மோடி ஆட்சியில் ஒவ்வொரு உலக குறியீட்டிலும் இந்தியா வீழ்ச்சி!
சில ஆண்டுகளுக்கு முன்னர், நிதி ஆயோக் (NITI Aayog) ஒரு முக்கிய அறி விப்பை வெளியிட்டது: இந்தியா தரவரிசைப்படுத்தப்பட்ட சுமார் 32 உலகளாவிய குறியீடுகளுக்கு ஒரு “தகவல் பலகையை” (Dashboard) உருவாக்கி, தரவரிசைகளை மேம்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவது ஆகிய நோக்கங்களுக்காக அதைக் கண்காணிப்பதாகக் கூறியது. ஆனால், இந்தக் கண்காணிப்பு நடக்கவில்லை என்றே தெரிகிறது.
சமீபத்தில் பத்திரிகையாளர் ஆகார் படேல் மேற்கொண்ட ஆய்வில், 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மோடி ஆட்சியில் ஒவ்வொரு உலகளாவிய குறியீட்டிலும் இந்தியாவின் தரவரிசை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்ற உண்மை அம்பலமாகியுள்ளது. இந்த வீழ்ச்சி இந்திய மக்களின் அன்றாட வாழ்வின் தரத்தையும் பாதிக்கிறது
1.) மனித மேம்பாடு மற்றும் சமத்துவமின்மை
2014 இல் உலகளவில் 130-ஆக இருந்த இந்தியாவின் மனித மேம்பாட்டுக் குறியீட்டுத் (HDI) தரவரிசை, மோடி ஆட்சியில் எந்தவொரு சிறிய முன்னேற்றத்தையும் அடையாமல் இன்றும் அதே நிலையிலேயே நீடிக்கிறது. ஐ.நா. அறிக்கையின்படி, இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையின் காரணமாக இந்தியாவின் HDI மதிப்பில் 30.7 சதவிகிதம் குறைவு ஏற்படுகிறது. இது ஆசிய பிராந்தியத்திலேயே மோசமான பின்னடைவு. வருமானம், பாலின ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பெண் தொழிலாளர் பங்களிப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை மிக மோசமான அளவில் பின்தங்கியுள்ளன. இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் மனித வாழ்க்கையின் உண்மையான முன்னேற்றத்தைத் தடை செய்கின்றன.
2.) குடிமைச் சுதந்திரம் மற்றும் ஆசிய சக்தி
இந்தியாவில் மக்களுக்கான சுதந்திரம், முன்பு இருந்த “தடைசெய்யப்பட்டது” (Obstructed) என்ற நிலையிலிருந்து, தற்போது மேலும் மோசமாகி “அடக்கி ஒடுக்கப்பட்டது” (Repressed) என்ற நிலைக்குத் தரம் தாழ்ந்து போயுள்ளது என சிவிகஸ் மானிட்டர் (CIVICUS Monitor) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சட்டப்பூர்வ மற்றும் நடைமுறைத் தடைகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் விதிப்பதால், மக்கள் சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்க, ஒன்று கூட மற்றும் அரசு முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க உள்ள உரிமை ஒடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய சக்தி குறியீட்டில் (Asia Power Index) இந்தியாவின் மதிப்பெண் 41.5-லிருந்து 39.1 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவிடம் உள்ள பொருளாதார வளம் மற்றும் இளைஞர் சக்தியைக் கொண்டு செலுத்த வேண்டிய செல்வாக்கை விடக் குறைவான செல்வாக்கையே ஆசியப் பகுதியில் செலுத்த முடிகிறது. இந்தியாவின் பொருளாதாரச் சக்தியை முதலாளிகளின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்துவது போன்ற நவதாராளமயப் போக்கின் காரணமாகவே இந்தக் குறியீடு வீழ்ச்சியடைந்துள்ளது.
3.) சுதந்திரம், பசி மற்றும் சட்டம்
ஃப்ரீடம் ஹவுஸ் அமைப்பின் ஆய்வில் 2014 இல் உலகளவில் 77 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2025 இல் 63 ஆவது இடத்திற்குக் குறைந்து, ‘ஓரளவுக்கு மட்டுமே சுதந்திரம் உள்ள நாடு’ என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் பாகுபாடு கொள்கைகள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிப்பதே இதற்குக் காரணம்.
தனி மனித சுதந்திரக் குறியீட்டில் 2014 இல் 87-இல் இருந்து 2025 இல் 110 ஆவது இடத்திற்குக் குறைந்துள்ளது. உலகளாவிய பசிக் குறியீடு (GHI): 2014 இல் 76 நாடுகளில் 55 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 123 நாடுகளில் 102 ஆவது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த அவலத்தை மறைக்கவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.
சட்டத்தின் ஆட்சி (Rule of Law Index): உலக நீதித் திட்டம் வெளியிட்ட அறிக்கையில், குற்றவியல் நீதி, அடிப்படை உரிமைகள், ஊழல் இல்லாமை போன்ற அம்சங்களில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. 2014 இல் 66 ஆவது இடத்தில் இருந்து தற்போது 86 ஆவது இடத்திற்கு வீழ்ந்துள்ளது. உலகளாவிய ஊழல் குறியீட்டில் 2014 இல் 85 ஆவது இடத்தில் இருந்து 96 ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.
4.) பொருளாதார வீழ்ச்சியும் மகிழ்ச்சி இன்மையும்
உலகளாவிய பொருளாதார சுதந்திரக் குறியீட்டில் 2014 இல் 120-லிருந்து 128 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. திறமையான சட்டக்கட்டமைப்பு இல்லாமையும், ஒழுங்குமுறைக் கட்டமைப்புச் சுமையுமே இதற்குக் காரணம். உலக மகிழ்ச்சி அறிக்கையில், 2014 இல் 111 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2025 இல் 118 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது.
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் 2014 இல் 114 இலிருந்து இன்று 131 ஆகக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 14.7 சதவீதத்திலிருந்து 13.8 சதவீதமாகவும், அமைச்சரவைப் பதவிகளில் பெண்களின் பங்கு 6.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவிகிதமாகவும் குறைந்ததுதான்.
பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை மற்றும் ஊடகங்களின் அரசியல் சார்பு காரணமாக, ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்’ பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என எல்லையற்ற பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தக் குறியீடுகள் அனைத்தும் மனித வாழ்க்கையை மேம்படுத்துபவை. இவற்றில் இந்தியா தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்திப்பது, இந்திய மக்களின் வாழ்க்கை உண்மையான மகிழ்ச்சியற்று உள்ளது என்பதை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது.
– சேது சிவன்
தகவல் ஆதாரம்: Deccan Chronicle, The Wire