Tamil Marx

இந்தியா கட்டுரைகள்

கேரளமும் தொழில் வளர்ச்சியும் – பேரா. கே.என்.கங்காதரன்

கேரளமும் தொழில் வளர்ச்சியும் – பேரா. கே.என்.கங்காதரன்
  • PublishedOctober 17, 2024

கேரளத்தில் வளர்ச்சி சாத்தியம் இல்லை என்று கருதப்பட்ட தொழில்துறை தற்போது பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கேரளத்தில் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள், வேலையின்மை, தீர்க்க முடியாத சிவப்பு நாடா செயல்பாடு, மோசமான சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மின் பற்றாக்குறை மற்றும் பல பிரச்சனைகள் என்று கேரளம் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

இக்காரணங்களால் கேரளம் தொழில் முதலீட்டுக்கு உகந்தது அல்ல என்று மதிப்பிடப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா மட்டுமே தொழில் வாய்ப்புக்கான வழி என வரையறுக்கப்பட்டிருந்தது. தொழில் துறையின் முன் இருந்த கடுமையான சவால் கேரளத்தை முதலீட்டுக்கு உகந்ததாக மாற்றுவது என்பதாகும்.

கேரளத்தின் சமீபத்திய புரட்சிகர சாதனை என்னவென்றால், அந்த சவாலை வெற்றிகரமாக முறியடித்து, நாட்டின் தொழில்துறை முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் வரைபடத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. யார் வேண்டுமானாலும் தைரியமாக நுழையும் அளவுக்கு முதலீட்டுச் சூழல் நட்புறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கேரள தொழில் துறையானது அசாதாரணமான தொலைநோக்கு பார்வையையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

அடித்தளமிட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி

கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (கிஃப்பி) ஆதரவுடன் எட்டப்பட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி, தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது. சட்டத் திருத்தங்கள் மற்றும் நடை முறை நடவடிக்கைகள் மூலம் முதலீட்டுக்கான பல எதிர்ப்புகளை அரசாங்கம் சமாளித்தது. 38 சட்டங்களில் உள்ள தண்டனைகள் நீக்கப்பட்டன. 13 பிரிவுகள் தொடர்பான 12 சட்டங்களும் அதே அளவிலான விதிகளும் திருத்தம் செய்யப்பட்டன.

எந்தவொரு முதலீட்டாளரும் அனுமதிக்காக காத்திருக்காமல் நேரடியாக வணிகத்தைத் தொடங்கலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்குள் அனுமதி பெறலாம் என்பது நம்ப முடியாத மாற்றத்துக்கு வழிவகுத்தது. இன்று, ஒரு முதலீட்டாளர் ஒரு தொழிலைத் தொடங்க பல கதவுகளைத் தட்ட வேண்டியதில்லை. ஆன்லைன் முறை மூலம் சரி பார்ப்பு மற்றும் ஒப்புதல் உறுதி செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரி அன்றைய தினத்திற்குள் அனுமதி அளிப்பதை கட்டாயமாக்கும் சட்ட அமைப்பு நடைமுறைக்கு வந்தது.

சிறு, குறு நிறுவனங்களுக்கு வலுவான உதவிகள்

தொழில் முனைவோருக்கு தேவையான நிதியுத வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. பொருள் உற்பத்தியில் ஈடு பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்க ளுக்கு மூலதனச் செலவில் 45 சதவிகிதம் வரை அரசு நிதி உதவி வழங்கும். அதேபோல், ரூ.1 கோடி யிலிருந்து ரூ.60 கோடி வரை நிதியுதவியை அரசு உறுதி செய்கிறது. இவை சில உதாரணங்கள் மட்டுமே. கேஎப் சியும் கேஎஸ்டிசியும் பிற நிதி நிறுவனங்களின் நிதி ஆதரவை அரசாங்கத் தரப்பில் உறுதி செய்கின்றன.

தொழில்துறை முன்னேற்றம்

மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் தனியார் முதலீட்டை கேரளம் ஒருபோதும் வெறுத்ததில்லை. 1957 இடது ஜனநாயக முன்னணி முதலாம் அரசு தொழில் கொள்கைப் பிரகடனம், தொழில்துறையினருக்குத் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து, தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உதவியது. ஆனாலும், போதுமான தனியார் மூலதன முதலீடு இல்லை என்பதுதான் உண்மை.

சில ஓடுகள் உற்பத்தி கம்பெனிகளும், முந்திரி ஆலைகளும் மட்டுமே இருந்தன என்பதை முதல் கேரள பொருளாதார ஆய்வு (1959) அறிக்கை தெரிவித்தது. ஆனால் அதன்பிறகு தொழில்துறை மிகவும் முன்னேறியுள்ளது. கேரளத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை, வானத்தில் நட்சத்திரங்களைப் போல பரந்து விரிந்து கிடக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலையமைப்பு தொழில் வளர்ச்சியின் அடையாளமாக நிற்கிறது. 2017-18 நிதி யாண்டில் 15,468 புதிய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. 51,244 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், மூன்று லட்சம் தொழில் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவை சாதனை லாபம் ஈட்டியுள்ளன.

ரூ.19,446 கோடி முதலீட்டில் 6,38,322 பேருக்கு வேலை

ரூ.19,446 கோடி மதிப்புள்ள முதலீடுகள் மூலம் 6,38,322 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மூன்று லட்சம் தொழில் நிறுவனங்களில் 93,000 தொழில் நிறுவனங்கள் பெண்கள் நிர்வகிப்பவை என்பது தனிச்சிறப்பு. கேரளம் அதன் குறைந்த நிலப்பரப்பு, அதிக மக்கள் தொகை அடர்த்தி, மூலதனப் பற்றாக்குறை மற்றும் கனிம வளங்களின் பற்றாக்குறை ஆகியவற்றை, தொழில்நுட்ப ரீதியாக திறமையான பணியாளர்களை தலைமைத்துவ நிலைக்கு உயர்த்துவதன் மூலம் சமாளித்தது. அதிக தொழிலாளர்களும் குறைந்த மூலதன முதலீடும் தேவைப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கேரள வேலையின்மைக்கு முக்கிய தீர்வாகும்.

அறிவுச் சமூகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள கேரளம், அறிவின் தொழில் திறனை உணர்ந்து வருகிறது. தொழில் வளாகங்களில் பல நிறுவனங்கள் ஸ்டார்ட்-அப்களாகவும், தொழில் நிறுவனங்களாகவும் உருவாகி வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு இல்லாதது கேரளம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகளில் ஒன்றாகும்.

வளாகங்களை மையமாகக் கொண்ட தொழில் பூங்காக்கள் ஒரு முக்கிய படியாகும். 25 தொழில் பூங்காக்கள் தொடங்க பினராயி விஜயன் அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதி மட்டும் வழங்கவில்லை. அதோடு, தொழில் பூங்கா தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரையிலான வளாகங்களில் பூங்காக்கள் தொடங்கப்படும். அவர்கள் மாணவர்களுக்கு அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறார்கள்.

இதன்மூலம் மாணவர்கள் தொழில்களில் அனுபவத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் தொழில் நிறுவனங்களின் வேலை முறைகளைப் புரிந்து கொள்ளவும், ஓய்வு நேரத்தில் பயிற்சி பெறவும் மாணவர்களுக்கு உதவுகிறது. அரசு, தனியார் அல்லது பொது-தனியார் கூட்டு முயற்சியின் கீழ் மாவட்ட வாரியாக தொழில் பூங்காக்களை நிறுவுவது ஒரு முக்கியமான படியாகும். தொழில் பூங்காக்களுக்கு குறைந்த விலையில் கட்டிடங்கள், மின்சாரம், தண்ணீர், சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அரசாங்கம் வழங்குகிறது. தொழில் பூங்காக்களின் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு பூங்காவிற்கு ரூ.3 கோடி வரையிலான உதவிக்கு கூடுதலாக 4 சதவிகித வட்டியில் வங்கிக் கடன்களையும் அரசாங்கம் வழங்குகிறது.

ஒன்றிய அரசின் பாகுபாடு

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் தொழில்துறை கொள்கையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் போட்டித் திறனை வளர்த்து, அவை சொந்தக் காலில் நிற்க உதவுவதுதான் அரசின் அணுகு முறை. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களை அரசு கைப்பற்றி லாபத்தில் உயர்த்தியது. 59 நிறுவனங்கள் ரூ.889.15 கோடி லாபம் ஈட்டியுள்ளன.

அரசாங்கத்தின் கொள்கையானது அரசாங்கத்தின் நிதி ஆதரவில் வாழ்வது அல்ல; மாறாக போட்டித்தன்மையை அதிகரிப்பது மற்றும் சந்தையில் தங்கள் இருப்பை நிலைநிறுத்தும் திறன் கொண்டது. அதன் ஒரு பகுதியாக பொதுத்துறை ஆட்சேர்ப்பு வாரியம், திறமை மற்றும் தொலை நோக்கு பார்வை கொண்டவர்களை நிர்வாகப் பணியில் சேர்ப்பதற்காக நிறுவப்பட்டது.

மற்ற துறைகளைப் போலவே, தொழில் துறையிலும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் அணுகுமுறை கேரள அரசுக்கு எதிரானது. மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றிய முதலீட்டின் நிலை இதைத் தெளிவுபடுத்தும். கேரளத்தில் மத்திய பொதுத்துறை முதலீடு 2016-17  இல் மொத்த மத்திய முதலீட்டில் 2.5 சதவிகிதமாக இருந்தது. 2020-21லும் அதே 2.5 சத வீதத்தில் மாறாமல் உள்ளது. அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் ஒன்றிய அரசின் முதலீடு 7.90 சதவிகிதமாகவும், உத்தரப் பிரதேசத்தில் 7.6 சதவிகிதமாகவும் உள்ளது.

தேசாபிமானியில் மலையாளத்தில் வெளியான இக்கட்டுரையை தோழர் சி.முருகேசன் மொழிபெயர்த்துள்ளார்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *