மகத்தான மக்கள் போராளி தோழர் பி.சீனிவாசராவ்
114 ஆண்டுகளுக்கு முன்பு தென் கன்னடம் படகராவில் பிறந்தவர் தோழர் பி.சீனிவாசராவ். பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் வாழ்க்கை சூழ்நிலையின் காரணமாக சிங்கப்பூர் சென்று ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்பு இந்தியாவுக்கு வந்த அவர் சென்னையில் குடியேறினார். அவர் சென்னை வந்த காலம் சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்ட நேரம். நாடு தழுவிய போராட்டம் நடந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் தோழர் சீனிவாசராவ் அவர்களும் சென்னையில் நடந்த போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார். இடதுசாரி மனோபாவம் கொண்ட அவர் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
போராட்டங்கள் மேலும் மேலும் வலுவடைந்த காலத்தில் இவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் அமைப்புக்குள் இருந்த கம்யூனிஸ்ட்களோடு இணைந்து செயல்பட்டார். அப்போதுதான் பி.ராமமூர்த்தி போன்ற தோழர்களோடு தொடர்பும் ஏற்பட்டது. தோழர் சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி போன்ற தோழர்கள் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை சென்னையில் உருவாக்கினார்கள். கட்சியில் ஒவ்வொருவருக்கும் வேலைப் பிரிவினை செய்யப்பட்டது. தோழர் சீனிவாசராவ் அவர்களுக்கு கிராமப்புற விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டுவது, அவர்களை சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது என்ற வேலை தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் தோழர் சீனிவாசராவ் காவேரி டெல்டா பகுதியிலே திரளாக இருக்கிற விவசாயிகள், குத்தகை வார விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளிகள் அதிலும் தலித் பகுதியில் இருந்த பண்ணையடிமை தொழிலாளிகளை பிரச்சனைகளின் அடிப்படையில் திரட்டுவதோடு சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளிலும் அணிசேர வைப்பது ஆகியவற்றுக்காக களமிறங்கினார்.
தஞ்சை மாவட்டத்தில் கீழத்தஞ்சை பகுதியில் தான் (இன்றைய திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம்) லட்சக்கணக்கான தலித் மக்கள் பண்ணையடிமைகளாக கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.பெரும் மிராசுதாரர்கள், மடங்கள், கோவில் நிலங்களில் குத்தகைதாரர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சமான சுரண்டலுக்குப் ஆளாக்கப்பட்டனர். தோழர் பி.சீனிவாசராவ் தன்னுடைய பணிகளை அங்கிருந்து துவக்கினார். அவருடைய துணைவியார் பள்ளி ஆசிரியர், அவரும் குழந்தைகளும் சென்னையில் இருந்தனர். இவருடைய கட்சி பணிகளோ தஞ்சையில். பெரிய அளவுக்கு போக்குவரத்து வசதிகளோ, தகவல் தொடர்புகளோ இல்லாத அந்தக் காலத்தில் கட்சிப்பணிகளுக்கும் போராட்டத்திற்கும் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கி செயல்பட்டார். வாய்ப்பு கிடைக்கின்றபோது சென்னைக்கு சென்று குடும்பத்தையும் கவனித்துக்கொண்டார்.
முன்னுதாரண போராளி
அன்றைய கீழத்தஞ்சையில் சொல்ல முடியாத அளவு கொடுமைகளும், அடக்குமுறைகளும் நடந்தன. அங்கிருந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளில் பெரும்பகுதியினர் தலித் மக்கள் தான். இவர்களை வயல் வேலைகளுக்கு பயன்படுத்தும் மிராசுதார்களும், மடாதிபதிகளும் அவர்களை மனிதர்களாகவே கருதவில்லை. மாடுகளை விட மிக மோசமான அளவுக்கு வேலை வாங்கி, அவர்கள் உயிர் வாழ்வதற்கான அளவில் மட்டும்தான் கூலியைக் கொடுத்தனர். இந்த மக்களை மனிதர்களாக நடத்த வேண்டும். அவர்களுடைய உழைப்புக்கான ஊதியம் தரப்பட வேண்டும்.
அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலோடு அந்த மக்களை திரட்டுகின்ற கள நடவடிக்கையில் ஈடுபட்டார். ஒடுக்கப்பட்ட மக்களோடு மக்களாக அவர்கள் வாழுகின்ற குடிசைகளில் தங்கி, அவர்கள் கொடுத்த கஞ்சியைக் குடித்து விட்டு அந்த மக்களை திரட்டுகின்ற பணியில் அவர் ஈடுபட்ட பொழுதுதான் எவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு, அடக்குமுறைகளுக்கு உழைக்கும் மக்கள் ஆளாகின்றனர் என்பதை நேரடியாகக் கண்டார். தோழர் சீனிவாசராவ் தான் ஏற்றுக் கொண்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்களோடு வாழ்ந்து அவர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களையே பின்பு போராடுபவர்களாக, தலைவர்களாக மாற்றினார் என்பதுதான் அவர் செய்த வரலாற்றுச் சாதனை. அவரைச் சுற்றி, எங்கு அடக்குமுறை நடக்கிறதோ அங்கே தோழர் சீனிவாசராவ் சிங்கமென கர்ஜித்து நின்றார். அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் செங்கொடியின் மீதும் தோழர் சீனிவாசராவ் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சுரண்டப்படுகின்ற உழைப்பாளிகளை திரட்டுகின்ற பொழுது அதிகார வர்க்கத்தையும் அரசையும் ஆதிக்க சக்திகளையும் எதிர்த்துதான் களத்தில் நின்றார்கள் என்பது வரலாறு. இன்றைக்கும் அது பொருந்தும். ஆனால் தோழர் சீனிவாசராவ் மிகப் பெரிய முன்னுதாராணமான போராளியாக நின்றார்.
சேகுவேரா போல…
உலகப் புரட்சியாளர் சேகுவேரா எங்கெல்லாம் காலனியாதிக்கக் கொடுமையும் ஏகாதிபத்திய அடக்குமுறையும் விடுதலைப் போராட்டங்களும் நடக்கிறதோ அங்கெல்லாம் தான் இருக்க வேண்டும்; அந்த மக்களை போராளிகளாக மாற்ற வேண்டும்; ஏகாதிபத்தியக் கொடுமைகளிலிருந்த அவர்களை விடுவித்து சுதந்திர மனிதர்களாக மாற்ற வேண்டும். சுரண்டல் இல்லாத சமூக அமைப்பில் அந்த மக்கள் வாழ வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும், தன் உயிர்மூச்சு இருக்கும் வரை போராடினார். அதேபோல தோழர் சீனிவாசராவ் மக்கள் ஒடுக்கப்பட்ட பகுதிகளுக்கெல்லாம் சென்றார். மக்களைத் திரட்டிப் போராடினார். லத்தீன் அமெரிக்காவின் அர்ஜெண்டினாவில் பிறந்த தோழர் சேகுவேரா கியூப நாட்டின் விடுதலைக்காக அங்கு நடந்து கொண்டிருந்த புரட்சியில் பங்கு கொள்ள தோழர் காஸ்ட்ரோவோடு இணைந்து போராடினார். அங்கே மக்களின் விடுதலைக்காகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்த மக்களும் அவருடைய நண்பரான பிடல் காஸ்ட்ரோவும் அவரை அங்கேயே இருக்க வைத்து அமைச்சராக்கி மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்க வைத்தபோதும் அவர் அங்கே நிலை கொள்ளவில்லை. உலகின் பிற இடங்களில் ஏகாதிபத்தியத்தினுடைய அடக்குமுறைகள், காலனியாதிக்கத்தை எதிர்த்த மக்களின் போராட்டம் நடக்கிறதோ அந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற துடிப்போடு பொலிவியா சென்று போராடிய அவரை அமெரிக்க உளவு படையான சிஐஏ படுகொலை செய்தது. இன்றளவும் இளைஞர்களை கவரும் மாபெரும் புரட்சியாளனாக சேகுவேரா திகழ்கிறார்.
தோழர் சீனிவாசராவும் இத்தகைய புரட்சியாளனுக்கான குணத்தோடு தஞ்சை மண்ணில் ஒடுக்கப்பட்ட பண்ணையடிமைகளை, சிறு,குறு விவசாயிகளை குத்தகை வார விவசாயிகளை திரட்டிப் போராடினார். ஒவ்வொரு நாளும் நிலப்பிரபுக்களாலும் அதிகார வர்க்கத்தினாலும் உழைக்கின்ற மக்களின் மீதும் தலித்துகளின் மீதும் தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிற இடங்களில் எல்லாம் தகவல் கிடைத்த உடனேயே அங்கு சென்று அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நாயகனாக தோழர் சீனிவாசராவ் போராடினார். அதன் விளைவாக பல நூறு ஆண்டுகளாக நீடித்து வந்த பண்ணையடிமை முறைகளுக்கும், தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் தீர்வு கண்ட செங்கொடி இயக்கத்தின் நாயகனாக தோழர் சீனிவாசராவால் மாற முடிந்தது. எந்த நேரத்திலும் எதிரிகளினால் உயிர் பறிக்கப்படும் என்ற நிலையிலும் எந்தப் பயமும் இல்லாமல் பாட்டாளி மக்களைத் திரட்டுவதிலே தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தினார். கீழத்தஞ்சையில் ஏற்பட்ட மாற்றம் என்பது சாதாரணமானதல்ல. அது ஒரு சரித்திர நிகழ்வு. பண்ணைடியமை முறையை தலைகுப்புறக் கவிழ்த்து அந்த மாற்றத்திற்காக தலைமையேற்றும் வழிகாட்டினார் தோழர் பி.சீனிவாசராவ்.
நிலப்பிரபுத்துவமும் கார்ப்பரேட்டுகளும்
அவர் மறைந்து சுமார் 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்றும் உழைப்பாளிகளுக்கு எதிராக புதிய புதிய தாக்குதல்களும் புதுவிதமான ஒடுக்குமுறைகளும், நவீன கார்ப்பரேட்டுகள் மூலம் நடக்கின்றன. அன்று நிலப்பிரபுக்களும் பண்ணை முதலாளிகளும் தங்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்காக மேலாதிக்கத்திற்காக பண்ணையடிமை முறையையும் அடக்குமுறையையும் ஏவினார்கள் என்றால் இன்றைய கார்ப்பரேட் முதலாளிகள் வேறு வகையில் அதைச் செய்கின்றனர். கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளிகளை தங்களுடைய சுரண்டுதல் அமைப்புக்குள் எந்தவித உரிமையும் இல்லாமல் அடக்கி ஒடுக்கி உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்துவதற்கான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். அன்றிருந்த மன்னராட்சி முறையும் பின்பு ஆங்கிலேய ஆட்சியும் அடக்குமுறையாளர்களை பாதுகாத்தது. சட்டப் பாதுகாப்பையும் வழங்கியது. இன்று தில்லியில் இருக்கிற மோடி அரசு தன்னுடைய மேலாதிக்கத்திற்காக மக்களை மதரீதியாக, சாதிரீதியாக பிளவுபடுத்துவது, பொருளாதாரத்தின் அனைத்துக் கட்டுமானங்களையும் கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைப்பது, இதற்கு நாடாளுமன்ற, சட்டமன்ற மரபுகளை மீறுவது, ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்குவது, நீதிமன்ற பாதுகாப்பை உழைப்பாளி மக்களுக்கு இல்லாமல் செய்வது என்பதோடு மதப் பாசிச நடவடிக்கைகளை இந்தியாவில் நிலைநிறுத்துவது என்கிற தன்மையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.
இந்த காலத்தில் தோழர் சீனிவாசராவ் போன்ற எண்ணற்ற புரட்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இன்றைய கிராமப்புறப் பொருளாதாரமே கார்ப்பரேட்டுகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால் விவசாயம் அழிந்து, விவசாயத் தொழிலாளிகளும் அழிந்து போகும் நிலையை ஏற்படுத்தும் வகையில், இன்றைக்கு வேளாண் திருத்தச் சட்டங்களும் உருவாக்கப்பட்டு விட்டன. இவைகளை தகர்த்தெறிய வேண்டிய புதிய போராட்டப் பாதையை நாம் உருவாக்க வேண்டும். தில்லியில் திரண்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மிகப் பெரிய நம்பிக்கையை நமது நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
‘ தமிழகத்தில் தஞ்சைப் பகுதியில் தோழர் சீனிவாசராவ் களமாடிய அந்த மகத்தான போராட்டக் களம் தமிழகம் முழுவதும், நாடு முழுவதும் உருவாக வேண்டிய அவசியம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்றைய உழைக்கும் வர்க்கம் அந்த மகத்தான போராட்டப் படிப்பினைகளிலிருந்து தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு களமிறங்க வேண்டிய காலம் இது. தோழர் சீனிவாசராவ் நினைவு தினத்தில் அவரின் மகத்தான பங்களிப்பை நினைவில் கொண்டு தேசபக்த பணிகளை மேற்கொள்ள சபதமேற்போம்.
ஏ.லாசர்