பாலஸ்தீன குழந்தைகள் கொலையில் “மேட் இன் இந்தியா”
காசாவின் நுசிரத் அகதிகள் முகாமில் பாலஸ்தீன குழந்தைகளை ஏவுகணை தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் கொலை செய்த பிறகு அங்கிருந்த ஆயுதக்கழிவுகளில் “மேட் இன் இந்தியா”முத்திரையுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பாதுகாப்பு இடமாக காசாவின் நுசிரத் முகாமில் செயல்பட்டு வந்த ஐ.நா பள்ளிக்கூடம் மீது வியாழன் அன்று இரவு இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி 14 குழந்தைகள் உட்பட 40 பாலஸ்தீனர்களை படுகொலை செய்தது.
அந்த ஏவுகணை தாக்குதலுக்கு பின் ஆயுதக் கழிவுகளில் “மேட் இன் இந்தியா” என பொறிக்கப்பட்டிருப்பதை காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமுக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச அரங்குகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பதாக காட்டி வரும் இந்திய அரசாங்கம் மறுபுறம் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக அதி நவீன ஆயுதங்களுக்கான உபகரண கருவிகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்து வருகிறது.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் துவங்கியதில் இருந்து ஹெர்மஸ் -900 என்ற அதி நவீன ஆளில்லா போர் விமானங்களை பிரதானமான ஆயுதமாக இனப்படுகொலைக்கு இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தி வருகிறது. அந்த விமானங்களை அதானியின் ஆயுத நிறுவனமும் இஸ்ரேல் ஆயுத நிறுவனமும் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்து இந்திய துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படுகிறது.
இஸ்ரேலுக்கான ஆயுத உபகரண உற்பத்திக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இந்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. அது மட்டுமின்றி அரசு நிறுவங்களே ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளன என்ற தகவல்களும் கடந்த ஜனவரி மாதமே வெளியானது.
ஜனவரி மாதம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசுப் பொதுத்துறை நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (எம்ஐஎல்) இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்ப அனுமதிக்கப்பட்டது . அந்நிறுவன தரவுகளின் படி அந்நிறுவனம் தயாரித்த ஆயுதங்களை 2024 ஜனவரி முதல் இஸ்ரேலுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இஸ்ரேலிடம் இருந்து தொடர்ந்து வரும் ஆர்டர்களின் காரணமாக 2024 ஏப்ரல் 18 அன்று மீண்டும் அனுமதி பெற்றுள்ளது.
இதேபோல போர் துவங்கியதில் இருந்தே தெலுங்கானாவில் உள்ள பிரீமியர் எகிப்ளோசிவ்ஸ் என்ற தனியார் இரண்டு முறை இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்ளை பாகங்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.