Tamil Marx

இந்திய பொருளாதாரம் வேலையின்மை

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு
  • PublishedNovember 13, 2025

2025-2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான 2025 ஜூலை – செப்டம்பர் வரையிலான காலத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளது அரசு தரவுகளின்படி தெரியவந்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியின் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தரவுகளின்படி, 15 முதல் 29 வயதுடைய இளைஞர்களிடையே வேலையின்மை விகிதமானது 14.6 சதவீதத்திலிருந்து 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நகர்ப்புற வேலையின்மை

பல நிறுவனங்களில் நடைபெற்று வரும் தொடர் பணிநீக்கங்கள், காலிப்பணியிடங்களை நிரப்பாமல் குறைந்த பணியாளர்கள் மூலமாக அதிக வேலைகளை செய்ய வைத்து லாபம் குவிக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் உயர்கல்வி படித்த இளைஞர்களுக்கு நகரங்களில் வேலை தேடும் போது வேலை கிடைக்காமல் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது நகர்ப்புற வேலையின்மை ஒரு முக்கிய அழுத்தப் புள்ளியைக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரண்டு காலாண்டுகளுக்கு இடையில் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதமானது 17.9 சதவீதத்திலிருந்து 18.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பை பாஜக அரசு முடக்கி வருகிறது. புதிய வேலைகள் உருவாகவில்லை. இதனால் கிராமப்புற வேலையின்மை 13.1 சதவீதமாக உள்ளது.
ஒன்பது மாநிலங்கள் இந்த வேலையின்மையில் பெரும்பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் மோசமாக உள்ளன. உத்தரகண்ட் மாநிலம் 14.9 சதவீத வேலையின்மையுடன் முதல் இடத்தில் உள்ளது. இதன் பின் இமாச்சலப் பிரதேசம் 4.3 சதவீதம், ஜம்மு & காஷ்மீர் 3.5 சதவீதம், உத்தரப் பிரதேசம் 2.7 சதவீதம், தமிழ்நாடு 2.1 சதவீத வேலையின்மையுடன் உள்ளன.இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒரு சவாலாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதே காலகட்டத்தில், உற்பத்தி மற்றும் சுரங்கத் துறையில் வேலைவாய்ப்பு உருவாகும் அளவானது 26.6 சதவீதத்திலிருந்து 24.2 சதவீதமாக ஆகக் குறைந்தது. சேவைத் துறையும் 33.9 சதவீதத்திலிருந்து 33.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உற்பத்தித் துறையிலிருந்து விவசாயத்திற்கு

வேலைவாய்ப்புப் பங்கீடு குறித்தான தரவுகள் இந்தியா தொழில்மயமாக்கல், உற்பத்தியை அதிகரிப்பது என்ற இலக்கிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டுகின்றது. வேலைவாய்ப்பில் விவசாயத் துறையின் பங்கு 39.5 சதவீதத்திலிருந்து 42.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வேலையின்மை காரணமாக இளைஞர்கள் (தொழிலாளர் சக்தி) விவசாயத் துறைக்கே மீண்டும் திரும்பிச் சென்றுள்ளதைக் காட்டுகிறது.

வேளாண்மை அல்லாத துறைகள் போதுமான வேலைகளை உருவாக்கத் தவறியதால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் துறைகளை விட்டு வெளியேற்றப்படும் தொழிலாளர்களை விவசாயத் துறை கட்டாயமாக உள்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மற்றும் பல மாநில அரசுகள் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை பாதுகாத்து அத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. விவசாய விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை, பல மாநிலங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அடிப்படை ஆதரவு விலை உயர்த்தப்படவில்லை.

இதுபோன்ற சூழல்கள் அவர்களை மேலும் வறுமை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட துன்பத்திற்குள் தள்ளும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மாநிலங்களில் உற்பத்தித் தொழில் வீழ்ச்சி

மாநில அளவிலான உற்பத்தித் துறையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உற்பத்தி சார்ந்த வேலைகள் 12.4 சதவீதமாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. ஒடிசாவில் 9 சதவீதம் சரிந்துள்ளது. தொழில் துறைக்குப் பெயர் பெற்றதாகக் கூறப்பட்ட ஆந்திரப் பிரதேசம் 7.5 சதவீதம், தெலங்கானா 6.9 சதவீதம் என சரிவு ஏற்பட்டுள்ளது.
முக்கிய மாநிலங்களில் தொழில் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு தொழிற்சாலை நடவடிக்கைகளில் ஏற்பட்ட மந்தநிலையையும், நகர்ப்புற இளைஞர் வேலையின்மை மோசமடைந்து வருவதையும் காட்டுகிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்படும் இந்திய பெண்கள்

பெண்கள் தங்கள் மீதான சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தை உடைப்பதற்கு பொருளாதார சுதந்திரம் மிக அடிப்படையாகும். ஆனால் தற்போது இந்தியா முழுவதும் பெண்கள் வேலையின்மையால் கடும்பாதிப்பை சந்தித்துள்ளனர்.
2025-2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உத்தரகண்டில் வேலையின்மை 9.5 சதவீதத்திலிருந்து 23.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிகாரில் 12.2 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாகவும், ஹிமாச்சலில் 34.3 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாகவும் தமிழ் நாட்டில் 18.5 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாகவும் பெண்களின் வேலையின்மை அதிகரித்துள்ளது.

 

தீக்கதிர் செய்தி

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *