கம்யூனிஸ்டுக் கழகத்துக்கு மத்தியக் கமிட்டியின் வேண்டுகோள்.
தோழர்களே!
1848-49 ஆகிய இரண்டு புரட்சிகர ஆண்டுகளில் இந்தக் கழகம் இரண்டு புதுப்பாணிகளில் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொண்டது:
முதலாவதாக, இதன் உறுப்பினர்கள் எல்லா இடங்களிலும் இயக்கத்தில் ஊக்கமுடன் பங்கேற்றார்கள், அதாவது பிரசாரத்தில், தடையரண்களில் மற்றும் போர்க்களங்களில் அவர்கள் தீர்மானகரமாயும் ஒரே புரட்சிகர வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கத்தின் முன் அணிகளில் நின்றார்கள், என்பது மூலம் இக்கழகம் தன்னைத் தானே நிலைநாட்டிக் கொண்டது.
காங்கிரசுகளின் மற்றும் 1847 மத்தியக் கமிட்டியின் சுற்றறிக்கைகளிலும் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையிலும் வகுத்து முன்வைக்கப்பட்ட இயக்கம் பற்றிய அதன் கருத்தோட்டம் மட்டுமே சரியானது என்று காணப் பெற்றது மூலமும், அந்த ஆவணங்களில் வெளியிடப்பட்டிருந்த வருநிலைவாய்ப்புகள் முழுமையாக நிறைவேற்றம் பெற்றன என்பது மூலமும், முன் நாட்களில் இக்கழகத்தால் இரகசியமாக மட்டுமே பிரசாரம் செய்யப்பட்டு வந்த இன்றைய சமுதாய நிலைமைகள் பற்றிய கருத்தோட்டங்கள் இப்போது எல்லோரின் பேச்சிலும் அடிபடுவதும், சந்தை கூடும் இடங்களில் பகிரங்கமாகப் பிரசாரம் செய்யப்படுவதும் எல்லாம் கொண்டு இக்கழகம் மேலும் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொண்டது.
அதே சமயம் இக்கழகத்தின் முன்னாளைய உறுதியான அமைப்புக்கட்டு கணிசமான அளவுக்கு தளர்த்தப்பட்டது. புரட்சிகர இயக்கங்களில் நேரடியாகப் பங்கேற்ற இதன் உறுப்பினர்களில் ஒரு பெரும் பகுதியினர், இரகசிய சங்கங்களுக்கான காலம் மலையேறி விட்டது எனவும் பகிரங்க மான நடவடிக்கைகள் மட்டுமே போதுமானவை எனவும் கருதினார்கள். தனிப்பட்ட வட்டங்களும் சமுதாயக்குழுக்களும் மத்தியக் கமிட்டியுடனான தமது உறவுகள் தளர்ந்து போய் படிப்படியாக ஒடுங்கி இல்லாது போக இடமளித்தன.
இதன் பின்விளைவாக, குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரின் கட்சியான ஜனநாயகக் கட்சியானது ஜெர்மனியில் தன்னை மேலும் மேலும் ஒழுங்கமைத்துக் கொள்ள இயன்ற அதே போதில், தொழிலாளர் கட்சியானது தனது ஒரே உறுதியான ஆதாரத்தை இழந்து அதிகப்பட்சம் தனிப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே ஸ்தல நோக்கங்கள் அளவில் அமைப்புத் திரட்சியுடன் நிலவியது. இவ்வாறு, பொதுவான இயக்கம் குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ், தலைமையின் கீழ் முழுமையாக வந்திருந்தது. இத்தகைய நிலைமைக்கு முடிவு கட்ட வேண்டும், தொழிலாளரின் சுதந்திரம் மீட்டமைக்கப்பட வேண்டும். மத்தியக் கமிட்டி இந்த அவசியத்தை உணர்ந்தது. எனவே கழகத்தைச் சீரமைப்பதற்காக 1848-49 மாரிக் காலத்திலேயே ஒரு தனிப் பிரதிநிதி என்ற முறையில் இயோசிப் மோள் என்பவரை அனுப்பியது. ஆயினும் மோள் மேற்கொண்ட லட்சியப் பணியில் நிலையான பலன் எதுவும் ஏற்படவில்லை. இதற்கு ஓரளவு காரணமாக இருந்தது ஜெர்மன் தொழிலாளர்கள் அந்தக் காலத்தில் போதிய அனுபவம் பெற்றிருக்கவில்லை என்பதே, அதோடு முந்திய மே மாதத்திய புரட்சி எழுச்சி குறுக்கிட்டதும் இதற்கு ஓரளவு காரணமாகும்.
மோள் தாமே துப்பாக்கி ஏந்திக் கொண்டு பாடேன்-பஃபால்ட்ஸ் சேனையில் புகுந்து ஜூலை 19-ம் தேதி முர்க் எனும் இடத்தில் நடந்த மோதலில் வீழ்த்தபட்டார். கழகம் இவரது இழப்பினால் ஆக அனுபவப்பட்ட மிகவும் செயலூக்கமுடைய பெருமளவு நம்பகமான உறுப்பினர்களில் ஒருவரை இழந்தது. அன்னார் எல்லாக் காங்கிரசுகளிலும் மத்தியக் கமிட்டிகளிலும் தீவிரமான பங்கேற்றவர், இதற்கும் முன்பே கூட பல முக்கியமான பணித்திட்டங்களை மிகவும் வெற்றிகரமாகச் செய்து முடித்தவராவார். ஜெர்மனியிலும் பிரான்சிலும் புரட்சிகரக் கட்சிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், 1849 ஜூலையில் கிட்டத்தட்ட எல்லா மத்தியக் கமிட்டி உறுப்பினர்களும் மீண்டும் வண்டனில் ஒன்று கூடினார்கள், புதிய புரட்சிகர சக்திகளைக் கொண்டு தமது அணிகளை மீண்டும் நிரப்பினார்கள், புதிய பற்றார்வத்துடன் கழகத்தை மறுசீரமைக்க முன்வந்தார்கள்.
தனிப் பிரதிநிதியால் மட்டுமே மறு சீரமைப்பைச் செய்து நிறைவேற்ற முடியும். மேலும் ஒரு புதிய புரட்சி நெருங்கிவரும் போது, எனவே தொழிலாளர் கட்சியானது 1848ல் போல மீண்டும் முதலாளித்துவ வர்க்கத்தால் ஆட்டி வைக்கப்படாமலும் கருவியாகப் பயன்படுத்தப்படாமலும் இருக்க வேண்டுமானால், அது மிகவும் அமைப்புத் திரட்சியுடன் அறவே ஒருமுகப்பட்ட நிலையில் ஆகச் சுயேச்சையான முறையில் இயன்றவரை செயல்பட வேண்டும், எனக் கருதப்படும் இந்தத் தருணத்தில், குறிப்பாயும் இந்தத் தனிப்பிரதிநிதி செல்ல வேண்டுவது மிகமிக முக்கியமானது என்று மத்தியக் கமிட்டி கருதுகிறது.
சகோதரர்களே! ஜெர்மன் மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் விரைவில் ஆட்சியதிகாரத்துக்கு வருவார்கள், அதோடு தாம் புதிதாகப் பெற்ற ஆட்சியதிகாரத்தை தொழிலாளர்களுக்கு எதிராக உடனடியாகத் திருப்புவார்கள் என்பதாக 1848ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே நாம் உங்களிடம் கூறினோம். இது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதை நீங்கள் ஏற்கெனவே கண்டீர்கள். உண்மையில், முதலாளித்துவ வர்க்கத்தினர் தான், 1848 மார்ச் இயக்கத்துக்குப் பின் உடனடியாக அரசு அதிகாரத்தை மேற்கொண்டு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி போராட்டத்தில் தமது நேசசக்திகளாக இருந்த தொழிலாளர்களை கால தாமதமின்றி அவர்களது முன்னாளைய ஒடுக்கப்பட்ட நிலைமைக்கு வலுவந்தமாகப் பின் தள்ளியவர்கள் ஆவர். மார்ச் மாதத்தில் பதவியில் இருந்து ஏற்கெனவே விலக்கப்பட்ட நிலப்பிரபுத்துவக் கட்சியுடன் ஒன்று சேராமல், இந்த நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகாரக் கட்சியிடம் மீண்டும் ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை இறுதியாக ஒப்படைக்காமல் முதலாளித்துவ வர்க்கத்தினரால் இதைச் செய்து நிறைவேற்ற முடியவில்லை, என்ற போதிலும், இன்னமும் அவர்கள் தமக்கென சில முன்னீடுகளைப் பெற்று விட்டிருந்தார்கள். இந்த நிலைமைகள், புரட்சி இயக்கம் இப்போது ஏற்கெனவே சமாதான முறையிலான வளர்ச்சி எனப்படுவதை மேற்கொள்ளும்பட்சம், அரசாங்கத்தின் நிதித் துறைச் சங்கடங்கள் காரணமாக, முடிவில் இவர்களது கரங்களில் ஆட்சி அதிகாரத்தை வழங்கவும் இவர்களது நலன்கள் அனைத்தையும் பாதுகாக்கவும் உதவ முடியும்.
முதலாளித்துவ வர்க்கம் தனது ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மக்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளை எடுத்துத் தன்னை வெறுக்கத்தக்கதாக ஆக்கிக் கொள்ளத்தேவை இல்லை. ஏனெனில் இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் யாவும் ஏற்கெனவே நிலப்பிரபுத்துவ எதிர்ப் புரட்சியால் எடுக்கப்பட்டுவிட்டன. ஆயினும் நிகழ்ச்சிகள் இந்த சமாதானப் பாதையை மேற்கொள்ளப் போவதில்லை என்பது திண்ணம். மாறாக, இது பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சுயேச்சையான புரட்சி எழுச்சியின் மூலமோ அல்லது புரட்சிகர பாபிலோனுக்கு எதிராக புனிதக் கூட்டணியின் ஒரு படையெடுப்பின் மூலமோ வெளிக்கொணரப்பட்டாலும் சரி, இந்த நிகழ்ச்சியை விரைவுபடுத்தும் புரட்சி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பாத்திரத்தை, 1848-ல் மக்களுக்கு எதிராக ஜெர்மன் மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் வகித்த இந்த மிகவும் துரோகத்தனமான பாத்திரத்தை, நெருங்கி வரும் இந்தப் புரட்சியில் ஜனநாயக குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் மேற்கொள்வது திண்ணம். இவர்கள் இப்போது எதிர்த்தரப்பில் 1848-க்கு முன்பாக மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் கொண்டிருந்த அதே நிலையை வகித்துவருகிறார்கள். முந்தைய மிதவாதக் கட்சியை விடவும் தொழிலாளர்களுக்கு மேலும் அதிக அபாயகரமான இந்தக் கட்சி, இந்த ஜனநாயகக் கட்சி மூன்று பகுதிகளைக் கொண்டதாகும்:
1. நிலப் பிரபுத்துவத்தையும் எதேச்சாதிகாரத்தையும் உடனடியாகவும் முழுமையாகவும் வீழ்த்தும் நோக்கத்தைப் பின்பற்றிவரும் பெரும் முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பகுதிகள். இந்தப் பிரிவு ஒரு காலத்தில் பெர்லின் சமரசவாதிகளாய் இருந்தவர்களை, வரி எதிர்ப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
2. ஜனநாயக-அரசியல் சட்ட ஆதரிப்பு குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் பிரிவு. முந்திய இயக்கத்தில் இவர்களது பிரதான நோக்கம், ஃபிராங்புர்ட் சட்ட மன்றத்தில் அவர்களது பிரதிநிதிகளால் இடதுசாரிகளாலும், பின்னால் ஸ்டுட்கார்ட் நாடாளுமன்றத்தாலும் ரைஹ் அரசியல் சட்டத்திற்கான இயக்கத்தில் தாமேயும் நிறுவ முயன்ற ஓர் ஏற்றத்தாழ்வான ஜனநாயக கூட்டு அரசினை நிலை நாட்டுவதேயாகும்.
3. குடியரசுவாத குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் பிரிவு, இவர்களது லட்சியம் சுவிட்சர்லாந்தின் தன்மையிலான ஒரு ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசாகும். இப்போது இவர்கள் தம்மை “சிவப்பர்கள்”, “சமூக-ஜன நாயக வாதிகள்” என்று அழைத்துக் கொள்கிறார்கள். காரணம் அவர்கள் சிறிய மூலதனத்தின் மீதான பெரும் மூலதனத்தின் செல்வாக்கு பலத்தை, சிறிய முதலாளித்துவ வர்க்கத்தினர் மீதான பெரும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் செல்வாக்கு பலத்தை ஒழிக்க வேண்டும் எனும் ஆத்மார்த்திக விருப்பத்தை ஆதரித்துப் பேணிவருகிறார்கள், இந்தப் பிரிவின் பிரதிநிதிகள், ஜனநாயகக் காங்கிரசுகள் மற்றும் கமிட்டிகளின் உறுப்பினர்களாயும், ஜனநாயக சங்கங்களின் தலைவர்களாயும், ஜனநாயக செய்திப்பத்திரிகைகளின் ஆசிரியர்களாயும் இருந்தவர்கள்.
இப்போது, அவர்களது தோல்விக்குப் பின்னர் இந்தப் பிரிவுகள் எல்லாம் பிரான்சில் குடியரசுவாத குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் தம்மைத் தாமே சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்வது போலவே தம்மைத்தாமே “குடியரசுவாதிகள்” அல்லது “சிவப்பர்கள்” என்று அழைத்துக் கொள்கின்றார்கள். வர்டம்பர்க், பவேரியா இத்தியாதி இடங்களில் போல எங்கு அவர்கள் தமது நோக்கங்களை அரசியல் சட்ட பாணியில் அனுசரிப்பதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கக் காண்கிறார்களோ அங்கு அவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது பழைய தொடர்களை நீடித்து வைத்திருக்கிறார்கள், தாம் கிஞ்சிற்றும் மாறிவிடவில்லை என்பதைச் செயல்கள் மூலம் நிரூபிக்க முயல்கிறார்கள். மேலும், இந்தக் கட்சியின் பெயர் மாற்றம் தொழிலாளர் பாலான அதன் தோரணையில் சின்னஞ்சிறு மாறுதலைக் கூடக் கொண்டுவரவில்லை என்பதும், ஆனால் இப்போது அவர்கள் எதேச்சாதிகாரத்துடன் ஒன்றிணைந்து விட்ட முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திரும்பவும், பாட்டாளி வர்க்கத்திடம் ஆதரவை நாடவுமான கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதை மட்டுமே நிரூபிக்கிறது என்பதும் தெளிவு.
ஜெர்மனியில் உள்ள குட்டிமுதலாளித்துவ ஜனநாயகக்கட்சி மிகவும் சக்தி வாய்ந்தது. இதனுள் நகரங்களில் வாழும் முதலாளித்துவ வர்க்கத்தினரில் மாபெரும் பெரும்பான்மை மட்டுமன்றி தொழில் துறையிலும் வாணிகத்திலும் இருக்கும் சிறுதர நபர்கள் மற்றும் கைவினைச் சங்க ஆண்டான்கள் உட்படுவர். இதன் ஆதரவாளர்களிடையே விவசாயிகளும் நாட்டுப்புறப் பாட்டாளிகளும் அடங்குவர், பின்னவர்களைப் பொருத்தவரை அவர்கள் இதுகாறும் சுயேச்சையான நகரப்புறப்பாட்டாளி வர்க்கத்தினரின் ஆதரவை இன்னும் பெற்றுவிடவில்லை.
குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் பாலான புரட்சிகரத் தொழிலாளர் கட்சியின் உறவு நிலை இதுவே; அது எந்தப் பிரிவை வீழ்த்த எண்ணியுள்ளதோ அந்தப் பிரிவுக்கு எதிராக அவர்களுடன் சேர்ந்து நடைபோடுகிறது, தமது சொந்த நலன்களுக்காகத் தமது நிலையை கெட்டிப்படுத்த எங்கெல்லாம் அவர்கள் முயல்கிறார்களோ அம்முயற்சிகள் அனைத்திலும் அவர்களை எதிர்க்கிறது.
புரட்சிகரப் பாட்டாளிகளுக்கு வேண்டி சமுதாயம் முழுவதையும் புரட்சிமயமாக்க விழைவதற்கு மாறாக, ஜனநாயக குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் சமுதாய நிலைமைகளில் ஒரு மாற்றத்துக்குப் பாடுபட்டு, அதன் வழி நடப்பிலுள்ள சமுதாய அமைப்பைத் தமக்குப் போதுமானவரை தாங்கக் கூடியதாயும் வசதியானதாயும் செய்துகொள்ள முயல்கின்றனர், எனவே அவர்கள் முக்கியமாயும் அரசின் செலவினங்களைக் குறைத்தல், அதிகார வர்க்கத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பிரதான வரிகளை பெரிய நிலவுடைமையாளர் முதலாளிகள் மீது மாற்றிச் சுமத்துவது ஆகியவற்றைக் கோருகிறார்கள். மேலும் அவர்கள் பொது கடன் வசதி நிறுவனங்கள் மற்றும் கடும்வட்டிக்கு எதிரான சட்டங்கள் வாயிலாக சிறிய மூலதனத்தின் மீதான பெரும் மூலதனத்தின் செல்வாக்கு பலத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கோருகிறார்கள். இத்தகைய நிறுவனங்கள் மூலம் அவர்களும் விவசாயிகளும் முதலாளிகளிடமிருந்தல்லாமல் அரசிடம் இருந்து சாதகமான நிபந்தனைகளின் பேரில் முன்பணம் பெறுவது சாத்தியமாகும்.
அதோடு அவர்கள் நாட்டுப்புறப் பகுதிகளில் நிலப்பிரபுத்துவத்தை முழுமையாக ஒழித்து முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளை நிலைநாட்ட வேண்டும் எனவும் கோருகிறார்கள். இவை அனைத்தையும் சாதனையாக்க அவர்களுக்கு ஒன்றாக அரசியல் சட்டபாணி அல்லது குடியரசு பாணியிலான ஒரு ஜனநாயக அரசுக் கட்டுமானம் தேவை. அது அவர்களுக்கும் அவர்களது நேசசக்திகளான விவசாயிகளுக்கும் பெரும்பான்மையைத் தருவதாக இருத்தல் வேண்டும். அதோடு சமுதாயச் சொத்தின் மீதும் தற்போது அதிகார வர்க்கத்தினர் புரிந்து வரும் பல பணிகளின் மீதும் அவர்களுக்கு நேரடி ஆதிக்கத்தை வழங்குகிற ஒரு ஜனநாயக சமுதாயக் கட்டமைப்பும் தேவை.
மூலதனத்தின் மேலாதிக்கத்தையும் அதன் துரிதமான அதிகரிப்பையும் மேலும் மட்டுப்படுத்த ஓரளவு மரபுரிமையிலான சொத்துரிமையைக் கட்டுப்படுத்தவும் ஓரளவு சாத்தியமானவரை பல வேலைப் பொறுப்புக்களையும் அரசுக்கு மாற்றி வழங்கவும் ஆவன செய்ய வேண்டும். தொழிலாளர்களைப் பொருத்த வரை அவர்கள் முன்போலவே கூலித் தொழிலாளர்களாகவே நீடித்து இருப்பார்கள் என்பது விசேஷமாயும் நிச்சயமாக இருக்கும். ஜனநாயகவாத குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் தொழிலாளர்களுக்கு மேலும் நல்ல கூலியும் கூடுதல் பாதுகாப்பான வாழ்க்கையையும் மட்டுமே விரும்புகிறார்கள், இதனை ஓரளவு அரசின் சார்பில் பெறும் வேலைகள் மூலமும் அறக்கொடை நடவடிக்கைகள் மூலமாயும் நிறைவேற்ற முடியும் என்று கருதுகிறார்கள். சுருங்கக் கூறின் அவர்கள் கிட்டத்தட்ட மறைமுகமான பிச்சை மூலம் தொழிலாளர்களுக்கு கைக்கூலி தந்து, தற்காலிகமாக அவர்களது நிலைமையை சகிக்கத்தக்கதாக்குவது மூலம் அவர்களது புரட்சிகர ஆற்றலை உடைக்கவும் கருதுகிறார்கள்.
இங்கு சுருக்கித்தரப்பட்டுள்ள குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரிக்கைகள் அதன் பிரிவுகள் அனைத்தாலும் முன்வைக்கப்படுவதில்லை, அதே சமயம் இப்பிரிவுகளின் உறுப்பினர்களில் மிகச் சிலரே இந்தக் கோரிக்கைகள் ஒட்டு மொத்தமான வகையில் திட்டவட்டமான நோக்கங்களாக அமைகின்றன என்பதாகக் கருதுகிறார்கள், இவர்கள் இடையிலிருந்து தனிநபர்களோ அல்லது தனிப்பிரிவுகளோ மேலும் விலகிச் செல்லும் பட்சத்தில் இந்தக் கோரிக்கைகளை மேலும் அதிகமாகத் தமது சொந்தக் கோரிக் கைகளாகக் கொள்வார்கள்.
மேலே வரையறுக்கப்பட்டுள்ளவற்றில் தமது சொந்தக் கோரிக்கைகளைக் காணும் அந்த ஒரு சிலர் இதன் வழி அவர்கள் ஒரு புரட்சியிடம் இருந்து எதிர்பார்க்கும் உச்சபட்ச கோரிக்கைகளை முன்வைத்து விட்டதாகக் கருதலாம். ஆனால் இந்தக் கோரிக்கைகள் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியைப் பொருத்த வரை எவ்வகையிலும் போதவே போதாது.
ஜனநாயக குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் அதிகப்பட்சம் மேலே குறிப்பிட்ட கோரிக்கைகளை சாதனையாக்குவதோடு புரட்சியைக் கூடுமான வரையில் விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே பொழுதில், கிட்டத்தட்ட எல்லா உடைமை வர்க்கங்களும் அவற்றின் மேலாதிக்க நிலையில் இருந்து வலுவந்தமாக வெளியேற்றப்படும் வரையில், பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை வென்று பெறும் வரையில், பாட்டாளிகளின் கூட்டமைப்பு ஒரு நாட்டில் மட்டுமன்றி உலகின் எல்லா ஆதிக்க நாடுகளிலும் முன்னேற்றமடைந்து அதன் விளைவாய் இந்த நாடுகளின் பாட்டாளிகளிடையான போட்டி இல்லாதாகி, குறைந்தபட்சம் நிர்ணயகரமான உற்பத்தி சக்திகள் பாட்டாளிகளின் கரங்களில் ஒரு முனைப்படுத்தப்படும் வரையில் புரட்சியை நிரந்தரமாக்குவது நமது நலன்களுக்கு உகந்தது, மேலும் நமது கடமையுமாகும்.
நமக்கு இந்தப் பிரச்சினை தனிச்சொத்துடைமையில் மாறுதல் செய்வதல்ல, மாறாக அதை அழித்தொழிப்பது மட்டுமே; வர்க்கப் பகைமைகளைச் சுமுகப்படுத்தல் அல்ல, மாறாக வர்க்கங்களை ஒழிப்பதே, நிலவும் சமுதாயத்தைத் திருத்துவதல்ல, மாறாக புதிய ஒரு சமுதாயத்துக்கு அடித்தளம் இடுவதே. புரட்சியின் இனி மேற்பட்டதான வளர்ச்சியின் போது குட்டிமுதலாளித்துவ ஜனநாயகமானது ஜெர்மனியில் சிறிது காலம் பேராதிக்கம் வகிக்கும் செல்வாக்கைப் பெறும் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை. எனவே, இது சம்பந்தமாக பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பாக, இந்தக் கழகத்தின் தோரணை என்னவாக இருக்கும் எனும் கேள்வி எழுகிறது:
1. குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் இது போலவே ஒடுக்கப்படுகிற இன்றைய நிலைமைகள் நீடிக்கும் போது;
இன்றைய தருணத்தில் ஜனநாயக குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் எல்லா இடங்களிலும் ஒடுக்கப்பட்டு வரும்போது, அவர்கள் பொதுப்படையாக பாட்டாளிகளிடம் ஒற்றுமையையும் இணக்கத்தையும் பற்றிப் பேசுகிறார்கள், அவர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்து, ஜனநாயகக் கட்சியில் இருக்கும் எல்லாக் கருத்துச் சாயல்களையும் தழுவியதான ஒரு பெரிய எதிர்க்கட்சியை நிறுவுவதற்கு முயல்கிறார்கள். அதாவது அவர்கள் பொதுவான சமூக ஜனநாயகத் தொடர்கள் பேராதிக்கம் வகிக்கும் ஒரு கட்சி நிறுவனத்தில் தொழிலாளர்களை மாட்டிவிட முயல்கிறார்கள், இத்தொடர்களின் பின்னால் அவர்களது விசேஷ நலன்கள் மறைந்து நிற்கின்றன.
இதில் அருமைக்குரியதான சமாதானத்தின் பொருட்டு பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படாது போகலாம். இத்தகைய இணைப்பு முற்றிலும் அவர்களுக்குச் சாதகமானதாக மாறும், பாட்டாளிகளுக்கு அறவே பாதகமானதாகும். பாட்டாளி வர்க்கம் தனது முழு சுயேச்சையையும் அரும்பாடுபட்டுப் பெற்ற நிலையையும் இழந்து மீண்டும் ஒருமுறை அதிகாரபூர்வமான முதலாளித்துவ ஜனநாயகத்தினை அண்டி நிற்கும் உறுப்பு என்ற நிலைக்குத் தாழ்வுறும். எனவே இந்த இணைப்பை மிகவும் தீர்மானகரமான முறையில் நிராகரிக்க வேண்டும், முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்குக் கரவொலி முழக்கும் தாள கோஷ்டியாகத் தொண்டு புரிய மீண்டும் ஒரு முறை குனிந்து தாழ்வுறுவதற்குப் பதில், தொழிலாளர்கள் விசேஷமாயும் இந்தக் கழகத்தினர் அதிகார பூர்வமான ஜனநாயகவாதிகளுடன் அக்கம் பக்கமாக சுதந்திரமான, இரகசியமும் பகிரங்கமுமான தொழிலாளர் கட்சி நிறுவனத்தை அமைப்பதற்குப் பாடுபட வேண்டும்.
அதோடு பாட்டாளி வர்க்கத்தின் நலன்களும் தோரணைகளும் இந்த மத்திய அமைப்பு மற்றும் தொழிலாளர்களின் மையக் கூறுகளில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்குகளிலிருந்து சுயேச்சையான முறையில் விவாதிப்பதற்கு வகை செய்ய வேண்டும். முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் பாட்டாளிகளுடன் சமமான அதிகாரம் மற்றும் சமமான உரிமைகளுடன் அக்கம் பக்கமாக நிற்கும் ஒரு கூட்டணி பற்றிக் காரியகரமாகக் கருதிப்பார்க்கவே இல்லை என்பதற்கு பிரெஸ்லா ஜனநாயகவாதிகளின் போக்கே ஓர் உதாரணமாகும்.
அவர்கள் தமது ஏடான Neue Oder-Zeitung-இல், சுதந்திரமாக ஒழுங்கமைந்து வரும் தொழிலாளர்களை மிகவும் மூர்க்கமான முறையில் தாக்கியுள்ளனர். அத்தொழிலாளர்களை அவர்கள் சோஷலிஸ்டுகள் என்னும் பெயரால் குறிப்பிடுகிறார்கள். ஒரு பொது விரோதியுடனான போராட்டத்தில் ஒரு விசேஷ இணைப்பு எதுவும் தேவையில்லை. அத்தகைய ஒரு விரோதியை எதிர்த்து நேருக்கு நேர் போராட வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்ட உடனேயே இருதரப்புக்களின் நலன்களும் தற்காலிகமாக ஒன்றுபடுகின்றன. முன்போலவே, எதிர்காலத்திலும் கூட, தற்காலிகமாக மட்டுமே நிலவும் என்று கருதப்படும் இந்த இணைப்பு தானே தோற்றமளிக்கும்.
வரவிருக்கும் கடுமையான மோதல்களில், முந்திய மோதல்கள் அனைத்திலும் நடந்தது போலவே தொழிலாளர்கள் தான் பிராதானமாயும் தமது தீரம், உறுதி மற்றும் தன்னலத்தியாகம் மூலம் வெற்றியை ஈட்டிப் பெற வேண்டும் என்பது கூறாமவே விளங்கும். முன்பு போலவே இந்தப் போராட்டத்திலும் கூட பெருந்திரளான குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் சாத்தியமானவரை நீண்ட காலம் தயக்கம் காட்டுவர், முடிவு செய்யாது இருப்பர், செயல்படாது நிற்பர். ஆனால் பிரச்சினை தீர்க்கப்பட்ட உடனேயே வெற்றியைத் தாமே பறித்துக் கொள்வர், தொழிலாளர்களை அமைதி காக்கும் படியும், வேலைக்குத் திரும்பும்படியும், கேட்டுக் கொள்வர், அதீத நடவடிக்கைகள் எனப்படுவதை எதிர்த்து எச்சரிக்கையாக இருப்பர், வெற்றியின் பலன்களை அடையாதபடி தொழிலாளர்களைத் தடை செய்வர்.
குட்டி முதலாளித்துவ ஜன நாயகவாதிகளை இதைச் செய்யாமல் தடுக்கும் – அளவுக்குத் தொழிலாளரிடம் வலிமை இல்லை. ஆனால் ஆயுதமேந்திய பாட்டாளிகளுக்கு மேல் அவர்கள் கை ஓங்குவதைக் கடினமாக்கும் அளவுக்கும், முதலாளித்துவ ஜன நாயகவாதிகளின் ஆட்சி துவக்க முதலே அதன் வீழ்ச்சியின் வித்துக்களைத் தாங்கி நிற்கும்படியான அத்தகைய நிலைமைகளைக் கட்டளையிடும் அளவுக்கும் தொழிலாளர்களிடம் வலிமை இருந்தது. இதன் மூலம் பின்னால் அவர்களது ஆட்சி பாட்டாளி வர்க்க ஆட்சியால் வெளித்தள்ளப்படுவதற்கு இது கணிசமாக உதவியது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மோதலின் போதும், போராட்டத்திற்குப் பின்னர் உடனடியாகவும் குமுறலை அமைதிப்படுத்தச் செய்யப்படும் முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சிகளை எதிர்த்துச் செயல்பட்டும் ஜன நாயகவாதிகள் தமது இன்றைய சொல்லுருவிலான பயங்கரத்தை நிறைவேற்றுமாறு கட்டாயப்படுத்தவும் தொழிலாளர்கள் சாத்தியமான சகலத்தையும் செய்தல் வேண்டும். அவர்களது செயல்கள் வெற்றிக்குப் பின்னர் உடனடியாக நேரடி புரட்சிகரப் பரபரப்பு ஒடுக்கப்படுவதைத் தடைசெய்யும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். இதற்கு மாறாக, இந்தப் பரபரப்பை சாத்தியமான வரை நீண்ட காலம் உயிர்த்துடிப்புடன் வைத்திருக்க வேண்டும். அதீதமான செயல்கள் எனப்படுவனவற்றை எதிர்ப்பதற்கு நேர்மாறாக, வெறுக்கத்தக்க நினைவுகளுடன் மட்டுமே சம்பந்தமுடைய வெறுக்கப்பட்ட தனி நபர்கள் அல்லது பொதுக் கட்டடங்களை எதிர்த்து நடக்கும் மக்களின் பழிவாங்கல் செயல்களைப் பொருத்தவரை, இத்தகைய சம்பவங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி இவற்றுக்கான தலைமையும் ஏற்றெடுக்கப்பட வேண்டும்.
போராட்டத்தின் போதும், போராட்டத்திற்குப் பிறகும் தொழிலாளர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் கோரிக்கைகளுக்கு அக்கம் பக்கமாகவே தமது சொந்தக் கோரிக்கைகளையும் முன்வைத்தல் வேண்டும். ஜனநாயக முதலாளித்துவ வர்க்கம் அரசாங்கத்தைத் தம்வசம் எடுத்துக்கொள்ளத் தொடங்கிய உடனேயே அவர்கள் தொழிலாளர்களுக்குரிய உத்தரவாதங்களைக் கோர வேண்டும். அவசியமானால் இந்த உத்தரவாதங்களை அவர்கள் பலப்பிரயோகம் மூலம் பெற வேண்டும். பொதுவாக புதிய ஆட்சியாளர்கள் சாத்தியமான எல்லா சலுகைகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் பிரதிக்னை செய்து கொள்ளும்படி அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர்கள் இணக்குவிப்பதற்கான மிகவும் உறுதியான மார்க்கமாகும்.
பொதுவாக, அவர்கள் ஒவ்வொரு தெருப் போராட்டத்துக்குப் பிறகும் தோன்றுகிற வெற்றி போதையையும் புதிய நிலவரத்தின் பாலான உற்சாகத்தையும் எல்லா வழிகளிலும் கட்டுப்படுத்தி வைக்க இயன்றவரை முயல வேண்டும். நிலைமை பற்றிய ஓர் அமைதியான நடுநிலையான மதிப்பீடு மூலமும், புதிய அரசாங்கத்திடமான ஒளிவு மறைவற்ற அவநம்பிக்கை மூலமும் இந்தக் கட்டுப்படுத்தலைச் செய்தல் வேண்டும், புதிய அதிகார பூர்வமான அரசாங்கங்களுக்கு அக்கம் பக்கமாக அவர்கள் தமது சொந்த புரட்சிகர அரசாங்கங்களை முனிசிப்பல் கமிட்டிகள் மற்றும் முனி சிப்பல் கவுன்சில்கள் வடிவிலேயோ அல்லது தொழிலாளர் கிளப்புகள் அல்லது தொழிலாளர் கமிட்டிகள் வடிவிலேயோ உடனிகழ்வாக நிறுவ வேண்டும்.
இதன் விளைவாக முதலாளித்துவ ஜனநாயக அரசாங்கங்கள் உடனே தொழிலாளர்களின் ஆதரவை இழப்பது மட்டுமன்றி, அதோடு கூடவே துவக்க முதல் தொழிலாளர் திரள் முழுவதன் பின் பலத்தைக் கொண்ட அதிகார சக்தியால் மேற்பார்வை செய்யப்படுவதையும் அச்சுறுத்தப்படுவதையும் தாமே காண முடியும்.
சுருங்கக் கூறின், வெற்றியின் முதல் தருணம் முதலே, அவநம்பிக்கை இனி வெற்றி கொள்ளப்பட்ட பிற்போக்குக் கட்சிக்கு எதிராக அன்றி, தொழிலாளர்களின் முந்திய நேசசக்திகளுக்கு எதிராக, பொதுவான வெற்றியைத் தனக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள விரும்பும் கட்சிக்கு எதிராக நெறியாக்கம் செய்யப்பட வேண்டும்.
2. அவர்கள் கை மேலோங்க வகை செய்யும் அடுத்த புரட்சிகரப் போராட்டத்தில்;
தொழிலாளர்களுக்கு எதிராக எதன் துரோகம் வெற்றியின் முதல் மணி தொட்டே துவங்குமோ அந்தக் கட்சியை ஊக்கத்தோடும் அச்சுறுத்தும் முறையிலும் எதிர்க்கும் பொருட்டு தொழிலாளர்கள் ஆயுதமேந்த வேண்டும், தம்மை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.
பாட்டாளி வர்க்கம் முழுவதற்கும் சுழல் துப்பாக்கிகள் கனத்துப்பாக்கி, பீரங்கி மற்றும் ஆயுத தளவாடங்கள் வழங்கி அவர்களை ஆயுத பாணிகளாக்கும் திட்டம் உடனடி நிறைவேற்றப் படவேண்டும்.
தொழிலாளருக்கு எதிராக நெறியாக்கம் செய்யப்படும் பழைய நகரவாசிகள் காவற்படை புதுப்பிக்கப்படுவதை எதிர்க்க வேண்டும். எங்கு பிந்திய செயல்காரிய சாத்தியமில்லையோ அங்கு தொழிலாளர்கள் தம்மைத் தாமே சுயேச்சையாக ஒரு பாட்டாளி வர்க்க காவற்படையாக ஒழுங்கமைத்துக் கொள்ளவும் தாமே தேர்ந்தெடுத்த தளபதிகள் தமது விருப்பப்படி தேர்வு செய்த படைத் தலைமை ஆகியவற்றை அமைக்கவும், தம்மை அரசின் அதிகார பலத்துக்குக் கீழடக்கிக் கொள்ளாது, தொழிலாளர் அங்கீகரிக்க முடிந்துள்ள புரட்சிகரக் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் செயல்பட முயலல் வேண்டும்.
எங்கு தொழிலாளர்கள் அரசின் செலவில் பதவிகளில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்களோ அங்கு அவர்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டு தமது சொந்தத் தேர்வுப்படியான தளபதிகள் சகிதம் தனிப்படைப் பிரிவாகவோ அல்லது பாட்டாளி வர்க்கக் காவற்படையின் ஒரு பகுதியாகவோ ஒழுங்கமைக்கப்பட வேண்டும். எந்தச் சாக்குப் போக்கைக் கொண்டும் ஆயுதங்கள் மற்றும் ஆயுத தளவாடங்களை ஒப்படைக்கக் கூடாது. நிராயுத பாணிகளாக்குவதற்கான எந்த ஒரு முயற்சியையும் தடுத்துச் செயல் குலைத்தல் வேண்டும். அவசியமானால் பலப்பிரயோகம் மூலம் இதைச் செய்ய வேண்டும்.
தொழிலாளர் மீதான முதலாளித்துவ ஜனநாயக வாதிகளின் செல்வாக்கை அழித்தல், தொழிலாளர்களின் சுயேச்சையான ஆயுதமேந்திய நிறுவனங்களை உடனே அமைத்தல், முதலாளித்துவ ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத தற்காலிக ஆட்சி மீது கூடுமானவரை கடினமான இணக்குவிப்பதான நிபந்தனைகளை அமுலாக்கல் இவையே நெருங்கி வரும் புரட்சி எழுச்சியின் போதும் அதற்குப் பின்னரும் பாட்டாளி வர்க்கம் மற்றும் இந்தக் கழகம் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய பிரதான அம்சங்களாகும்.
3. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, வீழ்த்தப்பட்ட வர்க்கங்கள் மீதான மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் பேராதிக்க கட்டத்தின் போது.
புதிய அரசாங்கங்கள் தமது நிலையை ஓர் அளவுக்கு கெட்டிப்படுத்திக் கொண்ட உடனேயே, தொழிலாளர்களை எதிர்த்த அவற்றின் போராட்டம் துவங்கும். இங்கு ஜனநாயக குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினிடம் ஊக்கமான எதிர்ப்பை காட்டும் பொருட்டு தொழிலாளர்கள் கிளப்புகளில் சுயேச்சையாக ஒழுங்கமைக்கப்படுவதும், மத்தியப் படுத்தப்படுவதும் முக்கியமாயும் அவசியம்.
நடப்பிலுள்ள அரசாங்கங்களை வீழ்த்திய பின்னர், மத்தியக் கமிட்டி சாத்தியமான அளவு விரைவாக ஜெர்மனிக்குச் செல்லும், உடனே ஒரு காங்கிரசைக் கூட்டும், இயக்கத்தின் பிரதான களத்தில் நிறுவப்பட்ட தலைமையின் கீழ் தொழிலாளர் கிளப்புகளை மையப்படுத்துவதற்குத் தேவையான யோசனைகளை முன்வைக்கும். குறைந்தபட்சம் தொழிலாளர் கிளப்புகளை மாகாண அளவில் பரஸ்பரம் இணைப்பதை துரிதமாக ஒழுங்கமைப்பது தொழிலாளர் கட்சியை வலுப்படுத்தவும் வளப்படுத்தவுமான மிகமுக்கியமான அம்சங்களில் ஒன்று. நடப்பிலுள்ள அரசாங்கங்கள் வீழ்த்தப்படுவதன் உடனடிப் பின்விளைவு ஒரு தேசியப் பிரதிநிதித்துவ சபையைத் தேர்ந்தெடுப்பதாகும். இங்கு பாட்டாளி வர்க்கம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களாவன:
அ. தொழிலாளர்களின் எந்த ஒரு பிரிவும் வட்டார அதிகாரிகள் அல்லது அரசாங்கக் கமிஷனர்களிடமிருந்து வரும் எவ்விதமான சாக்குப் போக்கு அல்லது தந்திரச் செயல்களால் தடைப்படுத்தப்படாதபடி கவனித்துக் கொள்வது.
ஆ. எல்லா இடங்களிலும் முதலாளித்துவ ஜனநாயக வேட்பாளர்களுக்கு அக்கம் பக்கமாக தொழிலாளர் வேட்பாளர்கள் நிறுத்திவைக்கப்பட வேண்டும், இவர்கள் கூடுமான வரை கழக உறுப்பினர்களாக இருக்க வேண்டும், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை சாத்தியமான சகல வழிகளிலும் ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் தேர்ந்தெடுக்கப்படக்கூடியதான வாய்ப்பு இல்லாத இடங்களிலுங்கூட தமது சுயேச்சையைப் பேணிக் காப்பதற்காக தமது சக்திகளை கணித்திடவும் பொது மக்கள் முன்பாகத் தமது புரட்சிகர தோரணையையும் கட்சியின் நோக்கு நிலையையும் கொண்டுவரவும் வேண்டி தொழிலாளர்கள் தமது சொந்த வேட்பாளர்களை நிறுத்தி வைக்க வேண்டும்.
இதன் தொடர்பாக அவர்கள் ஜனநாயகவாதிகளின் இத்தகைய வாதங்களால், உதாரணமாக இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் ஜனநாயகக் கட்சியைப் பிளவுறுத்துகிறார்கள், பிற்போக்காளர்கள் வெற்றியடைவதைச் சாத்தியமாக்குகிறார்கள் எனும் வாதங்களால் மருட்டப்பட இடமளித்தல் கூடாது. இத்தகைய தொடர்களின் இறுதி நோக்கம் பாட்டாளி வர்க்கத்தினரை ஏமாற்றுவதேயாகும். இத்தகைய சுயேச்சையான நடவடிக்கைகள் மூலம் பாட்டாளி வர்க்கக் கட்சி நிச்சயம் அடையப் போகும் முன்னேற்றம், பிரதிநிதித்துவ அமைப்பில் ஒரு சில பிற்போக்காளர்கள் இருப்பதால் ஏற்படவிருக்கும் பாதிப்பைவிடவும் மிகவும் அளப்பரிய முக்கியத்துவமுடையதாகும். துவக்க முதவே ஜனநாயகமானது பிற்போக்கை எதிர்த்து உறுதியாகவும் பயங்கரமான முறையிலும் முன்வருமானால் தேர்தல்களில் பின்ன தன்செல்வாக்கு முன்கூட்டியே அழித்தொழிக்கப்படும்.
முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களுடன் முரண்பட்டு மோதுவதற்கான முதல் விஷயம் நிலப்பிரபுத்துவ ஒழிப்புபற்றியதாகும். முதலாவது பிரெஞ்சுப் புரட்சியில் போலவே குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் பிரபுத்துவ நிலங்களை விவசாயிகளுக்கு இலவசச் சொத்தாக அளிப்பர், அதாவது நாட்டுப்புறப்பாட்டாளி வர்க்கத்தை அப்படியே நிலவும்படி விட்டு ஒரு குட்டிமுதலாளித்துவ விவசாயி வர்க்கத்தை உருவாக்க முயல்வர். இந்த வர்க்கம் பிரெஞ்சு விவசாயிகள் இன்னமும் அனுபவித்து வரும் அதே வறுமை மற்றும் கடன்சுமை வட்டத்துக்குள் உழல்வது திண்ணம்.
நாட்டுப்புற பாட்டாளிகளின் நலன்களைக் கருதியும் தமது சொந்த நலனைக் கருதியும் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தைக் கட்டாயமாக எதிர்த்தே தீர வேண்டும். பறி முதல் செய்யப்பட்ட பிரபுத்துவச் சொத்துக்கள் அரசின் சொத்துக்களாக வைக்கப்பட்டு, அவை பெருவீத விவசாயத் தின் சகல சாதகங்களோடும் ஒன்றிணைந்த நாட்டுப்புறப் பாட்டாளிகளால் சாகுபடி செய்யப்படும் தொழிலாளர் காலனிகளாக மாற்றப்பட வேண்டும் என்று கோருவது அவசியம். இதன் வாயிலாக, ஆட்டங்கண்டு விட்ட முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளுக்கு மத்தியில் பொதுச் சொத்துடைமை எனும் கோட்பாடு உடனடியாக ஓர் உறுதியான அடித்தளத்தினைப் பெறுகிறது.
ஜனநாயகவாதிகள் எந்தளவுக்கு விவசாயிகளுடன் சேர்ந்து இணைகிறார்களோ அந்த அளவுக்கு தொழிலாளர்கள் நாட்டுப்புறப்பாட்டாளிகளுடன் சேர்ந்து இணைகிறார்கள். மேலும் ஜனநாயகவாதிகள் ஒன்றா நேரடியாக ஒரு கூட்டாட்சி குடியரசுக்காகப்பாடுபடுவர் அல்லது தனியொரு பிரிக்க வொண்ணா குடியரசை அவர்களால் தவிர்க்க முடியாத பட்சம் அவர்கள் சமுதாயக் கூட்டுகள் மற்றும் மாகாணங்களுக்கு அதிகப்பட்சம் சாத்தியமான தன்னாட்சியும் சுதந்திரமும் வழங்குவது மூலம் குறைந்தபட்சம் மத்திய அரசாங்கத்தை முடப்படுத்த முயல்வர். இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தொழிலாளர் தனி ஒரு பிரிக்கவொண்ணாத ஜெர்மன் குடியரசுக்காகப் பாடுபடுவது மட்டுமன்றி, இந்தக் குடியரசின் அகத்தே அரசு அதிகார சக்தியின் கரங்களில் ஆட்சியதிகாரம் மிகவும் உறுதியாக மையப்படுத்தப்படுவதற்காகவும் கூடப் பாடுபட வேண்டும். சமுதாயக் கூட்டுக்களுக்கு சுதந்திரம், சுய-ஆட்சி நிர்வாகம் இத்தியாதியான ஜனநாயக பாணிப் பேச்சுக்களால் தவறாக வழி நடத்தப்படுவதற்கு அவர்கள் இடந்தரக் கூடாது.
ஒழிக்கப்பட வேண்டிய மத்திய கால எச்ச மிச்சங்கள் ஏராளமாக இருக்கும் ஜெர்மனி போன்ற ஒரு நாட்டில், பெருமளவிலான வட்டார மற்றும் மாகாணப் பிடிவாதம் இன்னமும் தகர்க்கப்பட வேண்டியுள்ள ஒரு நாட்டில், மத்தியில் இருந்து மட்டுமே முழுவேகத்தில் முன் செல்லக் கூடியதான புரட்சிகரச் செயல் பாதையில் ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு மாகாணமும் புதிய முட்டுக்கட்டையைப் போடுவதற்கு எத்தகைய புறச்சூழலின் கீழும் இடமளித்தல் கூடாது.
இன்றைய நிலைவரமே மீண்டும் புதுப்பிக்கப்படுவதையோ, ஒரே விதமான அதே முன்னேற்றத்துக்காக ஜெர்மானியர்கள் ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாகாணத்திலும் தனித் தனியாகப் போராட வேண்டும் என்பதையோ அனுமதிக்கக் கூடாது.
நவீன தனியார் சொத்துடைமையை விடவும் மிகவும் பின்னணியில் நிற்பதும், எல்லா இடங்களிலும் தவிர்க்க முடியாத வகையில் தனியார் சொத்தாக மாறி வருவதும், இதன் விளைவாக ஏழை செல்வந்த சமுதாயக் குழுக்களுக்கு இடையே எழும் சண்டைகளும், அதோடு தொழிலாளர்களை ஏமாற்றுகிற சமுதாய குடியுரிமைச் சட்டமும், இதனை நிரந்தரமாக்குவதற்குரிய சுதந்திர சமுதாய அரசியல் சட்டம் எனப்படுவது, இவற்றோடு சேர்ந்து இருப்பது மான இந்த வடிவிலான சொத்துடைமை, அதாவது சமுதாய சொத்துடைமை, சிறிதளவும் அனுமதிக்கப் படக்கூடாது. 1793ல் பிரான்சில் தேவைப்பட்டது போன்று இன்று ஜெர்மனியில் கறாரான மையப்படுத்தவை முடித்து நிறைவேற்ற வேண்டுவது மெய்யான புரட்சிகரக் கட்சியின் பணியாகும்.
அடுத்த இயக்கத்துடன் கூடவே ஜனநாயகவாதிகள் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவார்கள் என்பதையும், அவர்கள் கிட்டத்தட்ட சோஷலிஸ்டு நடவடிக்கைகளை முன்வைக்கும்படி எவ்வாறு கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்பதையும் நாம் ஏற்கெனவே பார்த்தோம். இதற்குப் பதிலாக தொழிலாளர்கள் என்ன நடவடிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று கேட்கப்படும். இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் தொழிலாளர்கள் நேரடியான கம்யூனிஸ்டு நடவடிக்கைகளை மேலும் முன்வைக்க முடியாது என்பது திண்ணம். ஆனால் அவர்கள் செய்யக்கூடியவை பின்வருமாறு:
அ. இதுவரை நிலவிவந்துள்ள சமுதாய அமைப்பில் எத்தனை துறைகளில் சாத்தியமோ அத்தனையிலும் தலையிடும்படியும், அதன் முறையான போக்கை உலைவு செய்து தம்மைத் தாமே இணக்கப்படுத்திக் கொள்ளவும், அரசின் கரங்களில் உற்பத்தி சக்திகள், போக்குவரத்து சாதனங்கள், ஆலைகள், ரயில்வேக்கள் இத்தியாதிகளை சாத்தியமான வரை அதிகப்பட்சமாக ஒருமுனைப்படுத்தும் படியும் ஜனநாயகவாதிகளைக் கட்டாயப்படுத்துவது;
ஆ. எப்படியும் புரட்சிகரமான முறையில் அன்றி, மாறாக முற்றிலும் சீர்திருத்தவாத முறையிலேயே செயல்படப்போகும் ஜனநாயகவாதிகளின் யோசனைகளை, அதிதீவிர முனைக்கு முடுக்கி அவற்றை தனியார் சொத்துடைமை மீதான நேரடித் தாக்குதல்களாக மாற்ற வேண்டும். இவ்வாறாக, உதாரணமாக குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் ரயில்வேக்களையும் ஆலைகளையும் விலைக்கு வாங்க வேண்டும் எனும் யோசனை முன்வைக்கும் பட்சத்தில், தொழிலாளர்கள் இவை பிற்போக்காளர்களின் உடைமைகள் என்பதால் அரசு இழப்பீடுகள் எதுவும் வழங்காமல் அப்படியே பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோர வேண்டும்.
ஜனநாயகவாதிகள் சமவீதத்திலான வரிகளைப் பிரேரேபித்தார்கள் என்றால், தொழிலாளர்கள் வளர்வீதவரிகளை விதிக்கும்படி கோரவேண்டும்; ஜனநாயகவாதிகள் தாமாகவே ஒரு மித அளவிலான வளர்வீத வரியினை முன்வைப்பார்களானால், தொழிலாளர்கள் பெரு மூலதனம் இதன் மூலம் அழிவுறத்தக்கவிதத்தில் மிகவும் அறவே கடுமையாக அதிகரிக்கும் வரிவிகிதங்களை விதிக்கும்படி வற்புறுத்த வேண்டும்.
ஜனநாயகவாதிகள் அரசுக் கடன்கள் முறைப்படுத்தப்படுவதைக் கோரினார்கள் என்றால் தொழிலாளர்கள் அரசின் திவால் நிலையைக் கோர வேண்டும். இவ்வாறாக, எல்லா இடங்களிலும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஜனநாயகவாதிகளின் சலுகைகள் மற்றும் நடவடிக்கைகளைத் தழுவியதாக இருக்க வேண்டும்.
ஜெர்மன் தொழிலாளர்கள் நீடித்த புரட்சிகர மாற்றத்தினை முழுமையாக அனுபவப்படாமல் ஆட்சி அதிகாரத்தை அடைய இயலாது, தமது சொந்த வர்க்க நலன்களை சாதிக்க முடியாது எனும் பட்சத்தில், அவர்கள் இந்த அணுகிவரும் புரட்சிகர நாடகத்தின் முதல் அங்கமானது பிரான்சில் தமது சொந்த வர்க்கத்தின் நேரடி வெற்றியுடன் ஒருங்கிணையும் என்பதையும், அதனால் பெருமளவுக்கு வேகமுடுக்கம் பெறும் என்பதையும், குறைந்தபட்சம் இந்தத் தடவை நிச்சயமாகத் தெரிந்து கொள்வார்கள்.
ஆனால் அவர்கள், தமது வர்க்க நலன்கள் என்பவை என்ன என்பதைத் தமது மனங்களில் தெளிவுபடுத்திக் கொள்வது மூலமும், சாத்தியமான அளவுக்கு விரைவாக தாம் ஒரு சுயேச்சையான கட்சி என்ற நிலையை மேற்கொள்வது வாயிலாகவும் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி எனும் சுதந்திரமான நிறுவனமாக இல்லாது, ஒழியும் போக்கில் ஜனநாயக குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரின் போலியான தொடர்களால் வஞ்சிக்கப்பட இடமளியாத வகையிலும், தமது இறுதி வெற்றிக்காக உச்சபட்சம் பாடுபட வேண்டும். அவர்களது போராட்ட கோஷம்: ”நிரந்தரமாக நிலைபெறும் புரட்சி என்பதாகும்.”
லண்டன், மார்ச் 1850