Tamil Marx

ஆசியா சர்வதேசம்

அரசியல் பதட்டங்களுக்கு இடையே பாகிஸ்தான் தேர்தல்

அரசியல் பதட்டங்களுக்கு இடையே பாகிஸ்தான் தேர்தல்
  • PublishedFebruary 7, 2024

2024 ஆண்டு ஆப்பிரிக்காவில் 18, ஆசியாவில் 17, வட அமெரிக்காவில் 5, ஒசியானியாவில் 4, தென் அமெரிக்காவில் 2  மற்றும்  27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்ட  நாடுகளில்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதில் இந்தியா, அமெரிக்கா,இந்தோனேசியா மற்றும் நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஆகியவற்றிலும் தேர்தல் நடைபெற உள்ளது. 

நவதாராளமய நெருக்கடிகள்,போர்கள்,ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சைகள் மற்றும் மாறி  வரும் சர்வதேச அரசியல் சூழல் ஆகியவை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நடக்க உள்ள தேர்தலில் மிகப்பெரும் எதிர்ப்பார்புகளை  கிளப்பி உள்ளது.     

பிப் 8 அன்று பாகிஸ்தான்  அரசின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நாடாளுமன்ற தேர்தலும் வழக்கம் போல அரசியல் பதட்டங்கள் ராணுவத் தலையீடுகள் ஆகியவற்றுடனே நடைபெற உள்ளது.   

2018 தேர்தல் முதல்  பாகிஸ்தானில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்த இம்ரான்கான் தலைமையிலான தெக்ரான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ. ) கட்சி பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அக்கட்சிக்கான கிரிக்கெட் மட்டை சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. சின்னம் இல்லாத சூழலில் அக்கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரானுக்கும் பல வழக்குகளில் 31 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவை பி.டி.ஐ கட்சிக்கு பெரும் நெருக்கடியை உருவாகியுள்ள அதே சூழலில் பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு நீதிமன்றம் ஜனவரி மாதம் நீக்கியது.இது அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கு நல்ல வாய்ப்பாக உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் பி.டி.ஐ கட்சி சமூக வலைதள பிரச்சாரத்தின் மூலம் முந்தைய  நவாஸ்  ஆட்சியின் குறைபாடுகளை கொண்டு செல்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமும் அவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இவை எந்த அளவிற்கு பலன் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தேர்தல் முறை

இந்தியாவை போல் பாக்கிஸ்தானும் இரு அவைகளுடன் நாடாளுமன்றத்தை கொண்டுள்ளது.   பிப்  8 அன்று நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலும் பஞ்சாப், சிந்து, கேபி மற்றும் பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களின் சட்ட மன்ற  உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற உள்ளது.

மொத்தம் உள்ள  336  இடங்களில்  266 இடங்கள் நேரடி வாக்கு பதிவு மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.  இதில் பெண்களுக்கு 60 இடங்களும், சிறுபான்மையினருக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.  தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நாடாளுமன்ற மேலவையான செனட்டின் 100 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்), மவுலானா ஃபஸ்லுல் ஹக் தலைமையிலான ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் (ஃபஸ்ல்) மற்றும் இம்ரான்கான் தலைமையிலான  பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ. )  ஆகிய கட்சிகளும் இதர சில கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

பொருளாதார பிரச்சனைகள் 

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் வலையில் சிக்கிய பாகிஸ்தான் கடுமையான பொருளாஹார சேவையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.விலைவாசி உயர்வு, வறுமை, சுரண்டல்கள் , ஒடுக்குறை , ஊழல் மற்றும் மக்கள் விரோத சட்டங்களும் கொள்கைகளும்  தீவிரமாக அமல்படுத்தப்டுக்குவது  ஆகியவை மிக முக்கியமான பிரச்சினைகளாக எழுந்துள்ளன. ஆனால் ஆட்சியை பிடிக்க நினைக்கும் எந்த கட்சியும் இவற்றை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பிரச்சனைகளாக எழுப்ப விரும்பவில்லை.மாறாக இம்ரான் கான்  கட்சியின் ஊழல்களையும் முறைகேடுகளையும் மட்டுமே பேசி வருகின்றன. மேலும் அந்நாட்டு ராணுவத்தின் அரசியல் தலையீடுகள் நாட்டை எப்போதும் பதட்டமான சூழலிலேயே வைத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அரசியல் குழப்பத்திற்கு அமெரிக்கா முக்கிய காரணமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்ரான்கானின் கட்சியினர் நாட்டின் இறையாண்மை அமெரிக்காவின் அரசியல் அழுத்தங்கள் தங்கள் வெளியுறவு கொள்கைகளையும் கொரோனா கால சவால்களை அவர்களை எவ்வாறு கையாண்டார்கள் என்பதையும்  பிரச்சாரத்தில்  வெளிப்படுத்தி வருகின்றனர். 

இடது முன்னணி 

கடந்த தேர்தலில் இரண்டு எம்.பி க்களை வென்றெடுத்த  அஸ்பாந்தர் வாலி கான் தலைமையிலான அவாமி நேஷனல் கட்சி மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியாக தேர்தலை சந்திக்கின்றனர். மஸ்தூர் கிசான் கட்சி மற்றும் ஹக்கூக்-இ-கல்க் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தியுள்ளன. நாட்டின் பொருளாதார நெருக்கடிகள்,வேலையின்மை,வறுமை,விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பிரச்சனைகளாக எழுப்பி இடது ஜனநாயக முன்னணி பிரச்சாரம் செய்து வருகின்றது. 

கருத்துக் கணிப்புகள்

பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு டிசம்பரில் கேலப் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி  இம்ரான்கான்  கட்சி  தேசிய அளவில்  முன்னணியில் இருந்தது என்றும் அதன் பிறகு  சரிவை சந்திக்க துவங்கியதாகவும் அவர் மீதான வழக்குகளும் நெருக்கடிகளும் அவருக்கு மீண்டும் செல்வாக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. 

மேலும் நவாஷ் ஷெரிப் மீதான தடை நீக்கம் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் அரசியல் பதட்டம் உருவாகியுள்ள சூழலில் மறுபுறம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல்  மக்களிடையே வாக்களிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.இந்நிலையில் வரும் பிப்  8 அன்று பாக் நாடாளுமன்ற தேர்தலில் 12.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.   

நன்றி people’s dispatch

Translation சேது சிவன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *