Tamil Marx

சர்வதேசம்

முழுமையான மாற்றத்தை நோக்கி நிதானமாக பயணிக்கிறோம்!

முழுமையான மாற்றத்தை நோக்கி நிதானமாக பயணிக்கிறோம்!
  • PublishedNovember 30, 2025

ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இலங்கையில் ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தி இந்து (ஆங்கில) நாளிதழுக்கு கொடுத்த பேட்டி…

பேட்டி கண்டவர் மீரா சீனிவாசன், தமிழில் சேது சிவன்

கேள்வி : ஒரு வருடம் நிறைவடை யும் நிலையில் உங்கள் அரசாங்கத் தின் மிகப்பெரிய வெற்றி மற்றும் சவால் என்ன?

பதில்: எங்களது மிகப் பெரிய வெற்றி, எங்கள் உறுதித்தன்மைதான். எங்களால் இதைச் சமாளிக்க முடியாது, நாங்கள் அனு பவமற்றவர்கள், நாங்கள் பேசுவது என்னவென்று எங்களுக்கேத் தெரியாது, எங்களிடம் ஒரு திட்டமும் இல்லை அல்லது நாங்கள் ஒரு கம்யூனிஸ்டுக் கூட்டம் என்று கூறி எங்கள் மீது சந்தேகம் கொண்டவர்களை வென்றதுதான். இது தோல்வியடையும், எங்களால் ஆள முடியாது என்ற ஒரு மிகப்பெரிய பயம் நில வியது. நாங்கள் அனைவரின் கணிப்பையும் தவறென்று நிரூபித்துவிட்டோம் என்று நினைக்கிறேன். இதுதான் எங்களின் வெற்றி என நான் நினைக்கிறேன்.

நாங்கள் நிலையாக இருப்பவர்கள் என்பதை மட்டுமின்றி திறமையானவர்கள் என்றும் காட்டியுள்ளோம். எங்கள் அரசியல் கலாச்சாரத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். அவை இப்போது மிகவும் சாதாரணமா கத் தெரிகின்றன. மக்களின் பணத்தை வீண் விரயம் செய்யக்கூடாது, ஊழல் இருக்கக் கூடாது, அரசியல்வாதிகள் குற்றவாளிகளைப் பாதுகாக்க மாட்டார்கள், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின் தனிப்பட்ட திட்டம் வேலை செய்யாது. மேலும் ஒரு திட்டம் உள்ளது. அது தான் கூட்டுப் பார்வை. நாங்கள் ஆடம்பரத்தையோ அல்லது எங்கள் அதிகாரத்தையோ எல்லா இடங்களிலும் காண்பிக்கவில்லை. ‘உங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு (பெரும்பான்மை) உள்ளது, நீங்கள் விரும்பியதைச் செய்யலாம்’ என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் விரும்பியதைச் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு மிகவும் பொறுப்புடன் இருக்கிறோம், நாங்கள் செய்ய முயற்சிக்கும் விஷயங்களை மக்கள் செயலாக்க அனுமதிக்கிறோம். மேலும் எதிர்ப்பு இருந்தால், நாங்கள் சரிசெய்துள்ளோம்.

சவால்களைப் பொறுத்தவரை, இந்த பெரிய அரசு இயந்திரத்தை நீங்கள் உங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும். நீண்ட காலமாகச் செயலிழந்திருந்த ஒரு அரசு இயந்திரம், இன்னும் சில சமயங்களில் தள்ளாடிக் கொண்டே சில விதங்களில் சேவையை வழங்கியிருக்கிறது. ஆனால் மிகவும் ஒழுங்கற்றமுறை யில். ஒரு திட்டத்தின்படி வேலை செய்யவோ, பதிலளிக்கவோ, சுயமாகச் சிந்திக்கவோ அதற்குப் பழக்கமில்லை. எனவே, இவை அனைத்தையும் மாற்றுவது ஒரு சவாலாக இருந்தது.

கேள்வி: நீங்கள் அரசு இயந்திரம் என்று சொல்லும்போது, அதிகாரத்துவத்தைக் குறிப்பிடுகிறீர்களா?

பதில்: நாம் பல ஆண்டுகளாகப் பேசிவரும் பிரச்சனைகளான அதிகாரத்துவம், அரசு நிறு வனங்களின் குழப்பம் எல்லாம், மக்கள் தான் முதன்மை என்ற பார்வை இல்லாததால் வருபவை. இதை எளிமையாகப் புரிந்து கொள்ள லாம், நீங்கள் ஒரு நபரிடம் எப்படிப் பேசுகிறீர்கள் என்பது கூட பொருந்தும். அதுவும் மாற வேண்டும். மேலும், டிஜிட்டல்மயமாக்கல் நடக்கவில்லை என்ற உண்மையும் உள்ளது. இது ஒரு தனிநபரின் தவறல்ல. இது ஒரு அமைப்பு ரீதியான தோல்வி. இந்தக் குழப்பத்தைப் புரிந்துகொண்டு அதை மறுசீரமைக்கவும், அதை மாற்றக்கூடிய சரியான நபர்களை அடையாளம் கண்டு அவர்களைச் சரியான இடங்களில் வேலை செய்ய வைக்கவுமே சவாலாக உள்ளது. நாங்கள் நாட்டை வழி நடத்திக்கொண்டும், அன்றாட விஷயங்களைக் கையாண்டும் வரும்போதே, இந்த அமைப்பு ரீதியான, நிறுவன தோல்வியைச் சரிசெய்ய நேரம் எடுக்கும்.

கேள்வி: உங்கள் அரசு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. அதிக வாழ்க்கைச் செலவுகள் தொடரும் நிலையில், ஐஎம்எப் ஒப்பந்தம் சாதாரண மக்களுக்குப் பிரச்சனைகளைத் தருகிறது என்பதை உங்கள் கூட் டணி ஒப்புக்கொண்டது; மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உறுதிய ளித்தது. அது ஏன் சாத்தியமாகவில்லை?

பதில்: ஐஎம்எப் உடன் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்த விதிமுறைகளையும் எங்களால் முழுமையாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று நாங்கள் கூறியிருந்தோம். ஏனெனில் அது மேலும் குழப்பத்தையும், ஸ்திரமின்மையை யும் ஏற்படுத்தியிருக்கும். குறிப்பாக நாங்கள் தோல்வியடைவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்த போது, எங்களால் அதைக் கையாள முடிந்திருக்காது. எங்களை நிலைநிறுத்திக் கொள்ள நாங்கள் முதல் கட்டத்தில் தோல்வியடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது.

அந்தக் கட்டுப்பாட்டுடன், நாங்கள் குறிப்பிட்ட அளவில் ஐஎம்எப் -உடன் பல விஷயங்களை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இவை முற்றிலும் வெளிப்படையானவை அல்ல. நாங்கள் கணிசமான அளவு பொதுத்துறை ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை வழங்கினோம். படிப்படியாக நல உதவிகளை அறிமுகப்படுத்தினோம். சுகாதாரம் மற்றும் கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கினோம். எதிர்காலத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDIs) ஈர்ப்பதை கருத்தில் கொண்டும், எங்கள் மக்களின் நலனுக்காகவும் அந்த முடிவுகளை எடுக்க எங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை பேச்சுவார்த்தை மூலம் பெற்றுள்ளோம். அந்தப் பேச்சுவார்த்தைகள் எளிதில் நடந்து விடவில்லை.

சில சமயங்களில், இடதுசாரி மற்றும் வலதுசாரி என இரு தரப்பினராலும் நாங்கள் விமர்சிக்கப்படுகிறோம். ‘நீங்கள் ஒரு இடதுசாரிக் கட்சி, ஐஎம்எப் – உடன் என்ன செய்கிறீர்கள்?’ என்று அவர்கள் கேட்கிறார்கள். நாட்டின் நிலையை உண்மையிலேயே புரிந்துகொண்டு, அந்த நிலைமைகளின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிச் செல்கிறோம். அதாவது ஐஎம்எப் -உடன் இலங்கையின் நல்ல உறவை மிகவும் மதித்து, பாராட்டினாலும், இதை மீண்டும் செய்ய வேண்டியதில்லை என்பதே எங்கள் நோக்கம் என நாங்கள் ஐஎம்எப் நிறுவனத்திடமே வெளிப்படையாகச் சொல்லி விட்டோம்.

கேள்வி : நிதி அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி திஸாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் அரசாங்கத்தின் முதல் முழு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

பதில்: நிதி திட்டமிடல் இலக்குகளுக்கு செலுத்தும் நுணுக்கமான கவனம் மற்றும் அனைத்துவரம்புகளையும் கருத்தில் கொண்டு, அனைத்து முக்கிய துறைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான முயற்சி. அது ஓய்வூதியதாரர்களாக இருந்தாலும், தோட்டத் தொழிலாளர்களாக இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் சரி; அல்லது தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளாக இருந்தாலும், தினசரி கண்காணிப்பு தேவைப்படும் இந்த மிக சிக்கலான பெரிய பொருளாதாரச் சூழ்நிலையைச் சமநிலைப்படுத்தி, மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களுக்குத் தேவையானவற்றில் வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்துகிறது. கல்வி, சுகாதாரம் அல்லது உள்கட்டமைப்பு என நாங்கள் விரும்பும் பெரிய மாற்றங்களுக்கான திசையை இது அமைக்கிறது.

கேள்வி: அரசின் வருவாய் பற்றாக்குறை காரணமாக கல்விக்கு போதிய நிதி ஒதுக்க முடியவில்லை என சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை கூறுகின்றது; கல்வித்துறை நெருக்கடிக்கு காரணம் என்ன?

பதில்: மற்ற எல்லாத் துறைகளிலும் இருப்பது போல, இது ஒரு திட்டத்தின் பற்றாக்குறை. இது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதால் (கடந்த கால ஆட்சியில்) பின்னர் நியாயமற்ற தலையீடுகளை கட்டாயப்படுத்தும் ஒரு நெருக்கடி உருவாக்கப்படுகிறது என்று நான் சொல்வேன். ‘அவர் பிராண்ட் இஸ் க்ரைசிஸ்’ என்ற ஒரு திரைப்படம் உள்ளது, கல்வி விஷயத்தில் அவர்கள் அதைத்தான் செய்தார்கள் என்று நினைக்கிறேன். ஒரு நெருக்கடியை உருவாக்கினார்கள். பொதுக் கல்வியின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு இழக்கச் செய்தார்கள். பின்னர் அவர்களைத் தனியார் பயிற்சி வகுப்பு களை (Private Tuitions) தேர்வு செய்ய கட்டாயப்படுத்தினார்கள். பொறுப்பைக் கைவிட்ட, ஆனால் அதிகாரப்பூர்வமான பொதுக் கல்வி இன்னும் இருக்கிறது; எனவே உண்மையில், மக்கள் தான் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது.

இது ஆசிரியர் பயிற்சி உட்பட கொள்கையில் ஒத்திசைவின்மை மற்றும் பெரிய உள்கட்டமைப்பு பிரச்சனைகள், நிறுவன ரீதியான சீரழிவின் மிகப்பெரிய சிக்கல்களுக்கு வழிவகுத்தது. அவர்கள் (முந்தைய ஆட்சி யாளர்கள்) அடிப்படைகளையே ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். எனவே, இது வெறும் நிதி பற்றியது மட்டுமல்ல. இந்தத் துறைக்கு நீங்கள் அதிக பணத்தை முதலீடு செய்திருந்தாலும் நீங்கள் விரும்பியதைப் பெற்றிருக்க மாட்டீர்கள். ஏனெனில் அரசுத் துறைகளை கட்டமைப்பதற்கு யாரும் (கடந்த கால ஆட்சிகளின் போது) முதலீடு செய்யவில்லை. பாடத்திட்டத்திற்குப் பொறுப்பான தேசிய கல்வி நிறுவனம் கூட, காலிப் பணியிடங்கள், அக்கறையின்மை அல்லது சரியான தலைமையின் பற்றாக்குறை போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறது.

நாங்கள் இதில் தீவிரமான சீர்திருத்தச் செயல்முறையைத் தொடங்கியுள்ளோம். குறிப்பாக தனியார் துறையைச் சேர்ந்தவர்கள், உண்மையிலேயே இதைச் செய்ய முடியுமா என்று சிலர் ஆச்சரியப்பட்டனர். ஆனால் இந்த குழப்பத்தை சரி செய்யவும் வழி இருக்கிறது. அது பலன் தரும். இந்த ஆண்டு (2025) இறுதிக்குள் சுமார் 2,00,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது; புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டு 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு வழங்கத் தயாராகி வருகின்றன.

கேள்வி: உள்நாட்டுப் போரின் தாக்கத்துடன் இன்னும் போராடும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் உட்பட, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான அரசுகளால் மீண்டும் மீண்டும் கைவிடப் பட்டுள்ளனர். உங்கள் அரசாங்கம் அவர்களின் நம்பிக்கையை எப்படிப்பெறும்?

பதில்: அது உண்மையில் நாங்கள் அதிக வேலை செய்ய வேண்டிய ஒரு பகுதி. உள்நாட்டுத் தீர்வு தான் நீண்ட காலத்திற்கு வேலை செய்யும்; மக்கள் பிளவுபடுவதைத் தடுக்க உதவும் என்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம். இந்தப் பிரச்சனைகளைக் கையாளும் வகையில் அரசின் உள்ளூர் அமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும்; மற்றவர்களிடம் வெறுமனே பொறுப்பைக் கொடுத்துவிட முடியாது. நாம் பொறுப்பேற்க வேண்டும். நம்பிக்கைதான் முக்கியம், அதற்கு நிறைய முயற்சி தேவைப்படும்.

நாங்கள் புதிய வகை அரசு என அங்கீகரிக்கும் வகையிலான விவாதங்களை பொது சமூகத்துடன் ஏற்படுத்த வேண்டும். புதிய விவாதத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. 1994, 2007, 2010, அல்லது 2015 இல் கூறப்பட்ட அல்லது செய்யப்பட்டவற்றை இப்போதைக்கு ஒதுக்கி வைப்போம். நோக்கங்களை ஒப்புக்கொள்வதிலிருந்து ஆரம்பித்து, முன்னேறுவதற்கு ஒன்றாக வேலை செய்வோம். இப்போது நமக்குத் தேவையானது, இந்த கடினமான கேள்விகளுக்கு புதிய சிந்தனை, ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்குவதாகும்.

கேள்வி: புதிது என எதை குறிப்பிடு கிறீர்கள்?

பதில்: எங்களிடம் எல்லா பதில்களும் உள்ளன என்று நான் சொல்லவில்லை. அதனால் தான் இது குறித்துப் புதிய, புத்துணர்ச்சியூட்டும் சிந்தனை எங்களுக்குத் தேவை. பல ஆண்டுகளாக, இன உறவுகளைப் புரிந்து கொள்வதற்கு எங்களிடம் ஒரு குறிப்பிட்ட வழி இருந்தது. ஆனால் தற்போதைய யதார்த்தங்கள் மற்றும் சவால்களுக்கு ஏற்றவாறு அதைப் புதுப்பித்துள்ளோமா? போருக்குப் பிறகு பிறந்த ஒரு தலைமுறை இந்தப் பிரச்சனைகளைப் பற்றி எப்படிச் சிந்தித்து உணர்கிறது? இப்போது இளைஞர்களின் விருப்பங்கள், தேவைகள், மாறிக் கொண்டிருக்கும் ஒரு இடத்தில் இருக்கி றோம். அவை மிகவும் வேறுபட்டவை.

எனவே, நாம் புதிதாகச் சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படிப் பதிலளிப்பது என்பது மட்டுமல்லாமல், இந்தப் பிரச்சனைகளை வேறுவிதமாக அணுகுவதற்குச் சமூகத்தை எப்படி மறுசீரமைப்பது என்றும் சிந்திக்க வேண்டும். நாங்கள் அந்தக் கலந்துரையாடலுக்குத் தயாராக இருப்பதால், இதைச் செய்ய இதுவே சரியான தருணம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அந்த உரையாடல் இன்னும் நடக்க வில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

கேள்வி: அது ஏன்? 

பதில்: புதிய, புத்துணர்ச்சியூட்டும் சிந்தனைகள் ஆகியவற்றின் பற்றாக்குறையால் நாம் அனைவரும் போராடுகிறோம் என்று நான் நினைக்கிறேன். மற்றொன்று, சோர்வு மற்றும் புதிதாக எதுவும் நடக்காது என்ற ஒருவித நம்பிக்கையின்மை. சிந்தனைத் திறனின் பற்றாக்குறையை நான் உண்மையிலேயே உணர்கிறேன். மேலும் இது நாம் ஒரு நாடாக இவ்வளவு மனித ஆற்றலை இழந்ததால் கொடுத்த விலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். நாம் நமது சிறந்த சிந்தனையாளர்களை பலி கொடுத்தோம். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த மிகவும் தொலைநோக்கு சிந்தனை மற்றும் தீவிரமான மனதினர், வித்தியாசமாகச் சிந்தித்ததற்காகவே பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். ஒரு தேசமாக, அந்த இழப்புக்கான விலையை இப்போது நாம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதற்கிடையில், புதிய தலைமுறை மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. என்னைப் போன்ற ஒரு தலைமுறை உள்ளது. அடுத்து திசை தெரியாத (இழந்த) தலைமுறை உள்ளது. பின்னர் ‘நாங்கள் ஏஐ (AI) பற்றி கண்டு பிடிக்க விரும்புகிறோம்’ என்று சொல்லும் இளைஞர்கள் உள்ளனர். நமது பகுப்பாய்வுகளில் பல, வர்க்கக் காரணிகளை அரிதாகவே கொண்டு வருகின்றன. போர், இனம் மற்றும் வன்முறை பற்றிய நமது விளக்கங்கள் அந்த முழுப் பரிமாணத்தையும் தவறவிட்டுவிட்டன. ஆனால் இப்போது வர்க்கப் பார்வை மிக முக்கியமானதாக இருக்கும் ஒரு தருணத்தில் இருக்கிறோம், குறிப்பாக நாங்கள் கண்ட அரசியல் மாற்றங்களைப் புரிந்துகொள்வதில். நமது பகுப்பாய்வு அல்லது அரசைப் பற்றிய நமது புரிதலில் இருந்து வர்க்கப் பார்வையை விலக்கிவிட்டால், நாம் ஒரு முக்கியமான பகுதியைக் கைவிட்டு விடுவோம்.

கேள்வி: தேசிய மக்கள் சக்தி கூட் டணி (NPP) ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க உறுதியளித்துள்ளது. அந்த வாக்குறுதி இப்போது எந்த நிலையில் உள்ளது?

பதில்: இதற்கு ஆலோசனைகள் செய்யும் நடவடிக்கைகள் தேவை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அதற்கான தேதிகளை நாங்கள் நிர்ணயிக்கவில்லை, ஆனால் அது நடக்க வேண்டும். முந்தைய ஆலோசனை செயல்முறை எங்கு நிறுத்தப்பட்டதோ, அங்கிருந்து தொடங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நிச்சயமாக, அதன்பிறகு சூழல்கள் மாறிவிட்டன. எனவே நிறைய சிந்திக்க வேண்டியிருக்கிறது. மேலும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அது அடுத்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. மேலும் தேர்தல் ஆணையம் தனது பணிகளை செயல்படுத்த வேண்டும். முதல் இரண்டு ஆண்டு ஆட்சியில் எங்கள் முன்னுரிமை பொருளாதாரப் பாதுகாப்பு வளர்ச்சியை யொட்டி இருக்கும். மற்ற அனைத்தும் சற்றே பின்னால் உள்ளன. சிந்திக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், குறைந்தபட்சம் தலைமை மட்டத்திலாவது, நாங்கள் இனவெறி கொண்டவர்கள் அல்ல. அமைப்பு ரீதியாகவும் கூட, தலைமை இப்போது வெளிப்படையான இனவெறி பற்றி அதிகம் உணர்ந்து கொண்டுள்ளது. ஒரு திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் மற்றும் கட்டமைப்புகளை நோக்கி ஒரு அமைப்பு ரீதியான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய அரசியலமைப்புக்கும் நேரம் தேவை.

கேள்வி: உங்கள் கட்சி (ஜேவிபி), இப் போது செயல்பட வாய்ப்பு இருக்கும் போது, மிக வேகமாகச் செயல்பட்டு ஒரு பின்னடைவைத் தூண்டும் அபாயமும் உள்ளது. அந்தச் சமநிலை எவ்வாறு செயல்படும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?

பதில்: நாங்கள் இன்னும் அந்த வாய்ப்புக் கான பாதையை அடையவில்லை என்று நான் நினைக்கிறேன். எங்கள் அரசாங்கத்தின் பாதை, துவங்கிய உடன் உச்சத்தை அடையும் வழக்கமான பாதை அல்ல. மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தது, எங்களைச் சரியான தேர்வு என்று முற்றாக நம்பியதால் அல்ல; மற்ற அனைவரையும் வெறுத்துப்போனதால் அவர்கள் அவ்வாறு செய்தனர். எங்கள் உண்மையான பாதை இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் வரும் என்று நான் நினைக்கிறேன். அப்போது நாங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்போம்.

மேலும் அவர்கள் தங்கள் நம்பிக்கை தவறாகவில்லை என்று உணருவார்கள். அப்போது தான் அர்த்தமுள்ள மாற்றம் உண்மையி லேயே நடக்க முடியும். இதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், அதனால்தான் எங்கள் 159 இடப்பெரும்பான்மையைக் காண்பிக்கவில்லை. புதிய தவறுகளைச் செய்வதன் மூலமோ அல்லது முடிவுகளை அவசரப்படுத்து வதன் மூலமோ நாங்கள் அவர்களை ஏமாற்ற முடியாது.

கேள்வி : நீங்கள் சமீபத்தில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் செய்தீர்கள். இந்த அடுத்தடுத்த பயணங்களிலிருந்து நீங்கள் பெற்ற முக்கியப் படிப்பினைகள் என்ன?

பதில்: அளவற்ற நல்லெண்ணம் (சகோதரத்துவம்) வெளிப்படையாகத் தெரிந்தது. நான் இந்நாட்டின் ஜனாதிபதி அல்ல; நான் இரண்டாவது குடிமகள். ஆயினும் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப் பட்டது. மேலும் அவர்கள் எங்கள் நாட்டின் தேவைகளுக்கு மிகவும் இணக்கமாக இருந்தனர். இரு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிற அதிகாரிகள் இலங்கையின் மீது மிகுந்த ஆர் வத்தைக்காட்டினர்; வலுவான சகோதரத்து வத்தை வெளிப்படுத்தினர். இணைந்து செயல்பட, உதவ விரும்புவது, மேலும் இலங்கையின் முக்கியத்துவத்தை அவர்கள் அங்கீகரிப்பது ஆகியவற்றை வெளிப்படுத்தினர். இது எங்கள் மீது உண்மையான நல்லெண்ணம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

கேள்வி: போட்டி நலன்கள் கொண்ட இரண்டு முக்கியக் கூட்டாளிகளு டன் (இந்தியா, சீனா) பழகும்போது இலங்கைக்கு அழுத்தம் இருக்குமா?

பதில்: வெவ்வேறு பிராந்தியத் தலைவர்களையும் அவர்களின் லட்சியங்களையும் நாங்கள் எப்படிச் சமநிலைப்படுத்துகிறோம் என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் உலகளாவிய மாற்றங்கள் இதைச் சில வழிகளில் எங்களுக்கு எளிதாக்குகின்றன. இந்த மையப்புள்ளி தெளிவாக இந்த பிராந்தியத்திற்கும் மாறியுள்ளது. ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகள் இப்போது ஒருவருக்கொருவர் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிக்கின்றன.

இந்தியாவையும் சீனாவையும் எதிரிகளாகப் பார்ப்பது ஒரு தவறு; அண்மைய நிகழ்வுகள் அவர்கள் தொடர்ந்து ஒருவருக் கொருவர் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவதைக் காட்டுகின்றன. எனவே, எங்கள் உறவுகளை நாங்கள் புத்திசாலித்தனமாக நிர்வகிக்கும் வரை, எங்களுக்கு எந்தவிதமான தேவையற்ற அழுத்தமும் ஏற்படாது என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி : பெரும்பாலும் ஆண்களால் நிரம்பியுள்ள அரசியல் களத்தில் அதி காரத்தில் இருக்கும் ஒரு பெண்ணாக உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது?

பதில்: இந்த பயணத்தைப் பற்றி நான் எப்போதாவது எழுதினால், பாலின அம்சத்தைப் பற்றியே எழுதுவேன் என்று நான் நினைக்கிறேன். ஒருபுறம், உலகில் நான் எந்தப் பெண் தலைவர்களைச் சந்தித்தாலும், அவர்களின் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், நாங்கள் உடனடியாக இணைகிறோம் என்பது வியக்க வைக்கிறது. எங்கள் சூழல்கள் எதுவாக இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான விஷயங்களை அனுபவித்திருக்கிறோம்.

இருப்பினும், என்னை அதிர்ச்சி கொள்ளவைத்தது, என் கட்சிக்குள் என்னுடன் பயணிக்கும் அரசியல் சகாக்கள் அல்ல. மற்ற களங்களில் இருந்து வந்த ஆண் சகாக்களின் எதிர்வினைகள் தான். இந்த மாற்றத்தைச் சமாளிக்க அவர்கள் கடுமையாகப் போராடினார்கள். அதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை போல. நான் தீவிர பெண்ணியவாதி என்று நினைத்த ஆண்கள் கூட எதிர்பாராத வகையில் எதிர்வினையாற்றியுள்ளனர். இதில் விந்தையானது என்ன வென்றால் என் பெண் நண்பர்கள் யாரும் இந்தச் சிக்கலைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் முழுமையாக ஆதரவையும் பாதுகாப்பையும் பெற்றிருந்தனர்.

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பின ராக இருப்பது முதல் மக்களை அணி திரட்டி, அதிகபட்ச வாக்குகளைப் பெறுவது மற்றும் பிரதமராக நியமிக் கப்படுவது வரையிலான அனுபவம், அரசியல் செயல்பாடு உங்களுக்கு என்ன கற்பித்தது?

பதில்: மக்களை ஒருங்கிணைப்பது (அமைப்பாக்குவது) அவர்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது, அதில் தான் அனைத்தும் அடங்கி உள்ளது. அதுதான் ஜனநாயகம். வேறு குறுக்குவழிகள் எதுவும் இல்லை. களத்தில் கடினமாக உழைப்பதை வேறு எதுவானாலும் ஈடுசெய்ய முடியாது. கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் அடைந்த நல்ல விசயமானது மக்களை நேரடியாகவும், வேகமாகவும் இணைக்காமல் விட்டிருந்தால் வாக்குகளாக மாறியிருக்காது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதில் ஒரு பகுதியாக இருந்தனர். அதுதான் இதை உண்மையிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியாக ஆக்கியுள்ளது. பெண்களின் அரசியல் பங்களிப்பைப் பற்றி நாம் நீண்ட காலமாக ஒதுக்கீடுகள் மற்றும் எண்களின் அடிப்படையில் விவாதித்து வருகிறோம், ஆனால் இப்போது நடப்பது மிகவும் கூர்மையானது. சிறிய கிராமங்களில் உள்ள இல்லத்தரசிகள் தங்களுக்கும் ஒரு கருத்து உள்ளது என்று உணர்கிறார்கள். இளம் பெண்கள் நாடாளுமன்றத்தில் உள்ள 22 பெண்களைப் பார்த்து, ‘நானும் அதைச் செய்ய முடியும்’ என்று நினைக்கிறார்கள். அதுதான் உண்மையான மாற்றம். இப்போதுள்ள சவால் என்னவென்றால், இந்த மாற்றம் சரியான திசையில், சரியான வழியில் நகர்கிறது என்பதையும், குறிப்பாக – பாரம்பரியமாக அதிகமாக ஆண்களால் நிறைந்த கட்சி மற்றும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் களத்தில் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதை உறு திப்படுத்துவதுதான்.

கேள்வி: ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) மற்றும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கூட் டணி இடையிலான உறவு அரசாங் கத்தில் இருக்கும்போது எப்படி இருக் கிறது? அடிக்கடி வேறுபாடுகள் அல்லது பிளவு பற்றி ஊகங்கள் உள்ளனவே?

பதில்: இவ்விரண்டுக்கும் இடையே உள்ள “பிளவு” பற்றிய இந்த பேச்சு அனைத்தும் உண்மையில் அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் பிளவு என்ற அர்த்தத்தில் தனித்தனியாக இருக்கவில்லை. இந்த முன்னணியை உருவாக்குவதில் ஜேவிபி தான் தலைமை தாங்கியது. ஆட்சிக்கு வரவேண்டுமானால், ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதை அவர்கள் அங்கீகரித்தனர். தேசிய மக்கள் சக்தி முன்னணியில் இணைந்தவர்கள் இதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தனர். நாங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான நிபுணத்துவம் அல்லது அனுபவத்துடன் வருகிறோம். அரசியல் பாதை ஜேவிபி-யால் தலைமை தாங்கப்பட்டது. அதில் நாங்கள் சௌகரியமாக இருந்தோம். எங்களில் பெரும்பாலானோர் கல்வி, சிவில் சமூகம் அல்லது அரசு சாரா நிறுவனங்களிலிருந்து வந்தவர்கள்.

ஆரம்பத்தில், நாங்கள் ஜேவிபி – ஐ வெளியிலிருந்து இயக்க முயன்றோம். பின்னர், நாங்களே தேசிய மக்கள் சக்தியின் பகுதியாக மாறினோம். எனவே, என்னைப் பொறுத்தவரை, இது ஒருபோதும் ஜேவிபி-க்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இருக்கிறதா என்ற கேள்வி அல்ல. தேசிய மக்கள் சக்தி இருப்பதற்குக் காரணம், அதை உருவாக்குவது என ஜேவிபி எடுத்த முடிவே.

 

இந்த தமிழ் பேட்டி தீக்கதிர் நாளிதழில் 30 நவம்பர் 2025 அன்று வெளியானது. 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *