Tamil Marx

உக்ரைன்-ரஷ்யா போர் சர்வதேசம்

உக்ரைனின் இந்நிலைக்கு காரணம் ரஷ்யாவா? மேற்குலகமா?

உக்ரைனின் இந்நிலைக்கு காரணம் ரஷ்யாவா? மேற்குலகமா?
  • PublishedMarch 24, 2022

பெரும்பாலான மேற்கத்திய ஊடகங்களின் விமர்சனங்களுக்கு மாறாக, உக்ரேனில் அதிகரித்து வரும் போர் நெருக்கடியானது விளாடிமிர் புடினின் மனநிலையின் விளைவு அல்ல. அது எதோ மெல்லிய காற்றினால் விழுந்த தூசியும் அல்ல. பல ஆண்டுகளாக வீசும் புயலின் உச்சக்கட்டத்தையே உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் குறிக்கிறது.

இந்த சூழ்நிலையில் இரண்டு முக்கிய கூறுகளை புரிந்து கொள்வது அவசியமானது.

முதலாவது ரஷ்யாவின் பாதுகாப்பு பிரச்சினை. 1989-90ல் மேற்கு – கிழக்கு ஜெர்மனியை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்து சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவ் மற்றும் அவரது குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, ​​மேற்கத்திய நாட்டு தலைவர்கள் நேட்டோ அமைப்பானது தன் எல்லைகளை கிழக்கு நோக்கி நீட்டிக்க முயலாது என்றும் ரஷ்யாவின் சட்டபூர்வமான பாதுகாப்பு கவலைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்ற உறுதிமொழிகளை அளித்து இருந்தது. ஆனால் சோவியத் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்கா, நேட்டோ விரிவாக்கத்தினை கிழக்கு  நோக்கி ரஷ்யாவின் எல்லைப்புற பகுதிக்கு செலுத்தியது. மேலும் நவீன தாக்குதலுக்கான தனது மூலோபாய ஆயுதங்களையும் நிலைநிறுத்தியது. 1990-ம் ஆண்டு வார்சாவ் ஒப்பந்தத்திற்கு பிறகு மத்திய, கிழக்கு ஐரோப்பாவின் 14 நாடுகள் நேட்டோவில் இணைந்துள்ளன. இது சோவியத் ஒன்றியத்திற்கு (அதாவது ரஷ்யாவிற்கு) உறுதியளித்த அப்பட்டமான விதிமீறலாகும்.

2014-ம் ஆண்டு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனில் ஒரு ஆழமான சதித்திட்டத்தில் ஈடுபட்டன. அதன் மூலம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் விக்டர் யானுகோவிச் அரசாங்கத்தை கவிழ்த்து ரஷ்யாவிற்கு எதிரான மற்றும் மேற்குலக சார்பு அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியது. இந்த அரசாங்கமானது நேட்டோ உறுப்பு நாடுகளுடன் நட்புறவை பேணியும் அவற்றுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளது. மேலும் அமெரிக்காவிடமிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை வாங்கி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ரஷ்யா ஏன் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது  கடினமானதல்ல.

அமெரிக்க கண்டத்தின் மெக்சிகோ சீனா தலைமையிலான இராணுவக் கூட்டணியில் சேரும் போது அமெரிக்கா அதனை கைகுலுக்கி வரவேற்கப் போவதில்லை. அதுபோல்தான் அமெரிக்காவோ ரஷ்யாவோ, பிற நாடுகளின் இராணுவத்தை தங்கள் வீட்டு வாசல் வரை வருவதை விரும்பவில்லை.

ரஷ்யாவும், உக்ரைனும் சுமார் 2,000 கிலோமீட்டர் நிலபரப்பு எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. ரஷ்யாவை ஒரு மூலோபாய எதிரியாக வெளிப்படையில் அடையாளம் காட்டி அணுசக்தி ஒப்பந்தத்தில் உக்ரைன் அங்கத்துவம் பெறுவதை ரஷ்யா எச்சரிப்பது நியாயமானது. நேட்டோ அமைப்பு சில சமயங்களில் மேற்குலகில் ஒரு தற்காப்பு கூட்டணியாக சித்தரிக்கப்படும் அதே வேளையில், ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் யூகோஸ்லோவியாவில் அதன் நடவடிக்கைகள், சீன தூதரகத்தின் மீது குண்டுவீச்சு என மிகவும் அச்சுறுத்தலான செயல்களையே செய்து வருகிறது.

இரண்டாவது அடிப்படை பிரச்சினை கிழக்கு உக்ரைனின் டான்பாஸ், லூகான்ஸ்க் பகுதி மக்கள் மீதான அடக்குமுறையாகும். இந்த பிராந்தியத்தின் பெரும்பான்மையான மக்கள் ரஷ்ய இனத்தவர்கள். இம்மக்கள் தாய்மொழியாக ரஷ்ய மொழி பேசுகிறார்கள் மற்றும் மேற்கு நாடுகளை விட ரஷ்யாவை நோக்கியே கலாச்சார ரீதியாக சார்ந்திருக்கின்றனர். இதனாலேயே இம்மாகணத்திலிருந்து அதிபரான யானுகோவிச் அரசாங்கத்தை அமெரிக்க கூட்டுச்சதியுடன் கவிழ்த்தனர். 2014-ல் நிறுவப்பட்ட ரஷ்ய எதிர்ப்பை கையாளும் வலதுசாரிகளின் கீவ் அரசாங்கத்தை நிராகரித்து டான்பாஸ், லூகான்ஸ்க் பகுதிகளை தன்னாட்சி பிரேதசமாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர். அந்த ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்புகளிலும் டான்பாஸ், லுகான்ஸ்க்கில் முறையே 89 சதவீதம் மற்றும் 97 சதவீத மக்கள் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பொதுவாக்கெடுப்பு முடிவுகளை கூட அங்கீகரிக்க மறுத்த உக்ரைன் அரசாங்கம், கூட்டாட்சி அமைப்பிற்குள் சுயாட்சியை வழங்க மறுத்தது. டான்பாஸ் மீது ஒரு கொடூரமான உள்நாட்டுப் போரை கட்டவிழ்த்துவிட்டனர். உக்ரேனிய இராணுவத்துடன் நவ-நாஜி அமைப்புகளும் கொண்ட துணை ராணுவத்தினரால் ரஷ்ய இன அழித்தொழிப்பு நடத்தப்பட்டது. அதில் இருந்து டான்பாஸ் மாகாணம் மீது தினசரி ஷெல் தாக்குதல்கள் உக்ரைன் இராணுவத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் உள்பட 13,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட இதனை அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இனப்படுகொலை என கருதியது.

இந்த பயங்கரவாத சம்பவம் ரஷ்ய மொழி, கலாச்சாரத்தின் மீதான தாக்குதலுடன் சேர்ந்தது. பள்ளிகள்,கல்லூரிகள் பிற உத்தியோகபூர்வ சூழல்களில் ரஷ்ய மொழியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மொழி பேசுபவர்கள் அல்லது ரஷ்ய சார்புடையவர்கள் என்று கருதப்படுபவர்களின் சிவில் சேவையின் தரவரிசைகள் பெருமளவில் அகற்றப்பட்டுள்ளன. மேற்கத்திய ஊடகங்களும், அரசியல்வாதிகளும் சீனாவின் ஷின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியத்தில் போலியாக கட்டமைக்கப்படும் உய்குர் முஸ்லீம் மக்களின் இனப்படுகொலையை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில் அவர்கள் உக்ரைனின் ரஷ்ய கலாச்சார இனப்படுகொலையில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

2014-ம் ஆண்டு முதல் ரஷ்யாவின் இராஜதந்திர முயற்சிகள் இந்த இரண்டு முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன: டான்பாஸின் ரஷ்ய மொழி பேசும் மக்களைப் பாதுகாத்தல் மற்றும் ரஷ்யாவின் எல்லைகளை நேட்டோ ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்தல். இந்த இரண்டு பிரச்சினைகளை தீர்ப்பதிலும் வாஷிங்டன் மற்றும் கீவ் அரசாங்கங்கள் ஆர்வமில்லாமலேயே செயல்ப்பட்டு வருகின்றன. அமெரிக்கா தான் கையெழுத்திட்ட உக்ரைன் மின்ஸ்க்-2 உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவும், கிழக்கு உக்ரைன் பகுதி மக்களின் உரிமைகளை மதிக்கவும் மறுத்துவிட்டது. இதற்கிடையில் கீவ் அரசு நிர்வாகம் நேட்டோவின் உறுப்பினராக தொடர்ந்து கூக்குரலிடும் அதே நேரத்தில் உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் நோக்கில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

யுத்தத்தை விட சமாதானத்தையே உண்மையாக அமெரிக்க அரசாங்கம் விரும்புமானால், இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்கா தலைமை தாங்க முடியும்.

பிப்ரவரி 21-ம் தேதி ரஷ்யா, டான்பாஸ், லுகான்ஸ்க் “குடியரசுகளை” அங்கீகரித்து அப்பகுதியில் உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையை தொடங்குகிறது என புடின் அறிவித்தார்.  ஆனால் இந்நடவடிக்கையானது டான்பாஸ் மக்களுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறது. உக்ரேனிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா உறுதியளித்தாலும் இத்தகைய நடவடிக்கைகள் கூடுதலான கவலையே அளிக்கிறது. ஏனென்றால் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுடன் கூடிய  இராணுவ நடவடிக்கைகளே எளிதில் கட்டுப்பாட்டை மீறும். ஆனால் இங்கு இப்போரினை நிறுத்தும் அடிப்படை பொறுப்பு மேற்குலக நாடுகளிடமே உள்ளது. வாஷிங்டன், லண்டன் மற்றும் கீவ் அரசாங்கங்கள் ரஷ்யாவின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன.

உலகெங்கிலும் உள்ள மக்கள் கேட்கிறார்கள் நேட்டோ ஏன் இன்னும் இருக்கிறது? ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பிற்கு வெளியே இருப்பதற்கு ஒரு ஆக்கிரமிப்பு, பிரத்தியேக, அணுசக்தி பயன்பாட்டு இராணுவ கூட்டணிக்கான தேவை என்ன என்பதே? வெளிப்படையாக கூறுவதென்றால், 1951 முதல் 1991 வரை சோவியத் பனிப்போரின் இராணுவ கட்டமைப்பாக பணியாற்றிய நேட்டோ, இப்போது ஒரு புதிய பனிப்போரின் இராணுவ கட்டமைப்பின் மையமாக உள்ளது. நேட்டோவானது AUKUS மற்றும் Quad அமைப்புகளுடன் இணைந்து ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் சுதந்திரமான எதிர்காலத்தை நோக்கி செயல்படும் அனைத்து நாடுகளையும் குறிவைத்து உலகளாவிய கட்டுப்பாட்டு பொறிமுறையை உருவாக்குகிறது.

உக்ரேனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி விரைவாகவும், குறைந்தபட்ச உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளுடன் தீர்க்கப்படும் என்றே எதிர்பார்க்கிறோம். அதற்கு நேட்டோ அதன் விரிவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவர உறுதியளிக்க வேண்டும். உக்ரைன் நடுநிலைமையை கடைபிடிக்க வேண்டும். அதுவே உக்ரைன் மக்கள் மீதான நெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியும்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *