Tamil Marx

கட்டுரைகள்

எளிமையாக நடக்கும் இணையவழிப் பாலியல் தொழில்-சேது சிவன்

எளிமையாக நடக்கும் இணையவழிப் பாலியல் தொழில்-சேது சிவன்
  • PublishedSeptember 13, 2026

இணையத்தின் மூலமாக வீட்டில் இருந்தபடியே யுடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஊடகங்களில் வீடியோக்களை பதிவிட்டு சம்பாதிக்கலாம் என்ற வாய்ப்பு இன்று அதிகரித்துள்ளது. கண்டன்ட் கிரியேட்டராக வளர்ந்து அதிக பாலோவர்ஸ் மற்றும் பார்வையாளர்களைப் பெறும்போது, நிறுவனங்களின் பொருட்களைப் பிரமோட் செய்வது என்ற வகையில் விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதிக்க முடியும். இந்த “சுதந்திர டிஜிட்டல் வருமானம்” என்ற பிம்பத்தின் பின்னணியில், நவதாராளவாத முதலாளித்துவம் ஒரு புதிய உழைப்புச் சுரண்டல் வகையை உருவாக்கியுள்ளது. அதுதான் இணையவழிப் பாலியல் தொழில் என்ற சுரண்டல் முறை.

பொருளாதார நெருக்கடியும் புதிய உழைப்புச் சந்தையும்

தொடர் பொருளாதார நெருக்கடியால் தொழிலாளி வர்க்கம் முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பற்ற நிலைக்குத் சென்றுள்ளது. படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையிலும் குறைந்த சம்பளம். வரவை விடச் செய்ய வேண்டிய செலவுகள் அதிகம் என்பதால், ஒருவர் இரு வேலைகள் பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. பெங்களூரு போன்ற நகரங்களில் காலையில் ஐடி வேலை, இரவில் உணவு டெலிவரி, உபேர், ரேபிடோ ஓட்டுவது என இரு வேலைகள் செய்யும் கட்டாயத்துக்கு படித்த இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இத்தகைய நெருக்கடியைப் பயன்படுத்தி, முதலாளித்துவம் ஒரு புதியதொரு உழைப்புச் சந்தையை இணையத்தில் உருவாக்கி வைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் (Instagram), ஒன்லிஃபேன்ஸ் (OnlyFans), டாங்கோ (Tango), ஸ்ட்ரிப் சாட் (StripChat) போன்ற டிஜிட்டல் தளங்கள் “சுதந்திர உழைப்பு” மற்றும் “சுயதொழில்” (Entrepreneurship) என்ற போலியான பிம்பங்களை முன்வைத்து, அந்தரங்கத்தையும் உடலையும் காட்சிப்படுத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளன.

இதன் தீவிரத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணம் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்த ஸாரா தார் என்ற பெண் தான் ஒரு பேராசிரியர் ஆகவேண்டும் என்ற கனவுடன் முனைவர் பட்டத்திற்கான ஆராய்சியில் ஈடுபட்டார். யூடியூபில் 1 லட்சம் பாளோயர்கள் கொண்ட தனது சேனலில் இயந்திர கற்றல் (Machine Learning) குறித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

எனினும் கல்வி உதவித்தொகை போதாத நிலையிலும் செலவுகள் அதிகரித்த காரணத்தாலும் கூடுதல் வருமானத்திற்காக ஒன்லிஃபேன்ஸில் கணக்கு துவங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டார். அதில் நாளுக்கு நாள் வருமானம் அதிகரிக்கவும் தனது முனைவர் கனவையே கைவிட்டு முழுமையாக ஒன்லி பேன்ஸ் தளத்திற்கு சென்று விட்டார். இத்தளத்தில் 2024 இல் மட்டும் சுமார் 10 லட்சம் டாலர்கள் வரை வருமானம் ஈட்டியுள்ளார்.இதேபோல இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் துவங்கி 30 லட்சத்திற்கு மேல் சந்தா முறையில் மட்டும் சம்பாதிக்கின்றனர்.

இந்த இணையவழிப் பாலியல் உழைப்பை ஒரு பெண்ணின் “தனிநபர் சுதந்திரம், பொருளாதார விடுதலை” என்று லிபரல் பெண்ணியம் கூறுகிறது. பாலியல் வர்த்தகத்திலிருந்து தப்பிப்பிழைத்த மார்க்சியப் பெண்ணியலாளர் எஸ்பரான்ஸா பொன்செகா (Esperanza Fonseca) குறிப்பிடுவது போல, தாராளமயப் பெண்ணியம் இந்தத் தொழிலை “பொருளாதார விடுதலை” எனக் கூறினாலும், அது பெண்களை மேலும் மோசமான அடிமைத்தனத்திற்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்குகிறது.

சுரண்டலும் டிஜிட்டல் அடிமைத்தனமும்

இணையவழிப் பாலியல் தொழிலின் பின்னால் கடுமையான குற்றக் கும்பல்களும், பாலியல் சுரண்டல்களும், இடைத்தரகு நிறுவனங்களும் உள்ளன.

மாடலிங் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி, அவர்களுக்கு கணக்குகளை உருவாக்கி, கட்டாய இணையவழிப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். அக்கணக்குகளையும் பண வருவாயையும் முழுமையாக குற்றக் கும்பல்களும் இடைத்தரகு நிறுவனங்களுமே கையாளுகின்றன. 60-70 சதவீத வருமானத்தை அவையே பிடுங்கிக் கொள்கின்றன.

இப்படி கட்டாயப்படுத்தப்படும் பெண்கள் காற்றோட்டமற்ற, சுத்தம் செய்யப்படாத, விந்து, உமிழ்நீர், இரத்தம் போன்ற திரவங்களால் அசுத்தமடைந்து கிடக்கும் மிகச் சிறிய அறைகளில் 18 முதல் 24 மணி நேரம் வரை தொடர்ச்சியாக இணையவழிப் பாலியல் தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சி தொல்லைகளுக்கு இடையே தான் அவர்களுக்கு வாழ்க்கை. இதனால் அவர்களுக்குத் தோல் நோய்களும் அந்தரங்க உறுப்புத் தொற்று நோய்களும் ஏற்படுகின்றன.

இணையவழிப் பாலியல் தொழிலை வெறும் தனிநபர் விருப்பமாகவோ, ஒழுக்கக் கேடாகவோ பார்க்க முடியாது. இது முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியின் நேரடி விளைவு. வரலாற்று ரீதியாகப் பெண்களின் உடல்களைச் சுரண்டும் ஆணாதிக்க முறையின் அதிநவீனத் தொடர்ச்சி இது.

மனிதகுல வரலாற்றில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே, வர்க்கப் போராட்டத்தின் முதல் வடிவம் என்கிறார் ஏங்கெல்ஸ். தாய்வழிச் சமூகம் தந்தை வழியாக மாறியது. தனிச் சொத்துரிமை ஆண் பெண் பாலியல் உறவில் ஏற்படுத்திய மாற்றங்கள், பின்னர் வர்க்க சமூகம், அரசு ஆகிய அமைப்புகள் உருவாவதையும் விளக்கிச் சொல்லியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றின் வரலாற்று நீட்சியாகவே பாலியல் வர்த்தகம் என்பது முதலாளித்துவத்தின் உருவாக்கமே தவிர இயற்கையான ஒன்றல்ல.

முதலாளித்துவ அமைப்பில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வேலையற்றவர்களாகவும் தற்காலிகப் பணியாளர்களாகவும் வைக்கப்பட்டிருப்பார்கள். இது வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் புதிதாகச் சேருபவர்களின் ஊதியத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. “இவ்வளவு தான் சம்பளம், விருப்பம் இருந்தால் பாருங்கள், இல்லையென்றால் வெளியே வேலைக்காக ஆயிரம் பேர் இருக்கிறார்கள்” என தொழிலாளர்களை முதலாளிகள் மிரட்ட இது பயன்படுகிறது. இதைத் தான் மார்க்ஸ் ரிசர்வ்டு ஆர்மி (reserved Army) என்கிறார்.

இச்சூழலில், முறையான வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தமிழ் நாடு துவங்கி உலகம் முழுவதும் ஏழை எளிய பெண்களும் மாணவிகளும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக டிஜிட்டல் பாலியல் சந்தைக்குள் தள்ளப்படுகிறார்கள். எனவே இது விருப்பத்தின் அடிப்படையிலான தேர்வு அல்ல, பொருளாதார வன்முறையால் உருவாக்கப்படும் கட்டாயத் தேர்வு.

இன்ஸ்டாகிராம் சந்தா முறை

இன்ஸ்டாகிராம் இன்று பாலியல் சுரண்டலை இயல்பான ஒன்றுபோலவும் சுயவிருப்பத் தேர்வு போலவும் மாற்றியிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் சந்தா முறை (subscription) அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையைக் குறிவைத்து விரிவுபடுத்தப்பட்டது. கண்டென்ட் கிரியேட்டர்கள் இதுவரை பிராண்ட் ஒப்பந்தங்களையே நம்பியிருந்த நிலையை மாற்றி, பாலோவர்ஸ்களிடம் இருந்து நேரடியாகவும் தொடர்ச்சியாகவும் வருவாய் பெறுவதே இம்முறையின் நோக்கம்.

இன்று இந்த சந்தா முறையின் மூலம் கிரியேட்டர்கள் தங்கள் பிரத்யேக அந்தரங்கப் புகைப்படங்கள், ரீல்ஸ்கள், நேரலை வீடியோக்கள் ஆகியவற்றை மாதம் ரூ.52 முதல் சில ஆயிரங்கள் வரை கட்டணமாக நிர்ணயித்து வசூலிக்கின்றனர். தமிழ்நாட்டில் பிக்பாஸ் பிரபலங்கள் துவங்கி பல இன்ஃப்ளூயன்சர்களும் நடிகைகளும் இவ்வாறு சம்பாதிக்கின்றனர். பெண்கள் மட்டுமல்ல உலகெங்கிலும் ஆண்களும் பால்புதுமையினரும் இதில் ஈடுபடுகின்றனர்.

ஒரு பக்கம் வேலைக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் அலைந்து திரியும்போது, மறுபக்கம் சிலர் இதுபோன்ற தளங்களில் லட்சங்களைச் சம்பாதிப்பது இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அந்த ஆதங்கம் தொடர்ந்து மீம்களாக வெளிப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பெண் புகைப்படங்களை உருவாக்கி, இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்கி, சந்தா தொகை நிர்ணயித்து ஆபாச படங்கள்/வீடியோக்களை வெளியிட்டு பணம் ஈட்டும் செயலும் நடக்கின்றது. ஸ்பெயினில் “ஐதானா லோபஸ்” (Aitana López) எனும் ஏஐ பெண் இன்ஸ்டா கணக்கு, சந்தாக்கள் மூலம் மாதந்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.

இணைய பாலியல் சந்தையில் டாங்கோ, ஒன்லிஃபேன்ஸ், ஸ்ட்ரிப்சாட் சமீப ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. இன்ஸ்டாவை விட, இவை பிரத்யேகமாக பாலியல் தொழிலுக்காகவே உருவாக்கப்பட்டவை. இவை கிக் பொருளாதாரத்தின் உத்திகளைப் பயன்படுத்துகின்றன. ஒரு தொழிலாளரை நிரந்தர ஊழியராக நியமிக்காமல், செயலி/இணையதளம் மூலம் வேலை வழங்கி, செய்த வேலையின் அடிப்படையில் மட்டும் ஊதியம் தரும் முறை.

இந்தியாவில் இணையவழியாக பகிரப்படும் ஆபாச படங்கள், காணொளிகள் உள்ளிட்ட பாலியல் தொடர்பான பதிவுகளை ஒழுங்குபடுத்த நேரடியான, தெளிவான சட்டம் இல்லை என்பது இந்த சுரண்டல் அமைப்பை மேலும் அதிகப்படுத்துகிறது.

லிபரல் பெண்ணியம் பேசுபவர்கள் பாலியல் தொழிலை “முழுமையான சட்டப்பூர்வமாக்கம்” செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். உண்மையில் பாலியல் வர்த்தகத்தை எவ்விதத்திலும் சீர்திருத்த முடியாது. ஆனால் அதை முற்றிலும் ஒழிக்க முடியும். பாலியல் தொழிலைச் சட்டப்பூர்வமாக்குவது, அத்தொழிலில் உள்ளவர்களைப் பாதுகாக்காது. மாறாக “வாடிக்கையாளர்களையும்” “இடைத்தரகர்களையும்” மட்டுமே சட்டப்பூர்வமாகப் பாதுகாக்க உதவும்.

எனவே, பாலியல் சுரண்டல் அமைப்பை முற்றிலும் ஒழிப்பதை நோக்கி நகர்வதும், பெண்கள் உள்ளிட்டு அனைவருக்கும் மாற்றுப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாற்று வாழ்வாதாரங்களை வழங்குவதுமே உண்மையான தீர்வாக அமையும்.

பாலியல் உழைப்புச் சுரண்டலைத் தடுக்கவும், உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசு அனைவருக்கும் கல்வி, தரமான வேலைவாய்ப்பு, உறுதியான அடிப்படை வருமானம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் பெண்களும் பிறரும் தங்களின் உடலை விற்க வேண்டிய அவல நிலையை முற்றிலும் ஒழிக்க முடியும்.

 

– சேது சிவன்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *