தொழில்கள் துவங்க சிறந்த மாநிலம் கேரளம் – கம்யூனிட்களின் சாதனை
கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்தால் தொழில் வளர்ச்சி இருக்காது தொழிற்சங்கங்கள் இருந்தால் நிறுவனங்கள் வெளி மாநிலத்திற்கு சென்று விடும் என கம்யூனிஸ்ட்களின் மீது காலம் காலமாக செய்து வந்த அவதூறு பிரசாரத்தை இரண்டாவது முறையாக கேரள கம்யூனிஸ்ட் அரசு சுக்கு நூறாக உடைத்துள்ளது.
தொழில்கள் துவங்க சிறந்த மாநிலமாக கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரளம் இந்தியாவில் முதல் மாநிலமாக இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளது. வணிக நட்புச் சூழலின் அடிப்படையில் நாட்டில் 28-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது கேரளம். அங்கிருந்து, அது 15-ஆவது இடத்திற்கு முன்னேறியது. கடந்த ஆண்டு முதலாவது இடத்தைப் பிடித்தது. தற்போது மீண்டும் இந்தாண்டு, அதிவேகமான முன்னேறும் பிரிவில் முதல் இடத்தைத் தக்க வைத்து சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த முறை, கேரளம் நான்கு வணிகப் பிரிவுகளிலும் 50 துறைகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.முதலிடத்திற்கான இந்தப் பயணத்தில், முன்மொழியப்பட்ட 434 சீர்திருத்தங்களில், 430 சீர்திருத்தங்களை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு செயல்படுத்தியதே, இந்த சாதனைக்கு முக்கியக் காரணமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சியில், 27 பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக மாறின. விற்றுமுதல் 2440.14 கோடியை எட்டியது.ஒன்றிய அரசால் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையும் கையகப்படுத்தி, புதிய தொழில்களை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தொடங்கியது.
கொச்சி – பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. தனியார் மற்றும் வளாக தொழில்துறை பூங்காக்கள் தொடங்கப்பட்டன. உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்கள் கேரளத்திற்கு வந்தன. நாட்டினுடைய வளர்ச்சியின் நுழைவாயிலாக விழிஞ்ஞம் துறைமுகம் சாத்தியமாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 2.75 லட்சம் நிறுவனங்களைத் தொடங்கிய தொழில்முனைவோர் ஆண்டுத் திட்டம் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது.
ரூ. 16,000 கோடி முதலீடு மூலம் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. முதலீட்டாளர் சந்திப்பு (மீட் தி இன்வெஸ்டர்) திட்டத்தின் மூலம் ரூ. 11,000 கோடி முதலீடு பெறப்பட்டது. மெகா உணவு பூங்கா துவக்கப்பட்டது. மசாலா பூங்கா, பெட்ரோ கெமிக்கல் பூங்கா சாத்தியமானது. சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. புதிய தொழில்துறை கொள்கை அறிவிக்கப்பட்டது. ரூ. 50 கோடி வரையிலான நிறுவனங்களுக்கு கே-ஸ்விப்ட் (K-SWIFT) மூலம் ஐந்து நிமிடங்களுக்குள் உரிமங்களைப் பெறலாம்; ரூ. 50 கோடிக்கு மேல் முதலீடு உள்ளவர்கள், 7 நாட்களுக்குள் உரிமம் பெறலாம் என விதிகள் எளிமையாக்கப்பட்டன.
நாட்டில் முதன்முறையாக ஒரு குறை தீர்க்கும் முறை செயல்படுத்தப்பட்டது, அங்கு வரும் புகார்கள் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படும். தவறும் பட்சத்தில் அதிகாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
ஆய்வுகளை மையப்படுத்தப்பட்டதாகவும்ம், வெளிப்படையானதாகவும் மாற்ற கே-சிஸ் (‘K-Sys’) அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமானதாக மாற்ற மாஸ்டர் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இவை அனைத்தும் தொழில்துறை வளர்ச்சியில் கேரளத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.
புதிய கேரளத்திற்கான உத்வேகம்
“வணிக நட்பு தரவரிசையில் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பது, ‘புதிய கேரளம்’ என்ற இலக்கை நோக்கி அதிக உற்சாகத்துடன் நகருவதற்கு நம்மை ஊக்குவிக்கும். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அடையப்பட்ட சாதனை, கேரளத்தின் தொழில்துறை முன்னேற்றம் தற்செயலானது அல்ல என்பதை நிரூபிக்கிறது. இந்த சாதனை கேரளத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக மாநில அரசு செயல்படுத்தி வரும் பணிகளுக்கான அங்கீகாரமாகும், மேலும் இந்த சாதனைக்காக ஒவ்வொருவரும் பெருமைப்படலாம்” என்று முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான நிர்வாகத்தின் சாதனை
“‘வணிக நட்பு மாநிலம்’ என்கிற பிரிவில் கேரளம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் என்னும் சாதனையை பெற முடிந்தது பெருமைக்குரியது. வேகமாக முன்னேறும் மாநில பிரிவிலேயே கேரளம் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை, 91 சதவிகித சீர்திருத்தங்களை செயல்படுத்தி சாதனை படைத்தோம். இந்த முறை அது 99.3 சதவிகிதமாக்கி அந்த சாதனையை தக்கவைத்துள்ளோம்.
முன்பு, இரண்டு வணிக பிரிவுகளில் கேரளம் முதலிடத்தைப் பிடித்தது, ஆனால், இந்த முறை நான்கு பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ளோம். தொடர் ஆட்சி நிர்வாகம் இந்த சாதனைக்கு வழிவகுத்தது. முதல் பினராயி விஜயன் அரசாங்கத்தால் அடித்தளம் அமைக்கப்பட்டது. அதிலிருந்து இந்த சாதனையை அடைந்துள்ளோம். எளிதாக வணிகம் செய்வதில் கடந்த ஆண்டு பெற்ற சாதனை தற்காலிக நிகழ்வு அல்ல என்பது இப்போது தெளிவாகி உள்ளது.
இது அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் சாத்தியமானது. திட்டத்தின் முன்னேற்றம் முதலமைச்சரின் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலும், தலைமைச் செயலாளரின் தலைமையில் செயலாளர் மட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. எளிதாக வணிகம் செய்வதில் சாதனையைத் தொடர்ந்து, உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 1.81 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட திட்டங்களின் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான சாதனைகள் அதிக முதலீட்டிற்கு வழி வகுக்கும், அதன் மூலம் மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று தொழிற்துறை அமைச்சர் பி. ராஜீவ் உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கடின உழைப்பால் வந்த சாதனை
“இந்தச் சாதனை எதிர்பாராதது அல்ல. 10 ஆண்டுகளாக அரசும், முதலீட்டாளர்களும், பொதுமக்களும் கரம்கோர்த்து செலுத்திய கடின உழைப்பின் பலனாகும். சிவப்பு (ஆபத்தான) பிரிவின் கீழ் உட்படாத எந்த ஒரு தொழில் முயற்சியும் பத்து நிமிடங்களில் தொடங்கலாம் என்கிற மாநிலமாக மாறியுள்ளது. பல முதலீட்டாளர்களும் இந்த மாற்றம் குறித்து பெரும் வியப்படைந்தனர். இங்கு ஒன்றும் நடக்காது என்று தெரிவித்த பலரும் இன்று கேரளத்தைப்போல் மற்ற இடங்களில் செயல்படுவதில் சிரமம் உள்ளதாக கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மலையாளிகளும் பெருமை கொள்ளலாம்” என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII)கேரளத் தலைவர் வி.கே.சி. ரசாக் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில வளர்ச்சியின் அறிகுறி
அதேபோல “நடைமுறையில் இருந்த 7 விதிகளும் 10 சட்டங்களும் மாற்றப்பட்டு செயல்முறைகள் எளிதாக்கப்பட்டது, எவரும் சிறுதொழில் தொடங்க உதவிகரமானது. ‘ஈஸ் ஆப் டூயிங் பிஸினஸ்’ தர உயர்வு கேரள வளர்ச்சியின் அறிகுறியாகும். கேரளத்தின் பெருமைமைக்குரிய சாதனைக்காக தொழிற்துரை அமைச்சரையும் அலுவலர்களையும் பாராட்டுகிறேன். தொழிற்துறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சரியான திசை வழியில் உள்ளது என்பதற்கான சான்று இந்த அங்கீகாரமாகும்” என்று கேரள மாநில சிறுதொழில்கள் சங்கத்தின் தலைவர் ஏ. நிசாருதீன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வெற்றி சாதாரணமானது அல்ல, உலகிலேயே சிறந்த மாடல் கம்யூனிஸ்ட் மாடல் ஆட்சி மட்டும் தான் என்பதனை உலகுக்கு பறைசாட்டுகின்ற வெற்றியாகும். இயற்கையை சுரண்டாமல் அழிக்காமல், தொழிலாளார்களின் நலன்களில் சமரசம் செய்யாமல் அதே சமயம் நவ தாராளமய கொள்களைகளை சமயோசிதமாக பயன்படுத்தி இந்த வெற்றியை கம்யூனிஸ்ட் மாடல் அரசு மக்களுக்கான அரசாக முத்திரை பதித்துள்ளது.
14 நவம்பர் 2025 தீக்கதிர் செய்தி
(இந்த செய்தியில் சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது)