Tamil Marx

கட்டுரைகள்

மோடி சொல்வதுதான் வரலாறா?

மோடி சொல்வதுதான் வரலாறா?
  • PublishedSeptember 8, 2022

இந்திய பிரதமர் மோடி இந்தியாவில் தயாரித்த விமானம் தாங்கி கப்பலை கப்பல் படையில் சேர்க்கும் நிகழ்ச்சியை அவருடைய இந்துத்துவா வரலாற்றுப் புரட்டலோடு ஆரம்பித்திருக்கிறார். மோடி பேசுவது மட்டும் வரலாறு ஆகாது. சத்ரபதி சிவாஜியை கடற்படையின் தந்தை என்று மோடி அழைத்து இருப்பது இந்துத்துவா நோக்கம் நிறைந்தது. சிவாஜியின் கடல் சக்தி காலனித்துவ சக்திகளை பயமுறுத்தியது என்று பேசி உள்ளார்.

சிவாஜி கடற்படை வைத்திருந்தது உண்மை. ஆனால் அவை ஐரோப்பியர்களுக்கு சவால் விடும் அளவில் இல்லை. உயர் கடல்களில் அவர்களை எதிர்த்து போராடும் திறன் இல்லை என்று பி கே ஆப்தே என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்களின் கடற்படை மராட்டிய போர்க்கப்பல்களை விட எல்லா வகையிலும் உயர்ந்தது என்று தெரிவிக்கிறார். சிவாஜியின் மராட்டிய கடற்படை கடற்கரைக்கு அருகில் செயல்படும் திறன் பெற்று இருந்தது. இவற்றை மராட்டிய கப்பல்படை புரிந்து வைத்திருந்தனர். இது மோடிக்கும் தெரியும். ஆனால் அவர் தனது இந்துத்துவ அரசியலுக்காக புரட்டிப் பேசுகிறார்.

மராட்டிய கடற்கரை கடலில் தங்களின் ஹிட் அண்ட் ரன் தந்திரங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினர். கடற்கரைக்கு அருகாமையில் மட்டும்தான் மராட்டிய படைகள் இவ்வாறு செய்ய முடியும். கனமான ஐரோப்பிய கப்பல்களில் இருந்து தப்பிக்க சிற்றோடைகள் மற்றும் விரிகுடாக்களுக்குள் தாக்கி விட்டு வந்து பதுங்கிக் கொள்ள முடிந்தது. ஆழ்கடலில் சென்று போரிடும் அளவுக்கு மராட்டிய கப்பற்படை இல்லை. மராட்டியர்களுக்கு எதிரிகள் ஐரோப்பியர்கள் மட்டுமல்ல. கொங்கன் பிரதேசத்தில் முகலாயர்கள் மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்திகள் ஆகியோரும் மராட்டியர்களுக்கு எதிராக போர் புரிந்தார்கள.

சத்ரபதி சிவாஜி இரண்டு காரணங்களுக்காக நாட்டின் முதல் நவீன ராணுவ தலைவராக அழைக்கப்படுகிறார். முதலாவதாக அவர் தொழில் முறை இராணுவத்தை உருவாக்கி இருந்தார். ராணுவ வீரர்களுக்கு மத்திய கருவூலத்திலிருந்து ஊதியம் வழங்கப்பட்டது. இந்தியாவில் அதுவரை இந்திய மன்னர்களிடம் இல்லாத வழக்கமாக இது இருந்தது. இரண்டாவதாக ராணுவத்தில் ஆட்ககளை சேர்ப்பதில் சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் ஆட்களை சேர்த்தார். அவரது கப்பற்படை தளபதிகளில் இருவரில் ஒருவர் தொளலத்கான் என்ற முஸ்லிம் மற்றொருவர் நாயக் பண்டாரி. சிவாஜியின் படையில் பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமிய தளபதிகள் இருந்தனர். இப்ராஹிம் கார்டீ என்று முஸ்லிம் பீரங்கி படை தளபதியாகவும் கப்பற்படை தளபதியாகவும் இருந்துள்ளார் .

பிரதமர் மோடியின் இந்துத்துவா சித்து விளையாட்டுகளுக்கு எதிராக ஒரு இந்து மன்னன் அதாவது சிவாஜி இந்துத்துவாவின் நான்கு (எல்லா வகையிலும்) முனைகளுக்கும் எதிரியாக இருந்தான் என்பதை வரலாற்றில் நாம் அறிந்து கொள்ள முடியும். இவற்றையெல்லாம் புரட்டிப் போடும் வேலையை ஆர்எஸ்எஸ் வகையறாக் கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய கடற்படையின் தந்தை என்று சொல்லி மோடி வரலாற்றை மாற்றி போடுவது தவறானதாகும். உண்மையில் இந்திய கடற்படை பம்பாயில் சிவாஜியுடன் சண்டையிட்ட ஆங்கிலேய கடப்படையிடமிருந்து உருவானது.

1798 ஆம் ஆண்டில் பம்பாய் மரைன் என்ற பெயரில் உருவான கடற் படை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய பெருங்கடலில் பிரிட்டிஷாரின் மேலாதிக்கத்தை நிறுவுவதில் பெரும் பங்கு வகித்தது. 1830 ஆம் ஆண்டில் இது இந்திய கடற்படையாகவும், 1878 ஆம் ஆண்டு ராயல் இந்திய மரைன் என்ற பெயரிலும், அதன் பிறகு ராயல் இந்திய கடற்படை என்றும் பிறகு இந்திய கடற்படை என்று பெயர் மாறியது. இந்திய மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை இட்டுக் கொண்டு பிரிட்டிஷாரோடு சேர்ந்து படை எடுத்தார்கள் என்பதையும் அவர்களின் ஒத்துழைப்பால் தான் பிரிட்டிஷார் இந்தியாவை கைப்பற்ற முடிந்தது என்பதையும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறாத மோடி வகையறாக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2022 ஆம் ஆண்டு பம்பாய் கப்பல் படையில் நின்று கொண்டு கப்பற்படை கொடியை மாற்றி சிவாஜியின் ஒரு சின்னத்தை அதில் சேர்த்து காலனித்துவ நுகத்தடி தூக்கி எறியப்பட்டது என்று வீராப்பு பேசும் வெட்டித்தனமான செயல்களை பிரதமர் செய்து கொண்டிருக்கிறார். இந்த வரலாற்றுப் புரட்டர்களுக்கு இந்திய கப்பற்படை உடன்பட்டு இருப்பது வேலிக்கூத்தான கண்டனத்திற்குரியது.இந்திய கப்பற்படை, கடல் சார் பாரம்பரியம் நீண்ட நெடியது.

வரலாற்றின் தலைசிறந்த கடல் தளபதியான ராஜேந்திர சோழனை புறக்கணித்து கப்பல் படையை பேச முடியாது. சோழர்களின் சாதனை மராத்தியர்களை விட பெரியது. வங்காள விரிகுடாவில் பயணம் செய்து ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை(சுமத்ரா) வெற்றி கொண்டு, ஜாவா, சுமுத்ரா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல பரந்த பகுதியில் இந்திய மேலாதிக்கத்தை நிறுவியது சோழர் சாம்ராஜ்யமே. இது பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. ஒரு கடற்படையின் உண்மையான வலிமை அதன் தாக்குதல் கருவியாகும். கடப்படையை தற்காப்புடன் மட்டுமே பயன்படுத்துவது பலவீனத்தின் அடையாளமாகும்.இதற்கு முன்பாக சாதவாகனர்களும் கடற்படை வைத்திருந்தனர்.

கலிங்கர்கள் கடல் சார் நடவடிக்கை செயல்முறையின் முன்னோடிகள் அவர்களின் சாதனைகள் தென்கிழக்கு ஆசியாவில் சோழர்களின் வெற்றிக்கு முந்தையவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கடல்சார் நடவடிக்கைகள் இந்தியாவில் பாரம்பரியமாக இருந்துள்ளது. வேதங்கள், பௌத்த ஜாதகங்கள் மற்றும் சமஸ்கிருதம், பாலி இலக்கியங்கள் மூலமாக மொகஞ்சாதாரோ, லோதல், ஹரப்பா, ஆகிய அகல் ஆய்வுகள் மூலமும் தமிழ், கொங்கணி,குஜராத்தி, சிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் ஒரியா போன்ற கடலோர மொழிகளில் உள்ள இலக்கியங்களும் சீன அரபு மற்றும் பாரசீக இலக்கியங்கள் மற்றும் ஐரோப்பிய எழுத்துக்கள் போலவே இந்திய பாரம்பரியத்தை பற்றி நமக்கு தெரிவிக்கின்றன.

ஆர் எஸ் எஸ் ன் வழித்தோன்றிகள் வரலாற்றை புரட்டிப் பேசுவதின் மூலமாக மக்களை இந்துத்துவ ஆதரவாக மாற்ற முயற்சிக்கிறார்கள். அம்பலப்படுத்துவோம்.

🖋️:-) அ. பாக்கியம்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *