும் நேரத்தின் அளவு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை.

அனைத்து மாநிலங்களிலும், 85 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை செய்கின்றனர். ஆனால் வீட்டு வேலைகளில் ஈடுபடும் ஆண்களின் அளவு 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. ஹரியானா, இராஜஸ்தான், இமாச்சலபிரதேசம் மற்றும் குஜராத்தில் வீட்டு வேலை செய்யும் ஆண்களின் அளவு 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

பெண்களின் கைகளில் தான் நாட்டின் முன்னேற்றம் உள்ளது. நாட்டின் புதல்விகள் தேசிய பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், ரஃபேல் விமானங்களை ஓட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றனர். பெண்களின் மரியாதை மற்றும் சமத்துவ உணர்வின் அளவை உயர்த்துவதன் மூலம் மட்டுமே இந்தியா முன்னேற முடியும்.
அனைத்து பெண்கள்-சகோதரிகள்-புதல்விகள் வழியில் வரும் அனைத்து தடைகளையும் நீக்கும் உறுதியுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என பிரதமர் மோடி கடந்த காலங்களில் பேசி உள்ளார்.

( பெண்களுக்கு பொருளாதார அதிகாரவழிமளித்தல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரையின் ஒரு சிறுபகுதியே இது. (2023 மார்ச் 10) )

ஆனால் பெண்களின் பணிச் சுமையை குறைக்காமல் சமூக மாற்றத்தை கொண்டு வராமல் பெண்களுக்கான சரியான வளர்ச்சியை யாராலும் கொடுக்க இயலாது.

செப்டம்பர் மாதம் 23,24 ஆம் தேதிகளில் வெளியான தி இந்து ஆங்கில நாளிதழின் டேட்டா பாய்ன்ட் தரவுகளின் அடிப்படையில் இருந்து பத்திரிக்கையாளர் ச.நல்லேந்திரன்.

 

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *