Tamil Marx

இ.எம்.எஸ் கட்டுரைகள்

முழு விடுதலை என்று முதலில் முழங்கியது கம்யூனிஸ்ட்டுகளே..! இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்..Part 4

முழு விடுதலை என்று முதலில் முழங்கியது கம்யூனிஸ்ட்டுகளே..! இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்..Part 4
  • PublishedJanuary 25, 2022

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள்.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் உறவுகளில் முறிவு..

மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களின் பின்னணியில், இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னும், துவங்கிய பின்னும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவுகளில் முறிவு ஏற்பட துவங்கியது. கேரளத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் உள்பட சில மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் மட்ட அளவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கிளைகள் தங்களை தாங்களே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றிக் கொண்டன. இதுபற்றி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வரலாற்றாளர்கள் அவதூறு செய்யும் விதத்தில் எழுதினார்கள். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு அக்கட்சியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஊடுருவி விட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பழி சுமத்தினார்கள். அப்படி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் ‘ஊடுருவியதாக’ அவதூறு செய்யப்பட்டு பழிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இந்த நிலையில், அது தொடர்பான உண்மைகளை நான் சொல்ல வேண்டும். 1934 அக்டோபரில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதலாவது மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அகில இந்திய இணைச் செயலாளர்களில் நானும் ஒருவன். மாசானி, கோரே மற்றும் கவுதம் ஆகிய மூவர் மற்ற இணைச் செயலாளர்கள் ஆவர்.

அதேபோல பம்பாயில் நடைபெற்ற மாநாட்டில் கேரளாவிலிருந்து கிருஷ்ணபிள்ளை, ஏ.கே.கோபாலன் ஆகியரோடு நானும் கலந்து கொண்டேன். உண்மையில் எங்களில யாரும் அதற்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கிடைக்கப் பெற்றவர்கள் அல்லர். எனவே, “ஒரு கம்யூனிஸ்ட்டான இஎம்எஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் ஊடுருவ அனுமதிக்கப்பட்டுவிட்டார்” என்ற கேள்விக்கே இடமில்லை.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பம்பாய் மாநாடு நடந்து ஓராண்டுக்குப் பிறகுதான் தோழர் கிருஷ்ணப்பிள்ளையும், நானும் தோழர் சுந்தரய்யா மூலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான முதல் தொடர்பு கிடைக்கப் பெற்றோம். இந்த முதல் தொடர்பு கிடைக்கப் பெற்று சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகுத்தான் 1937 ஆம் ஆண்டில், கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டது.

இந்த ஒட்டுமொத்த காலக்கட்டத்திலும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள் சோசலிசத்திற்காகவும், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம் மற்றும் இதர வெகுஜன அமைப்புகளையும் உருவாக்குவதற்காகவும் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியை ஒரு முற்போக்கான, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனமாக வளர்த்தெடுக்கும் நோக்கத்துடனும் மிகவும் நேர்மையான, பற்றுறுதி மிக்க ஊழியர்களாகவே செயல்பட்டார்கள். கேரளத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இவர்கள் மேற்கொண்ட உறுதிமிக்க பணியினால்தான் அங்கு தொழிற்சங்கமும், விவசாயிகள் இயக்கமும் வளர்ந்தன; இந்தப் பணிகள்தான் எங்களை கேரளத்தின் தலைவர்களாக வளர்த்தெடுத்தன. அதனொரு பகுதியாகத்தான் நாங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக செயல்பட்டோமே தவிர; கேரளத்தில் தொழிற்சங்கமும், விவசாயிகள் இயக்கமும் வளர்ந்ததே தவிர, தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்ப்பாளரான மாசானி மற்றும் கும்பலின் கருணையினால் அல்ல. இதனொரு பகுதியாகத்தான், நான் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் கூட.

இன்னும் சொல்லப்போனால், தோழர்கள் கிருஷ்ணப்பிள்ளை, ஏ.கே.கோபாலன் மற்றும் நான் ஆகிய மூவரும் எங்களது சொந்த உரிமையின் அடிப்படையிலேயே காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களாக இருந்தோமே தவிர ஜெயப்பிரகாஷ் நாராயணனாலோ அல்லது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு “வரலாற்றாளர்கள்” குறிப்பிடுவது போல மக்களை நம்ப வைப்பதற்காக வேறு சிலராலோ கட்சிக்குள் கொண்டுசெல்லப்பட்டவர்கள் அல்ல. அப்படியானால், கேரளத்தின் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஏன் ஒட்டுமொத்தமாக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது? ஏனென்றால், கேரளத்தின் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், சோவியத் ஒன்றியம் தனது முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் மேற்கொண்ட மிகப்பிரம்மாண்டமான நடவடிக்கைகளால் உளப்பூர்வமாக ஈர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இயல்பாகவே, ரஷ்யாவின் சோசலிசப் புரட்சியானது இந்தியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டுகிறது என்ற முடிவுக்கு வந்தார்கள்; பிற நாடுகளைப் போலவே விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த இந்தியப் புரட்சியாளர்களுக்கு அதுவே சிறந்த பாதை என்று எண்ணினார்கள். எனவேதான் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த காங்கிரஸ்காரர்களில் முதல் குழுவாக இருந்தார்கள்; தங்களது இறுதி இலக்கு சோசலிசமே என்று பிரகடனம் செய்து அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள். உண்மையில் இந்தக் குழுவிற்கு தலைவர்களாக இருந்தவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனும், மாசானியும் மற்றவர்களும்தான் என்பது ஒரு நகைமுரண்.

இங்கே மற்றொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டும். உண்மையில் கேரளத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்கு முன்பே சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கிடைக்கப்பெற்றிருந்தார்கள். அவர்கள் அந்தக் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்டிருக்கக் கூடும். அவர்களைப் பொறுத்தவரை, மாசானி மற்றும் கும்பலைப் போல பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்ல; பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியும் ‘சோசலிசம்’ பேசியது; ஆனால் அது பேசிய ‘சோசலிசம்’ கம்யூனிஸ்ட் எதிர்ப்பு மற்றும் சோவியத் எதிர்ப்பு உணர்வுகளை உள்ளடக்கியது..

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி.

எனவே இயல்பாகவே, கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் அன்றைய சட்டவிரோத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் போது அவர்களுடன் விரிவான முறையில் விவாதம் நடத்தினர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளின் சாதக மற்றும் பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்தனர். மறுபுறத்தில் மாசானியும் அவரது கும்பலும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கொள்கைகளே மிகச் சரியானவை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்; கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், அதிலிருந்து கம்யூனிசம் என்ற முடிவுக்கு வந்தது என்பது, அவர்கள் எப்படி காந்தியிசத்திலிருந்து நேருவிய காங்கிரஸ்காரர்களாக மாறி பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளாக மாறினார்களோ அதேபோல இயல்பாக நடந்த ஒன்று.

இது கேரளாவில் மட்டுமே நடந்த தனித்த நிகழ்வல்ல. பல்வேறு மாநிலங்களில் இதேபோன்ற நிகழ்வுப் போக்குகளே நடந்தன. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஏன் சோசலிசம் என்ற நூலின் மூலம் சோசலிச இயக்கத்திற்குள் வந்தவர்கள், மீரட் மற்றும் பைஸ்பூர் ஆவணங்களின் மூலம் சோசலிச சிந்தனையில் வலுப்பட்டவர்கள், எந்தவிதத்திலும் மாசானி மற்றும் கும்பலால் பிரச்சாரம் செய்யப்பட்ட சோவியத் எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு முயற்சிகளுக்கு உடன்பட மறுத்துவிட்டனர். ஏன் சோசலிசம் என்ற நூலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறிப்பிட்டது போல, இந்திய விடுதலையை வென்றெடுப்பதற்கு சோசலிசம் என்ற தத்துவம் வலுவான முறையில் முன்வைத்து கொண்டுசெல்லப்படும் நிலையில், சோவியத் எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு கும்பலின் கூப்பாடுகளுடன் சோசலிஸ்ட்டுகள் எந்தவிதத்திலும் ஒத்துப்போக வேண்டிய நிலையோ, அவசியமோ ஏற்படவில்லை. ஜெயப்பிரகாஷ் நாராயணனும் கூட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் துவக்க ஆண்டுகளில் மாசானி மற்றும் கும்பலின் இத்தகைய கம்யூனிச எதிர்ப்பு நிலைபாட்டை ஏற்க மறுத்து வந்தார். ஆனால் அந்தக் கும்பல் அவரை கடுமையான முறையில் நிர்ப்பந்தித்து வந்தது. வேறு வழியின்றி அவர் அதற்கு உடன்பட்டார். ஆனால் கேரளத்தின் ஒட்டுமொத்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் நாட்டின் இதர பகுதிகளில் செயல்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினரும் கம்யூனிச எதிர்ப்பு முகாமிற்குள் இணைந்து கொள்ளும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முடிவை பின்பற்ற மறுத்துவிட்டனர்.

ஏன் உடைந்தது?

இரண்டாம் உலகப்போருக்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட இந்த நிகழ்வுப் போக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி இடையிலான ஒற்றுமையில் மிகத் தெளிவான உடைப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தன. உண்மையில் 1930களின் பிற்பகுதியில் நாட்டில் இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பதற்கு இந்த இரண்டு கட்சிகளின் ஒற்றுமை உதவியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இரண்டு கட்சிகளும் கூட்டாக செயல்பட்டது கற்பனைக்கு எட்டாத விதத்தில் இடதுசாரி இயக்கம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதற்கு குறிப்பிடத்தக்க முறையில் உதவி செய்தது. அப்படிப்பட்ட நிலையில், எந்தக் கட்சியின் நிலைபாடு அதிகபட்சமாக சரியானது என்று நிரூபிக்கப்பட்டதோ அதை பின்பற்றியிருந்தால் இந்த உடைப்பை  தவிர்த்திருக்க முடியாதா என்ற கேள்விகளும் எழுந்தன.

இரண்டாம் உலகப்போரின் பிற்பகுதியில், அதாவது சோவியத் ஒன்றியத்தை நாஜி ஜெர்மனி தாக்கிய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட நிலைப்பாடுதான், இந்தியாவில் தேசபக்த மக்கள் திரளிடையே தற்காலிகமான முறையில் கட்சி தனிமைப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அன்றைய நிலையில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த சூழலை இந்திய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை;  நாஜிகளுக்கு எதிரான யுத்தத்தை  “ஒரு மக்கள் யுத்தம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரையறை செய்தது. மறுபுறத்தில் அன்றைய தினத்தில் இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரும் எழுச்சியுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்து கொண்டிருந்தது; அந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மக்களை அணிதிரட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்து வந்தது. எனவே இந்தத் தருணத்தில் தங்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையிலான மோதலில் மக்களின் பேராதரவை தங்களால் பெற முடியும் என்று காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்கள் நம்பினார்கள்.

இந்த நிலையில், நாடு விடுதலையடைகிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலையடைந்த பிறகு, மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வுப் போக்குகளின் பின்னணியில் எழுந்த சூழலை கணக்கிட்டு, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது தனது முன்னொட்டாக இருந்த ‘காங்கிரஸ்’ என்ற வார்த்தையை நீக்கி, தன்னை சோசலிஸ்ட் கட்சி என்று அறிவித்துக் கொண்டது. அதன் தலைவர்கள், புதிய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டுமென்று விருப்பத்துடன் செயல்பட்டார்கள். 1952ல் நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் முதலாவது பொதுத் தேர்தல் நடந்த போது, மேற்படி சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நாட்டின் ஒரே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெறவும் சில மாநிலங்களில் ஆளுங்கட்சியாக ஆவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். 

ஆனால் தேர்தல் முடிவுகள் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமைந்துவிட்டன. இத்தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியானது படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல; கம்யூனிஸ்ட் கட்சியானது பிரதானமான இடதுசாரி எதிர்க்கட்சிக் குழுவாக வெற்றிபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமைதாங்கப்பட்ட ஐக்கிய முன்னணி, இரண்டு தென்னிந்திய மாநிலங்களில், அதாவது, திருவாங்கூர்-கொச்சின் மாகாணம் மற்றும் சென்னை மாகாணம் ஆகியவற்றில் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான உரிமை கோரக்கூடிய அளவிற்கு வலுவான நிலைமையை பெற்றது; மேற்குவங்கம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு மாகாணங்களில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் பிரதான குழுவாக இடம்பெற்றது.

தேர்தலில் ஏற்பட்ட இந்தப் படுதோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் மிகக்கடுமையான தத்துவார்த்த அரசியல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் இருந்த பல கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தலைவர்கள் வேறு வேறு பாதையில் பிரிந்தார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வோதய இயக்கத்திற்கு சென்றார்; மாசானி காங்கிரசிற்குச் சென்றார்; அங்கிருந்து சுதந்திரா கட்சிக்கு தாவினார்; பட்வர்தன் சன்னியாசி ஆகிவிட்டார். இப்படி பலரும் பல திசையில் திரிந்தார்கள். எஞ்சியிருந்தவர்கள் சோசலிஸ்ட் கட்சியை பிரஜா கட்சி என்ற கட்சியுடன் இணைத்து பிரஜா சமாஜ்வாதி கட்சி என்பதாக உருவாக்கினார்கள். அக்கட்சியும் பிறகு பிரஜா சமாஜ்வாதி கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி எனப் பிரிந்தன. பின்னர் அவை இரண்டும் சோசலிஸ்ட் சமாஜ்வாதி கட்சியாக ஒன்றிணைந்தன. விரைவிலேயே அக்கட்சியும் உடைந்தது. படிப்படியாக உடைப்புகள் நடந்து பின்னர் கடைசியாக எஞ்சியிருந்த அனைத்து சோசலிஸ்ட் குழுக்களும் 1977ல் ஜனதா கட்சி என்ற பெயரில் ஒன்றிணைந்தன. அதற்குப் பிறகும் பல குழுக்களாக உடைந்து ஒரு குழு பழைய ஜனதா என்ற பெயருடன் செயல்பட்டது. 1952 முதல் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, சோசலிஸ்ட் கட்சியை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி முற்றாக சிதறடித்துவிட்டது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை நோக்கி.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் அடிப்படையிலேயே வேறுபட்ட பாதைகளில் பயணித்த முரண்பாடு என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் தங்களது வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட அனைத்து பலவீனங்களையும் உணர்ந்து, பல்வேறு தருணங்களில் திருத்திக் கொண்டு, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நின்றார்கள். சர்வதேசிய மற்றும் தேசிய பிரச்சனைகளை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தோடு அணுகினார்கள். ஆனால் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது முதலாளித்துவ கொள்கைகளில் உறுதியாக நின்றது. காங்கிரசுக்குள் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து, அதை ஒரு உறுதிமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக வளர்ப்பதற்கு முயற்சித்தனர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்து, பின்னர் அதிலேயே தங்கிவிட்டவர்கள் தங்களை சோசலிஸ்ட்  என்று அழைத்துக் கொண்டாலும் அடிப்படையில் காங்கிரஸ்காரர்களாகவே இருந்தார்கள். ஆனால் காங்கிரசில் செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் கம்யூனிஸ்ட்டுகளாகவே இருந்தார்கள். காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் எப்படியாயினும் காங்கிரஸ் ஸ்தாபனத்திற்கே விசுவாசமாக இருந்தார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் அடிப்படையில் தங்களது வர்க்கத்திற்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்தார்கள். 

1942 ஆகஸ்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் அதைத்தொடர்ந்த ஆண்டுகளில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது சந்தேகமே இல்லாமல் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சியாகத்தான் இருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகொண்ட வெகுமக்களை அப்போராட்டத்தில் திரட்டியது. ஆனால் அக்கட்சி, காங்கிரசின் முடிவுகளைத்தான் அமலாக்கியது. காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு தீர்வை எட்டும் நோக்கத்துடன் வெகுமக்கள் போராட்டப் பாதையை கைவிட்ட போது, அதைத் தடுத்த நிறுத்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் வெகுமக்களிடையே சற்று தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தபோதிலும், மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பிரம்மாண்டமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் போராட்டங்களை நடத்தியது. தெலுங்கானா, புன்னப்புரா-வயலார், தேபாகா என பல போராட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்தக் காலக்கட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும், சிறைபிடிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாகவும் கம்யூனிஸ்டுகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார்கள். இத்தகைய போர்க்குணமிக்க வெகுஜன போராட்டங்களின் வாயிலாகத்தான் இந்திய நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மைய நீரோட்டத்திற்கு மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வந்தது.

எனினும், இத்தகைய தீவிரமான போராட்டமானது, 1948 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு இடது திரிபுவாத நிலைப்பாடுகளை நோக்கி சென்றது; ஆனால் அந்தத் தருணத்திலும் கூட வெகுஜன மக்களின் எழுச்சிகர உணர்வலைகளுக்கு முரணாக கட்சி செல்லவில்லை; கட்சி தனது நிலைப்பாட்டை சரி செய்து கொண்டது என்ற போதிலும், நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த புதிய காங்கிரஸ் அரசின் மீது மக்களின் விமர்சனங்கள் படியத் துவங்கின. இந்த நிலையில் வெகுமக்களின் உணர்வுகளுக்கு முரணாக கட்சி செல்லவில்லை. மக்களின் உணர்வுகளோடு கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி நின்றது. அதனால்தான் 1952 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளைவிட கம்யூனிஸ்ட்டுகள் ஒரு சிறந்த வெற்றியினை ஈட்ட முடிந்தது.

தத்துவார்த்த போராட்டம் 

விடுதலைக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தலிலும் சரி, அதற்கு பிந்தைய ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்களிலும் சரி, அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பிறகு மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பல்வேறு சோசலிச குழுக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான படிப்பினை என்னவென்றால் இந்த சக்திகளெல்லாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்பதுதான்; எதேச்சதிகாரத்தை நோக்கி ஆளுங்கட்சி செல்லும் போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாட்டின் இதர ஜனநாயக சக்திகள் நடத்தும் போராட்டங்களை, கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி சக்திகளும் முதலாளித்துவத்திற்கு எதிராக சுயேட்சையான முறையில் உழைக்கும் மக்களை அணிதிரட்டும் தங்களது போராட்டத்திற்கான  அடிப்படைப் போராட்டமாக கைக்கொள்ள வேண்டும் என்பதுதான். 

இடதுசாரி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்கும் இந்த முயற்சியில், கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிச இயக்கங்களுக்கு இடையிலான தத்துவார்த்த வேறுபாடு என்பது ஒரு போதும் தடையாக இருக்கவில்லை. சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எழுந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அது எல்லாவிதமான வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்துவிட்டநிலையில், எப்படிப்பட்ட சூழலிலும் தனது நிலைப்பாடுகளில் உறுதியாக நிற்கிறது; கம்யூனிஸ்ட் இயக்கம் தனது தவறுகளை, சறுக்கல்களை சந்தேகமேயின்றி சரிசெய்து, உறுதியான முறையில் அவற்றை வென்றெடுத்துள்ளது; இது எப்படி சாத்தியமானது என்றால் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேசிய மற்றும் தேசிய பிரச்சனைகளை பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தோடு அணுகும் என்ற அதன் அடிப்படை குணாம்சத்தை அனைத்துத் தருணங்களிலும் உயர்த்திப்பிடித்ததால்தான்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுவீகரித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒரு புரட்சிகர வெகுஜன கட்சியை கட்டிவளர்ப்பதில், பாட்டாளி வர்க்க குணாம்சத்திற்கு எதிரான போக்குகளை எதிர்த்து விழிப்போடு இருக்க வேண்டும் என்ற உணர்வினை அது பெற்றிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் வலதுசாரி மற்றும் இடது திரிபுவாத போக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியான தத்துவார்த்த போராட்டங்களை கட்சி நடத்தியது. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற அடிப்படை அணுகுமுறையை இதற்கு கட்சி பயன்படுத்தியது. இந்த அணுகுமுறை இல்லாமல் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜன கட்சியாக, தன்னை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறியும். அத்தகைய பாதையில் கட்சி என்றென்றும் பீடுநடை போடும்.

மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) தத்துவ ஏடு, ஜனவரி 1984
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்..

 

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *