Tamil Marx

சர்வதேசம்

சீனாவின் யுவான் அமெரிக்க டாலர் போன்ற ஆதிக்க நாணயம் ஆகுமா?

சீனாவின் யுவான் அமெரிக்க டாலர் போன்ற ஆதிக்க நாணயம் ஆகுமா?
  • PublishedApril 19, 2023

சீனா இன்றைக்கு உலகின் மிகப்பெரிய அன்னிய வர்த்தகம் செய்யும் நாடாக உள்ளது. உலக ஏற்றுமதி வர்த்தகத்தில் 18% சீனாவில் இருந்து போகிறது. பல நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக சீனா உள்ளது. எனவே, சீனாவில் உற்பத்தி செய்யும் சரக்குகளின் மதிப்பைத் தெரிவிக்கும், அதாவது சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நாணயமாக யுவான் உள்ளது.

உலகப் பொதுப்பணம் என்ற பிரச்சினையை இதுவரை உலகப் பொதுப்பணமாக செயல்பட்ட அமெரிக்க டாலர் (20ம் நூற்றாண்டில் தொடங்கி இன்று வரை), பிரிட்டிஷ் பவுண்ட் (20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை) ஆகியவற்றின் அடிப்படைகளில் இருந்து மட்டும் பரிசீலிக்காமல் சீனாவின் புதிய பாத்திரத்தின் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.

சீனா இன்றைக்கு உலகின் மிகப்பெரிய அன்னிய வர்த்தகம் செய்யும் நாடாக உள்ளது. உலக ஏற்றுமதி வர்த்தகத்தில் 18% சீனாவில் இருந்து போகிறது. பல நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக சீனா உள்ளது. எனவே, சீனாவில் உற்பத்தி செய்யும் சரக்குகளின் மதிப்பைத் தெரிவிக்கும், அதாவது சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நாணயமாக யுவான் உள்ளது.

எனவே, சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் தாம் ஏற்றுமதி செய்யும் சரக்குகளுக்கு யுவானை பெற்றுக் கொள்வதில் தடை ஏதுமில்லை. ஏனெனில், சீனா பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் (அதாவது அந்த நாடுகள் ஏற்றுமதி செய்யும்) சரக்குகளை விட அதிகமாக ஏற்றுமதி செய்கிறது (அதாவது பிற நாடுகள் அதிகமாக இறக்குமதி செய்கின்றன). அதாவது, சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் சீனாவுக்கு சாதகமாக உள்ளது. எனவே, பிற நாடுகளில் இருந்து தான் வாங்கும் பொருட்களுக்கு யுவானை கொடுப்பதாக சீன நிறுவனங்கள் கூறினால், அதை ஏற்பதற்கு அந்த நாட்டு நிறுவனங்கள் தயங்க வேண்டியதில்லை. இந்த நேர்வில் சீன நிறுவனங்கள் வாங்கும் இடத்தில் இருப்பதால், அவை இதைக் கோருவது ஒப்பீட்டளவில் எளிதாகவும் இருக்கும்.

அதுதான் பிரேசிலின் விஷயத்தில் நடந்திருக்கிறது.

சீனா, தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலுடன் சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. பிரேசில் சீனாவுக்கு இரும்புத் தாதுவையும், சோயாபீனையும் ஏற்றுமதி செய்யும் முக்கியமான நாடு, சீனாவுடன் அதிக அளவில் அன்னிய வர்த்தகம் செய்யும் நாடுகளில் 10-வது பெரிய நாடு. பிப்ரவரி மாதம் பிரேசிலும் சீனாவும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, பிரேசில் வர்த்தகத்துக்கும், முதலீடுகளுக்கும் யுவானை ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளது. பிரேசிலில் உள்ள ஒரு வங்கி யுவான் தீர்வைகளை செய்யும் வகையில், சீனாவின் Cross-border Interbank Payment System (CIPS) வலையமைப்பை பயன்படுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலும் சரி, ரஷ்யாவும் சரி தமது அன்னியச் செலாவணி கையிருப்புகளில் யுவானின் சதவீதத்தை அதிகரித்துள்ளன. ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கு யுவான் அல்லது ரூபிளில் நடத்தப்படுகிறது.

பிரேசில் தான் ஏற்றுமதி செய்யும் இரும்புத் தாதுவுக்கும், சோயாபீனுக்கும் யுவானை பெற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறது. அதே போல, ஈரான், ஈராக், ரஷ்யா போன்ற எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளையும் அதை ஏற்கும்படி செய்வது சிரமமாக இருக்காது. அத்தகைய ஒப்பந்தங்கள் ஏற்கனவே போடப்பட்டிருக்கின்றன. ஃபிரான்சுடன் இயற்கை எரிவாயு ஒப்பந்தம் யுவான் அடிப்படையில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி.

இப்போது சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளை பார்க்கலாம். பிரேசில், சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ரஷ்யா போன்ற நாடுகள் சீனாவில் இருந்து பெற்ற யுவான்களை பயன்படுத்தி சீன நிறுவனங்களுக்கு தமது கொடுப்புகளை செலுத்தலாம். அதற்கான ஒப்பந்தங்களை பெரிய சீன (அரசு) நிறுவனங்கள் போடும்படி செய்து கொள்ளலாம். எனவே, அந்த நாடுகள் தாம் பெறும் யுவான்களின் கணிசமான பகுதியை செலவிட்டு விடலாம். இந்நிலையில் இந்த நாடுகள் தமக்கிடையேயான வர்த்தகத்திலும் யுவான் கொடுக்கல் வாங்கல்களை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

இந்தோனேஷியா, வியட்நாம், கம்போடியா போன்ற சீனாவின் அண்டை நாடுகளும் சீனாவுடன் இத்தகைய ஒப்பந்தத்தைப் போட்டிருக்கின்றன. இந்த நாடுகள் சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்கின்றன. அதற்கு யுவானில் பணம் செலுத்தும்படி சீன நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். குறிப்பாக, வியட்நாமின் ஏற்றுமதிசார் இறக்குமதிகள், அதே போல வியட்நாம் சீனாவுக்கு அனுப்பும் இறக்குமதிசார் ஏற்றுமதிகள் இவை இரண்டுமே யுவானில் நடத்தப்படுவதில் சிக்கல் இருக்காது.

கூடுதலாக, சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் இணைந்துள்ள நாடுகளில் சீனா செய்யும் முதலீடுகளிலும், மேற்காசிய நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும், சர்வதேசரீதியில் மின்னணு பண பரிவர்த்தனைகளிலும் சீன நாணயத்தின் பயன்பாடு அதிகரிக்கும்.

சென்ற ஆண்டு (2022), 7.92 லட்சம் கோடி யுவான் அல்லது 1.15 லட்சம் கோடி மதிப்பிலான அன்னிய வர்த்தகம் யுவான் மூலமாக செய்யப்பட்டது. அது சென்ற ஆண்டை விட 39 சதவீதம் அதிகமாகும்.

நேரடி முதலீடுகளில் யுவான் மூலமாக நடந்த பரிவர்த்தனைகள் 16.6% அதிகரித்து 2022-ல் 6.76 லட்சம் கோடி யுவானை எட்டியது.

இவ்வாறு, யுவானுக்கான ஒரு சர்வதேசச் சந்தை உருவாகி வருகிறது. அது பொருள்/சேவை வர்த்தகத்துக்குத் தேவையான யுவான் பரிவர்த்தனைக்கான சந்தையாக மட்டுமே அமையும். அமெரிக்க டாலரும், யூரோவும், பிரிட்டிஷ் பவுண்டும், ஜப்பானிய யென்னும் தத்தமது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும். ஆனால், இப்போது இருப்பதை விட குறைந்த அளவிலேயே இது இருக்கும்.

அத்தகைய ஒரு நிலையில், சீன நிறுவனங்கள் அமெரிக்க ஏற்றுமதியாளர்களிடம் தாம் யுவானில்தான் பணம் கொடுக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கலாம். அதாவது சீன நிறுவனங்கள் தமது ஒப்பந்தத்தில் யுவானில் பணம் கொடுப்போம் என்று விதிக்கலாம். இதே போல ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடனும் செய்யலாம். ஆனால், இதை அமல்படுத்துவதோ அந்நாடுகள் இதனை ஏற்றுக் கொள்வதோ ஒப்பீட்டளவில் சிரமமானதுதான்.

அதே நேரம், தாம் அனுப்பும் பொருட்களுக்கு யுவானிலும் பணம் செலுத்தும் வாய்ப்பை சீன ஏற்றுமதியாளர்கள் இந்த நாட்டு இறக்குமதியாளர்களுக்கு வழங்கலாம். இப்படி படிப்படியாக, செங்கல் செங்கல் ஆக சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

ஆனால், பணத்தின் பயன்பாடு வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களில் மட்டுமின்றி சேமித்து வைப்பதிலும் முதலீடு செய்வதிலும் உள்ளது. இந்த வகையில், ‘சீனா யுவானை மூலதனக் கணக்கில் முழு மாற்றும் தன்மை உடையதாக ஆக்கவில்லை, எனவே யுவான் பொது நாணயமாக மாறுவது சாத்தியமில்லை’ என்று கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

இதைப் பற்றிப் பார்க்கலாம். இத்தகைய மூலதனக் கணக்கும் நிதிமூலதனப் பாய்ச்சலும்தான் அமெரிக்க டாலரை உலக மேலாதிக்க சக்தியாக உருவாக்கி பராமரித்து வந்தன.

நேரடியான உற்பத்தித் துறை முதலீடுகளைப் பொறுத்தவரை அவை பெரும்பாலும் பொருள் அல்லது சேவை ஏற்றுமதியாகவே நடக்கின்றன. சீனாவுக்குள் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனம் தனது சரக்குகளை அனுப்பும் போது மேலே விளக்கிய அதே முறையில் யுவானை பயன்படுத்தி கொடுப்புகளை தீர்க்கலாம். அதே நேரம், வெளிநாடுகளில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களும் (பெல்ட்-ரோட் திட்டம்) தனது முதலீடுகளை யுவானில் கணக்கு வைத்து அங்கிருந்து ஈட்டும் இலாபங்களை யுவானில் மாற்றி சீனாவுக்கு திருப்பி அனுப்பலாம். அந்த நாடுகள் ஏற்கனவே வர்த்தகத்தில் யுவானை பயன்படுத்த ஆரம்பித்திருந்தால் யுவான் புழக்கத்தில் சிக்கல் எதுவும் இருக்காது.

பிரச்சினை வரப் போவது, நிதிமூலதன முதலீடுகளில்தான். அதாவது நிறுவனங்களை இணைப்பது &கைப்பற்றுவது, பங்குச் சந்தை முதலீடுகள், பிற ஊக வணிக முதலீடுகளில்தான் மூலதனக் கட்டுப்பாடுகள் உள்ளன. அதைத்தான் இந்த நிதித்துறை மகான்கள் பேசுகிறார்கள். அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தா விட்டால், யூரோ டாலரைப் போல யூரோ யுவான் சந்தை உருவாகாமல் போகும், அல்லது பெட்ரோ யுவான் என்ற ஒன்று உருவாகாமல் போகும். இது வர்த்தகத்தை எப்படி பாதிக்கும்? நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு இடையேயான (ரிசர்வ் வங்கிகள்) ஒப்பந்தத்தின் மூலமாக, ஒரு பொதுவான ஒழுங்கமைப்பு முறையின் மூலமாகவே வர்த்தகம்/நேரடி முதலீடு தொடர்பான எல்லாச் செயல்பாடுகளையும் நடத்தி விடலாம்.

வர்த்தக மிகையை சேமித்து வைப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் வேண்டுமானால் மூலதனச் சந்தை தேவைப்படலாம். அந்த மூலதனச் சந்தையையும் மத்திய வங்கிகளுக்கு இடையேயான ஒரு சந்தையாக மாற்றி விட முடியும். அதாவது, கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மூலதனச் சந்தையில் இருந்து வேறுபட்ட ஒரு சந்தை உருவாகும். அதில் தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நேரடியாக பங்கு வகிக்கப் போவதில்லை, அந்தச் சந்தை நாடுகளின் ரிசர்வ் வங்கிகளின் கூட்டமைப்பின் மூலமாக இயக்கப்படும். கிட்டத்தட்ட 1945-க்குப் பிறகு பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சந்தையைப் போல இது செயல்படும்.

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க டாலர், யூரோ அல்லது பிரிட்டிஷ் பவுண்டின் வேண்டல் என்பது அந்தந்த நாடுகளில் இருந்து வாங்க வேண்டிய பொருள்/சேவைகளின் மொத்த விலைகளை மட்டுமே சார்ந்திருப்பதாக அமையும். அந்த நாடுகள் இன்னும் தொடர்ந்து நிதித்துறை ஊக வணிகத்தில் ஈடுபடுவதாக இருந்தால், அந்தச் சந்தை சுருங்கிப் போகும் இன்னும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும், அது கிட்டத்தட்ட மத்திய வங்கிகளால் இயக்கப்படுவதாக மாறிப் போகும்.

இப்போதைக்கு, சீன மக்கள் வங்கி 40 நாடுகளுடனும் பிராந்தியங்களுடனும் நாணய மாற்ற ஒப்பந்தங்களை போட்டிருக்கிறது. அதன் மூலம் வெளிநாடுகளில் யுவானுக்கான புழக்கத்தை பெற முடியும். அதாவது, இந்த நாடுகள் சீன மக்கள் வங்கியிடமிருந்து தம் நாட்டு நாணயத்தைக் கொடுத்து யுவானை பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஒப்பந்தங்களில் ஐரோப்பிய மத்திய வங்கியுடன் 35,000 கோடி யுவான் அளவிலான ஒப்பந்தமும் அடங்கும். இந்த ஒப்பந்தங்கள் அனைத்திம் மொத்த மதிப்பு 2021-ன் இறுதியில் 4 லட்சம் கோடி யுவானை விட அதிகம்.

மேலும், 29 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் யுவான் மூலம் பணம் செலுத்தும் அதிகாரத்தை வங்கிகளுக்கு சீனாவின் மத்திய வங்கி வழங்கியுள்ளது.

எனவே, வரப்போகும் நிதித்துறை கட்டமைப்பு என்பது நிதித்துறை கட்டமைப்பு என்று சொல்லக் கூடியதாக இருக்காது. அது சரக்குகளின் பரிவர்த்தனை, சேமிப்பு, முதலீட்டுக்கான நாணயக் கட்டமைப்பாக அமையும். அதில் நிதிச் சூதாட்டத்துக்கு இடம் இருக்கத் தேவையில்லை. பிரிக்ஸ் கூட்டமைப்பு போன்றவற்றின் கூட்டமைப்பு வங்கி அதற்கான ஒழுங்காற்றல் மையமாக அமையும்.

டெரிவேடிவ்ஸ் எனப்படும் பந்தயக் கருவிகள், நாடு விட்டு நாடு பாயும் ஓடு காலி பணம் இவை எல்லாம் தேவையற்று போய் விடும். இப்போதைய உலக நிதித்துறை கட்டமைப்பு அமெரிக்க-பிரிட்டிஷ் தனியார் மூலதனத்தின் தேவைகளுக்காக நவ-தாராளவாத அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஊக வணிகத்தை மையமாகக் கொண்ட ஒன்று. உற்பத்தியை மையமாகக் கொண்ட, சரக்கு வர்த்தகத்தை சுற்றிச் சுழலும் ஒரு உலகப் பொதுப்பணம் இதிலிருந்து வேறுபட்டதாக அமைய முடியும்.

அதற்கான கட்டமைப்பை சீனா செங்கல் செங்கல் ஆக எழுப்பி வருகிறது. அதில் இந்த நிதித்துறை ஜாம்பவான்கள் சொல்லும் ஆலோசனைகளும் விமர்சனங்களும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. சீனாவுக்குள்ளேயே இருக்கும் இந்த நவ-தாராளவாதிகளின் தாக்கம்தான் இதில் கவலைக்குரியது. மார்க்சிய பொருளாதாரத்தை படித்த யாரும் இந்த அமெரிக்க பைத்தியக்காரத்தனத்தை மீள் உற்பத்தி செய்யப் போவதில்லை

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *