Tamil Marx

கட்டுரைகள் வேலையின்மை

அக்கினிபாத்! அழிவுபாத்!

அக்கினிபாத்! அழிவுபாத்!
  • PublishedJune 17, 2022

“வட மாநிலங்களில் தொழில்துறை வளர்ச்சி பெரிய அளவில் இல்லாத நிலையில் அரசு வேலையையே பலரும் நம்பி இருக்கின்றனர். இராணுவத்தில் சேருவதை கவுரவமாக கருதும் இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொள்ள தேவையில்லை என்றும் நினைக்கின்றனர்”.

பா.ஜ.க. ஒன்றிய அரசு இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையிலான முறையில் (அக்கினிபாத்) ஆட்களை பணிக்கு எடுக்கவுள்ளதாக அத்திட்டம் இந்தாண்டே நடைமுறைப்படுத்தப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார். அதாவது இந்தியாவின் முப்படைகளிலும்( இராணுவம், கப்பற்படை, விமானப்படை) 4 வருடத்திற்கு மட்டும் 46 ஆயிரம் பேரை ஆண்,பெண் இருபாலரையும் நியமிக்க உள்ளதாகவும் அதற்கு மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்த்துள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

இத்திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆட்களை சேர்ப்பது என்பது தனியார்மயத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக இராணுவத்தில் ஆள் எடுக்கும் பணி நடைபெறவில்லை தற்போது இந்தாண்டே ஒப்பந்த முறையில் தற்காலிக பணிமுறையை பின்பற்ற போவதாக அறிவித்திருக்கும் நிலையில், பீகார் , உ.பி., ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் படித்து முடித்த இளைஞர்கள் இதற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

‘அக்கினிபாத்’ என்ற திட்டத்தின் மூலம் 46 ஆயிரம் பேரை 4 வருடத்திற்கு பாதுகாப்பு பணிக்கு எடுக்கும் அரசாங்கம் அதன்பிறகு எவ்வித ஓய்வூதிய தொகையுமின்றி விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. இந்த நான்கு வருடங்களில் நன்கு திறம்பட செயல்பட்ட 25% வீரர்களை மட்டும் கூடுதலாக 15 வருடத்திற்கு “அக்கினிவீர்” திட்டத்தின் மூலம் பணியில் தக்கவைக்கப்படுவார்கள் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்த திட்டத்தில் 4 வருடத்திற்கும் தனித்தனியாக வருடத்திற்கு ஒரு பிரிவு ஊதியமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் வருடத்திற்கு ரூ.30,000-ம், இரண்டாவது ஆண்டில் ரூ.33,000-ம், மூன்றாவது ஆண்டில் ரூ. 36,500-ம், நான்காவது ஆண்டில் ரூ.40,000-ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளியின் மாத சம்பளத்தில் 30% பிடித்தம் போக மீதி பணம்தான் மாத ஊதியமாக கிடைக்கும். இந்த தொகையோடு சேர்த்து அரசாங்கமும் அவரது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வரவு வைக்கிறது. இத்தொகையை 4 வருடம் கழித்து “சேவா நிதி” என்று 11.67 லட்சம் வழங்குகிறது.

“அக்கினிபாத்” திட்டத்தின் மூலம் இராணுவத்தை இளைஞர்கள் பலம் பொருந்திய பட்டாளமாக மாற்றப்போவதாக கூறியிருக்கிறார்கள். இத்திட்டத்தின் மூலம் சேர்வதற்கான வயது 17.5 முதல் 23 வயது என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இராணுவத்தில் இளைஞர்களின் சராசரி வயது 32-லிருந்து 26 என்ற அளவில் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதே முறையில் பெண்களும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் ஆனால் பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சில ஆண்டுகள் இத்திட்டத்தின் மூலம் இராணுவ சேவையாற்ற முடியும் என அரசு தரப்பில் வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் உண்மைநிலை என்னவெனில் “தேசப்பற்று” எனும் பெயரில் ஆளும் வர்க்கம் இராணுவம் மற்றும் காவல்துறையை எளிய மக்கள் மீதான அடக்குமுறை கருவிகளாகவே இதுவரை பயன்படுத்தி வந்துள்ளது. அமைதியாக போராடும் மக்கள் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தும் இராணுவத்தினர் தேசப்பற்று எனும் வெற்று கோசத்தினால் மக்களுக்கு எதிரானவர்களாக மடைமாற்றப்பட்டுள்ளனர். சில சமயங்களில் வலதுசாரிகளின் அரசியல் ஆதாயத்திற்காகவும் அப்பாவி இராணுவ வீரர்கள் பலிகடாவாக்கபடுகின்றனர்.

ஒப்பந்த அடிப்படையிலான பணியில் வேலை பார்க்கும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வித கோரிக்கைகளுமின்றி வெளியேற்றப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் வாழ்வாதரத்தை உறுதிபடுத்தாத அரசாங்கம் அவர்களுக்கு பணி சான்றிதழையும், வங்கிகள் மூலம் கடன் வழங்க உதவுவதாகவும் கூறிவருகிறது. அதையும் பெயரளவுக்குதான் குறிப்படுகிறதே தவிர எவ்வித முயற்சியோ, உத்தரவாதமோ அரசு தரப்பில் அளிக்கப்படாது என சொல்லப்பட்டுள்ளது.

இராணுவத்தில் பணிபுரியும் மற்றும் ஒய்வுபெற்றவர்களுக்கான எந்தவித சலுகைகளுகளும் அக்கினிபாத் திட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளதே இளைஞர்கள் நெஞ்சில் கனலை பற்ற வைத்துள்ளது. இந்தியாவில் மோடி ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. 2 ஆண்டுகள் கொரோனா பொது முடக்கத்தால் எந்த வேலைவாய்ப்பும் பெருகவில்லை என்பதோடு இருக்கின்ற வேலையும் பறிபோகும் நிலைக்கு தள்ளியது. “வட மாநிலங்களில் தொழில்துறை வளர்ச்சி பெரிய அளவில் இல்லாத நிலையில் அரசு வேலையையே பலரும் நம்பி இருக்கின்றனர். இராணுவத்தில் சேருவதை கவுரவமாக கருதும் இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொள்ள தேவையில்லை என்றும் நினைக்கின்றனர்”. இவையெல்லாம பறிபோகும் ஆதங்கமே இரயில்களுக்கும், பொதுச்சொத்துகளுக்கும் தீவைக்கும் கோபாவேச நிலைக்கு இளைஞர்களை தள்ளியுள்ளது.

நான்கு ஆண்டுகள் அனைத்துவிதமான பயிற்சிகளையும், ஆயுத சோதனைகளையும் சொல்லி கொடுக்கும் அரசாங்கம், பணிநீக்கத்திற்கு பிறகான பின்விளைவுகளை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் இளம் வாலிபர் ஒருவர் விரக்தியின் காரணமாக வீட்டில் இருந்த பாட்டியை சுட்டு தள்ளிவிட்டு, அருகிலிருந்த பள்ளிக்கூடத்தில் புகுந்து அப்பாவி குழந்தைகளையும் சரமாரியாக சுட்டு தள்ளினார். இச்சம்பவமெல்லாம் ஆயுத கலாசாரத்திற்கு ஒர் உதாரணம். ஏனெனில் சமீபகாலமாக இந்தியாவில் துப்பாக்கி உரிமம் வகைதொகையின்றி எவ்வித விசாரணையும் இல்லாமல் வழங்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அக்கினிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையானது (5,25,166 கோடி 2022-பட்ஜெட்) முழுமையாக பயன்படுத்தப்படும் என அரசாங்க தரப்பில் சொல்லப்படுகின்றது. ஏனென்றால் ஒதுக்கப்படும் நிதியில் 1 லட்சம் கோடி ஒய்வூதியத்திற்கும், 2.5 லட்சம் கோடி வீரர்கள் சம்பளத்திற்கே செலவாவதாக வேதனைப்படுகிற அரசாங்கங்கள் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு உடையிலும், போர் விமானங்கள் வாங்குவதிலும் ஊழல் செய்துள்ளன என்பதை மக்களிடமிருந்து மூடிமறைத்துள்ளன.

இராணுவத்தை நவீன அளவில் மேம்படுத்துவதற்கான திட்டம் என்று மார்தட்டி கொள்ளும் பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு ஆயுத தயாரிப்பிலும், அக்கினிபாத் திட்டத்திற்கு ஆட்களை பயிற்சி நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யவிருக்கிறது. இவையெல்லாம் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கே வழிவகுக்கும் நடைமுறைகள்.

சமூக பாதுகாப்புடன் கூடிய பொதுத்துறை வேலையே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். அதுவே நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது, ஆனால் பெரும் முதலாளிகள் நலன் அரசு அதையெல்லாம் தன் அதிகார பலத்தின் மூலம் இல்லாமல் ஆக்கி வருகிறது. அதன் ஒர் அங்கமே ‘அக்கினிபாத்’ இதற்கு எதிராக தொடக்கத்திலேயே இளைஞர்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருப்பது நல்ல அறிகுறி. ஆனால் சரியான அரசியல் தலைமை இல்லாமல் நடக்கும் ஒவ்வொரு எதிர்ப்பு போராட்டங்களும் வன்முறைகளாக போராடுபவர்களுக்கு எதிராகவே திசை திரும்பும் அது ஆளும் வர்க்கத்திற்கே பலனளிக்கும்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *