மே.வ பெண் முதலவர் ஆட்சியில் பாலியல் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா?
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் (ஆர்.ஜி.கே) அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் (31) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.ஜி.கே மருத்துவமனை பணியாளர் சஞ்சய் ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சஞ்சய் ராய் சிபிஐ காவலில் உள்ளார்.
மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை கண்டித்தும், மாணவி மரணத்திற்கு நீதி வழங்க கோரியும், உண்மையான குற்றவாளியை கைது செய்யக் கோரியும், மருத்துவக் கல்லூரிகளில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரியும் மருத்துவர்கள், மாணவர்கள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமையில் கீழ் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கம், தில்லியில் கடந்த 5 நாட்களாக தொடர் போரட்டம் நடைபெற்று வருகிறது.
மருந்து ஊழலை அம்பலப்படுத்தியதற்காக கொலையா?
மாணவி வன்கொலை செய்யப்பட்டது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. ஆர்.ஜி.கே மருத்துவமனையில் மருந்துகளை கையாளும் பிரிவில் நிகழ்ந்த ஊழலை சுட்டிக்காட்டியதன் காரணமாகவே மருத்துவ மாணவி கொல்லப்பட்டதாகவும், இந்த கொலையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் மட்டுமின்றி மேற்கு வங்க அரசில் பணியாற்றி வரும் பல்வேறு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக மாணவியின் பெற்றோர்கள், நண்பர்கள், சக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கருத்தரங்கு அறை உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது ஏன்?
மாணவி கொலை செய்யப்பட்ட நாளான ஆகஸ்ட் 8 அன்று மருத்துவமனை பணியாளர் சஞ்சய் ராய் அனைத்து இடத்திற்கும் சென்றதாகவும், சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவக்கல்லூரியின் கருத்தரங்கு அறை டீனின் (மருத்துவமனை முதல்வர்) முழுக் கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த அறைக்கு செல்வதாக இருந்தால் டீனின் அனுமதி இன்றி யாரும் அங்கும் நுழைய முடியாது. மருத்துவமனையில் இப்படி ஒரு விதி உள்ள நிலையில், கொலை செய்யப்பட்ட மாணவி ஏன் கருத்தரங்கு அறைக்குச் சென்றார்? அவரை அங்கே அழைத்தது யார்? கொலை நடந்த நாளன்று கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் ஏன் அங்கு சென்றார்? அவரையும் அங்கே வர சொன்னது யார்? கொலை செய்யப்பட்ட பின்பு கருத்தரங்கு அறையை உடனடியாக சுத்தம் செய்ய சொன்னது யார்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது.
சிபிஐ விசாரணை வளையத்தில் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ்
மருத்துவ மாணவி கொலை சம்பவத்திற்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்த ஆர்ஜிகே மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷை கைது செய்யாமல், அவரை சிபிஐ அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து மூன்று நாட்களாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
42 மருத்துவர்கள் பணியிட மாற்றம் ரத்து
மருத்துவ மாணவி கொலை வழக்கை மூடி மறைக்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஆகஸ்ட் 16 அன்று மேற்கு வங்கத்தில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 42 மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்து அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை மூலம் உத்தரவிட்டது. இந்த இடமாற்ற உத்தரவில் ஆர்.ஜி.கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த, மருத்துவர்கள் சங்கீதா பால், சுப்ரியா தாஸ் இருவரது பெயரும் இடம் பெற்றிருந்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், குற்ற வாளிகளை பாதுகாக்கவே மேற்கு வங்க அரசு இந்த சர்ச்சைக்குரிய உத்தரவை வெளியிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்த பணியிடமாற்ற உத்தரவை மேற்கு வங்க சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது. மருத்துவ மாணவி கொலை வழக்கு தொடர்பாக உத்தரவும், பின்வாங்கலும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீது சந்தேகம் வலுப்பதாக அம்மாநில அரசியல் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுளளனர்.
மருத்துவமனையைச் சுற்றி ஊரடங்கு
சிபிஐ விசாரணை வளையமாக ஆர்.ஜி.கே மருத்துவமனை உள்ள நிலையில், மருத்துவமனையைச் சுற்றி பிஎன்எஸ்எஸ் 163 இன் கீழ் ஞாயிறன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு சட்டவிரோதமாக ஒன்று கூடு வதைத் தடுக்க ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது கொல்கத்தா மாவட்ட நிர்வாகம்.
90 டிகிரி அளவில் வளைந்த மாணவியின் கால்
மாணவியின் பிரேத பரிசோதனை முடிவில் பல்வேறு அதிர்ச்சி யூட்டும் தகவல் வெளியாகியுள்ளன. அதில்,”மாணவியின் தலையின் பல பாகங்களில் காயத்தின் அறிகுறிகள் உள்ளன. கால்கள் 90 டிகிரி அளவில் வளைத்து உடைக்கப்பட்டன. இரண்டு காதுகளிலும், உதடுகளிலும், கழுத்திலும் கடித்த அடையாளங்கள் உள்ளன. மிக முக்கியமாக அவரது உடலில் 150 மில்லி கிராம் விந்தணு இருந்தன” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கால்கள் 90 டிகிரி அளவில் வளைத்து உடைக்கப்பட்டது மற்றும் 150 மில்லி கிராம் உயிரணுக்கள் இருப்பது பற்றி ஆராய்ந்தால் மாணவி தனிநபரால் பாலியல் வன்கொலை செய்யப்படவில்லை. 150 மில்லி கிராம் உயிரணுக்கள் ஒரே ஒரு ஆணின் உடலில் இருந்து வெளியாக வாய்ப்பில்லை. அதனால் 2 அல்லது 3 நபர்கள் மூலம் மாணவியை பாலியல் கொலை செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
திரிணாமுல் கட்சியை சேர்ந்தவர்களும் கைது
மருத்துவ மாணவிக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையிலும், கொலை நடந்த இடத்தின் தடயத்தை அழிக்கும் நோக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று மருத்துவ மாணவர்களின் போர்வையில் ஆர்.ஜி.கே மருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்து 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவசர சிகிச்சை பிரிவு முற்றிலும் உருக்குலைந்த நிலையில், கொல்கத்தாவின் காளிகாட் போலீசார் இந்த சம்பவம் 19 பேரை கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என காளிகாட் காவல்நிலையத்தின் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியது திரிணாமுல் குண்டர்கள் என அம்மாநில காவல்துறையே தெரிவித்து விட்டது . ஆனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்குவங்க மாநிலச் செயலாளர் மீனாட்சி முகர்ஜி உட்பட 6க்கும் மேற்பட்ட இளம் இடதுசாரி தலைவர்கள் மீது மம்தா அரசு பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. என்ன காரணத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை கூற கொல்கத்தா காவல்துறை மறுத்துள்ளது.