நவம்பர் புரட்சியும் இந்திய – சோவியத் நட்புறவும்
1917 நவம்பர் 7 மனிதகுல வரலாற்றில் முக்கியமான திருப்பம் நிகழ்ந்த நாளாகும். ரஷ்யாவில் வெற்றிகரமான புரட்சியின் மூலம் உழைக்கும் தொழிலாளி வர்க்கம் முதன்முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த திருநாளாகும். இந்தியாவெங்கும் – உலகம் முழுவதிலும் செங்கொடிகள் ஏற்றி, புரட்சிகர முழக்கங்கள் எழுப்பி, உரை நிகழ்த்தி ரஷ்ய சோசலிசப் புரட்சிக்கு வாழ்த்துக்கள் கூறிக் கொண்டாடும் ஒரு சர்வதேச நாள் இது!
1991-ல் சோசலிச சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சிக்குப் பின்னும் -சோசலிசத்தின் பின்னடைவுக்குப் பின்னும் – ரஷ்யாவில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 7 அன்று கம்யூனிஸ்ட்டுகளும் உழைக்கும் மக்களும் புரட்சித் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். 2016-ஆம் ஆண்டை ஸ்டாலின் ஆண்டாக ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் ரஷ்யன் ஃபெடரேஷன்’ கட்சி அனுஷ்டித்தது. புரட்சியின் நூற்றாண்டாகிய 2017-ஆம் ஆண்டை முன்னிட்டு லெனின் திருவுருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களும் கரன்ஸி நோட்டுகளும் ரஷ்ய அரசு வெளியிட வேண்டுமென, நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி விளாதிமிர் புடினைச் சந்தித்துக் கோரினர்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் புரட்சித் தினத்தி லும், மேதினத்திலும், ஹிட்லரின் பாசிஸ்ட் படை யெடுப்பை வெற்றிகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வீரதினத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் செங்கொடிகளை ஏந்தியவாறு கிரெம்ளின் மாளிகை முன்பு கூடுகிறார்கள். லெனின் முஸோலியத்திற்கு அருகில் பொதுக்கூட்டமும் நடத்துகிறார்கள். முந்தைய சோவியத் யூனியன் காலத்திய எல்லா மாநிலக் குடியரசுப் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் தவறாமல் நடைபெற்று வருகின்றன.
இன்றும் இவர்களே எங்கள் ஹீரோக்கள்!
இவை தவிர, 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் வி.டி.எஸ்.ஐ.ஓ.எம். என்று சுருக்க எழுத்துக்களால் அறியப்படும் ஓர் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் மிக அதிக ரஷ்ய மக்களும் போல்ஷ்விக் (கம்யூனிஸ்ட்) புரட்சித் தலைவர்களாகிய லெனினும் ஸ்டாலினுமே இன்றும் எங்கள் ஹீரோக்கள் என்று கருத்துத் தெரிவித்தனர். மிகச் சிலர் மட்டுமே கொடுமையே அறமாக ஆட்சி செய்த ‘நிக்கோலஸ் 2’ என்ற ஜார் மன்னனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர்.
புரட்சியின் மூலமே தங்கள் நாடு சமூகத்துறையிலும் பொருளாதாரத்துறையிலும் அறிவியல் துறையிலும் கலாச்சாரத்துறையிலும் மிகப் பெரும் முன்னேற்றம் கண்டது என்று பெரும்பான்மை ரஷ்யர்கள் கருத்துத் தெரிவித்தனர். முந்தைய சோவியத் அரசுதான் தொழிலாளர்களையும் கஷ்டப்படும் மக்களையும் காப்பாற்றியது என்று பெரும்பாலான மக்கள் கருத்துத் தெரிவித்தனர். இன்றும் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கணிசமான செல்வாக்கு உள்ளது என்பதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன.
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக பெரும் சொத்து படைத்த வர்க்கங்களின் சுரண்டலையும் ஆதிக்கத்தையும், அடிமைத்தனத்தையும், ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வையும் ஒழித்து சமத்துவம் பூத்தது ரஷ்யப் பெருந்தேசத்தில். ‘புதிய ருஷியா’ என்கிற பெயரிட்டு,“ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று ஆரம்பித்து, கிருதயுகம் எழுக மாதோ!” என்று-ஒரு புதிய யுகத்தின் பிறப்பைச் சொல்லி, இந்திய கவிஞர்களிலேயே முதன்முறையாக ரஷ்ய சோசலிசப் புரட்சியை வாழ்த்தி வரவேற்றான் தமிழ்ப் பெருங்கவிஞன் பாரதி.
மகாகவி வாழ்த்தியது போல் மகாத்மா காந்தியும் வாழ்த்தினார். “போல்ஷ்விக்குகளின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகளின்) பதாகைக்குப் பின்னால் எண்ணற்ற ஆண்களின், பெண்களின் தூய்மையான தியாகம் உள்ளது என்ற உண்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர்கள் தங்களின் இலட்சியத்திற்காக அனைத்தையும் இழந்தார்கள். லெனினைப் போன்ற இத்தகைய உயர்ந்த ஆத்மாக்களின் தியாகத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் வீணாகாது. லெனினைப் போன்ற மகத்தான உள்ளங்களின் தியாகம் எந்த இலட்சியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதோ அது வீணாகாது.”என்றார்.
“ரஷ்யாவிலும் சீனாவிலும் நிகழும் எழுச்சியின் மூலம் ஒரு புதிய யுகம் பிறக்கும். ஆனால், அது முதலில் எந்த நாட்டில் பிறக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. இந்த இரண்டு நாடுகளுள் ஏதேனும் ஒன்றில் பிறக்கும். இப்போது நாம் மூன்றாம் யுகத்தில் உள்ளோம். நான்காவது யுகம் சூத்திரர்களின் (தொழிலாளர்களின்) தலைமையைக் கொண்டதாக இருக்கும்” என்றார் சுவாமி விவேகானந்தர். “மார்க்ஸையும் லெனினையும் பற்றிப் படித்ததானது எனது மனதில் சக்திவாய்ந்த தாக்கத்தை உருவாக்கியது. வரலாற்றையும் நடப்பு நிகழ்வுகளையும் புதிய வெளிச்சத்தில் காண எனக்கு உதவியது” என்று பெருமிதப்பட்டார் பிரதமர் ஜவகர்லால் நேரு. நேருஜி இன்னும் சொன்னார்: “லெனின் ஒரு பலம் வாய்ந்த பாரம்பரியமாக விளங்குகிறார். தமது சொந்த ரஷ்யாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காலம் செல்லச் செல்ல அவர் இன்னும் பெரிதாக வளர்கிறார். உலகில் அழியாப் புகழ் பெற்ற மனிதர்களில் ஒருவராக லெனின் விளங்குகிறார்.”
புகழ்பெற்ற கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாம் நவம்பர் புரட்சியின் சாதனைகளில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். 1919-ல் அவர் எழுதிய புகழ்பெற்ற “ப்யாதர்தால்”என்ற சிறுகதையில் ஒரு கதாபாத்திரம் சோவியத் ரஷ்யாவின் எல்லையைக் கடந்து சென்று இவ்வாறு அறிவிக்கிறான்: “நான் செஞ்சேனையில் சேர்ந்திருக்கிறேன். மகத்தான அதன் ஆதர்சம் உலக அளவில் மனிதரின் மனங்களில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதைச் செஞ்சேனை அறியும்.
நான் அந்தச் செஞ்சேனையில் ஒருவன்!” 1918-ல் ஒரு நண்பர்க்கு எழுதிய கடிதத்தில் புகழ்பெற்ற இந்தி, உருது நாவலாசிரியராகிய பிரேம்சந்த், “ நான் போல்ஷ்விக் தத்துவங்களை (கம்யூனிசம்) பெரும்பாலும் புரிந்திருக்கிறேன்.” என்றார். போல்ஷ்விஸமும் ஆன்ட்டி போல்ஷ்விஸமும் என்ற நூலில் சுதந்திரப் போராட்டத் தலைவ ராகிய லாலா லஜ்பத்ராய் போல்ஷ்விஸம் வெற்றி பெறவே செய்யும் என்று எழுதினார். மொத்தத்தில், ரஷ்யப் புரட்சியும் அதன் மகத்தான வெற்றியும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகமளித்தது.
சோவியத் உதவியுடன் பொதுத்துறைகள்
1955 ஜூன் மாதம் பிரதமர் ஜவகர்லால் நேரு சோவியத் நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாகப் பயணம் மேற்கொண்டார். இது, இந்திய-சோவியத் நாடுகளுக்கிடையே நட்புறவையும், பொருளாதார, விஞ்ஞான, கலாச்சார உதவி-ஒத்துழைப்புக்கு ஒரு முக்கிய அஸ்திவாரமாக அமைந்தது. இந்தியாவில் சோவியத் நாட்டு உதவியுடன் பொதுத்துறையில் ஏராளமான தொழில்கள் உருவாக்கப்பட்டன.
பிலாய், பொக்காரோ, ரூர்கேலா உருக்காலைகள், ராஞ்சி, துர்காப்பூர், கோட்டாவில் இயந்திரக் கட்டுமானத் தொழிற்சாலைகள், கோப்ரா, ஓப்ரா, மேட்டூர், பத்ராது, ஹர்துவாகஞ்ச் அனல் மின்நிலையங்கள், பக்ராநங்கல், கீழ்சிலேரு, ஹிராகுட், பாலிமேலா, லிங்கநாமகி ஆகிய இடங்களில் நீர்மின்நிலையங்கள், சித்தரஞ்சனில் ரயில் எஞ்ஜின் தொழிற்சாலை, விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலை, பான்கா, சுராக்கச்கர், மணிக்பூர் ஆகிய இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள், குட்டிஹாரில் நிலக்கரி சுத்திகரிப்பு ஆலை, நெய்வேலியில் அனல் மின்நிலையம் மற்றும் நிலக்கரிச் சுரங்கம்-ஆகிய இவையெல்லாம் நவம்பர் புரட்சியில் பூத்த சோசலிச சோவியத் நாட்டின் உதவியுடன் பொதுத்துறையில் நிறுவப்பட்டவையாகும்.
சோவியத் நாட்டில் இந்திய இலக்கியங்கள் இந்தியாவுக்கும் சோவியத் நாட்டுக்குமிடையேயான கல்வி-கலாச்சார ஒத்துழைப்பின் விளைவாக, நமது பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன தமிழ் இலக்கியங்கள் வரை சோவியத் நாட்டில் வெளியிடப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டன.
சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம், ஆழ்வார்களின், நாயன்மார்களின் பக்தி இலக்கியங்கள் மற்றும் ரவீந்திரநாத் தாகூர், பாரதியார், பாரதிதாசன், பிரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த், சரோஜினி நாயுடு, கிஷன்சந்தர், அமிர்தா ப்ரீதம், பீஷ்ம சஹானி, ஷியாம் பெனகல், கே.ஏ.அப்பாஸ், மிருணாள்சென், அலிசர்தார் ஜாப்ரி, சஜ்ஜத் ஜாகீர், மு.வரதராசனார், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தொ.மு.சி.ரகுநாதன், அகிலன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, கி.வா.ஜகந்நாதன், யோகி சுத்தானந்த பாரதியார், லட்சுமி, மகாகவி வள்ளத்தோள், தகழி சி.சங்கரன் முதலான புகழ்பெற்ற ஏராளமான இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் சோவியத் நாட்டில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டன. 1980-இல் சோவியத் கவிஞரின் மொழிபெயர்ப்பில் ஓலைப் பாடங்கள் என்ற என்ற நூலும், 1982-இல் பழந்தமிழ்க் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பாக முல்லைப் பாட்டு என்ற நூலும் வெளியிடப்பட்டன.
சோவியத் மக்களை திருக்குறள் மிகவும் கவர்ந்தது. ரஷ்யனில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் நூலை மாஸ்கோவில் ஒரு டாக்ஸி ஓட்டுநர் ஆர்வத்துடன் படித்துத் தம்முடன் அது பற்றிப் பேசியதைத் தமிழறிஞர் தொ.பொ.மீனாட்சிசுந்தரனார் தமது சோவியத் பயணக் கட்டுரையில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதுபோல் இந்தியாவில் லியோ டால்ஸ்டாய், புஷ்கின், மாக்ஸிம் கார்க்கி, ஷோலக்கோவ், ஆன்டன் செகாவ், மாயகோவ்ஸ்கி மற்றும் பல சோவியத் அறிஞர்களின் நூல்கள் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டன.
டால்ஸ்டாயின் போரும் அமைதியும், அன்னா கரீனா ஆகிய நாவல்களும், கார்க்கியின் தாய் நாவலும் நம் நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்றவை. சோவியத் அறிஞர்கள் மூவர் கூட்டாக எழுதிய “இந்திய வரலாறு” நூல் தமிழில் இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. அதுபோல் இந்திய-சோவியத் நட்புறவு நிலைநாட்டப்பட்டதன் 40-ஆம் ஆண்டு விழாவுக்கு அர்ப்பணிக்கும் முறையில் நான்கு சோவியத் ஆய்வாளர்கள் எழுதிய “இந்திய-சோவியத் உறவுகள்” என்ற நூல் 1987-ல் தமிழில் வெளிவந்துள்ளது. சோவியத் நாட்டில் இந்திய இலக்கியப் படைப்புகளும், இந்திய நாட்டில் சோவியத் இலக்கியப் படைப்புகளும் பெரிதும் கொண்டாடப்பட்டன. அன்று வேறு எந்த நாட்டிலும் இந்திய இலக்கியங்கள் இந்த அளவுக்குக் கொண்டாடப்படவில்லை.
சோவியத் உதவி –ஒத்துழைப்பினால் இந்தியாவில் முதன்முறையாகப் பொதுத்துறைகள் உருவாகின. அவை இந்தியாவின் பொருளாதார அஸ்திவாரமாக விளங்கின. அது பொதுத்துறைகளின் பொற்காலமாகப் பிரகாசித்தது. இவையெல்லாம் நவம்பர் 7 சோசலிசப் புரட்சியின், அதில் உருவான சோசலிச சோவியத்தின் நல்விளைவுகள் அல்லவா?