Tamil Marx

கட்டுரைகள் மார்க்ஸ்

மார்க்சும் இன்றைய அரசியலும்-பிரகாஷ் காரத்

மார்க்சும் இன்றைய அரசியலும்-பிரகாஷ் காரத்
  • PublishedNovember 10, 2021

 

இன்றைய தினம் – 2019 மே5, மாமேதை காரல் மார்க்சின் இரு நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகிற நாளாகும். தோழர் மார்க்ஸ் 1818 மே 5 அன்று பிறந்தார். அவரது 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஓராண்டு கொண்டாடப்பட்டது. மார்க்சை பற்றியும், மார்க்சியத்தைப் பற்றியும் மாநாடுகள், கருத்தரங்குகள், விவாத அரங்குகள், நூல் வெளியீடுகள் என மார்க்ஸ் இரு நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இத்தகைய பன்முக நடவடிக்கைகள், நமது சமகால சகாப்தத்தில், அதாவது 21ஆம் நூற்றாண்டில் மார்க்சும், அவரது சிந்தனைகளும் பொருத்தப்பாடு உடையவையாக இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை வலதுசாரி இந்துத்துவா சக்திகளுக்கெதிராகவும் அந்த சக்திகளின் எதேச்சதிகார தலைவரான நரேந்திர மோடிக்கெதிராகவும் தேர்தல் போரினை நடத்திக்கொண்டே, மார்க்சின் 200ஆம் ஆண்டினை கொண்டாடியிருக்கிறோம். இதிலும் கூட நாம் எதிர்கொண்டிருக்கும் குறிப்பிட்ட சமகாலச் சூழ்நிலையின் தீவிரத்தை மிகத் துல்லியமான முறையில் – கூர்மையான முறையில் ஆய்வு செய்து எதிர்கொள்வதற்கு பொருத்தமானதாக மார்க்சியத் தத்துவமே முன்னிற்கிறது என்பதைப் பார்க்கிறோம். இந்தியாவில் மோடி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபிறகு எழுந்துள்ள வலதுசாரி தாக்குதல்கள் எத்தகையவை என்பதை புரிந்துகொள்வதற்கு மார்க்சியமே அடிப்படைக் கோட்பாடாக நமக்கு வழிகாட்டுகிறது.

வலதுசாரி சக்திகள்

உலகளவில் ஏற்பட்டுள்ள அரசியல் போக்கான வலதுசாரித் திருப்பம் என்பது தொடர்கிறது. 2018ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் எட்டு அரசாங்கங்கள் தீவிர வலதுசாரி அல்லது தீவிர தேசியவாத கட்சிகளால் தலைமை தாங்கப்பட்டன என்பதைப் பார்க்கலாம். ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகியவையே அந்த எட்டு நாடுகள். இவை மட்டுமல்ல, சில நாடுகளில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இனவாதத்தை தூக்கிப்பிடிக்கும் பிராந்திய வெறிக் கட்சிகள் தோன்றவும், வளரவும் செய்துள்ளன. குறிப்பாக பிரான்சில் தேசிய முன்னணி; ஜெர்மனியில் டச்சுலாந்திற்கான மாற்று, கிரீசில் கோல்டன் டான், பின்லாந்தில் பின்னியர்கள் கட்சி மற்றும் நெதர்லாந்தில் சுதந்திரக் கட்சி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தென்அமெரிக்க கண்டத்திலும் கூட தீவிர வலதுசாரி சக்திகள் தங்களது அராஜகமான தாக்குதல்களை துவக்கியுள்ளனர். குறிப்பாக பிரேசிலில் நடந்த தேர்தலில் அதிதீவிர வலதுசாரியான ஜெய்ர் பொல்சானரோ வெற்றி பெற்றிருக்கிறார்; வெனிசுலாவில் மதுரோ அரசுக்கெதிராக அமெரிக்காவின் தூண்டுதலோடு வலதுசாரி சக்திகள் ஒரு முற்றுகையை உருவாக்கியிருக்கின்றன.

துருக்கி ஜனாதிபதியாக வலதுசாரியான ரெசப் எர்டோகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதையும் கடந்தாண்டில் பார்த்தோம். கடந்த மாதம் இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். நரேந்திர மோடியும் இவர்களோடு சேர்த்து குறிப்பிடப்பட வேண்டிய நபர்தான். ஜப்பான் பிரதமராக வலதுசாரியான சின்ஷோ அபே, நான்காவது முறையாக அங்கே ஆட்சிக்கு வந்திருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் மேலாக, 2016 நவம்பரில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தீவிர வலதுசாரியான டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதையும் பார்த்தோம்.இத்தகைய தலைவர்கள் உருவாவது அல்லது வலதுசாரி அரசாங்கங்கள் அமைவது என்பதைப் பற்றி பேசும்போது, அனைத்துவிதமான பொருத்தமற்ற கோட்பாடுகளும் அவர்களை உயர்த்திச் சொல்கிற போலித்தனமான கருத்துக்களும் கட்டமைக்கப்படுகின்றன; உலவ விடப்படுகின்றன. இத்தகைய நபர்கள் உருவாகியிருப்பது தொடர்பாக பேசும்போது, முதலாளித்துவ ஊதுகுழல்கள் பலர், “நவீன ஜனரஞ்சகவாதம்” என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, பெரும்பணக்காரர்களால் கொண்டு செல்லப்பட்ட செல்வங்களை கைப்பற்றி எளிய மக்களுக்கு தரும் திட்டம்; அதைச் செயல்படுத்துபவர்கள் என்று பொருள். வேறு சிலர், அரசியலில் “வலுவான தலைவர்” உருவாகிவிட்டதாக பேசுகிறார்கள்.

ஆனால் இவையெல்லாம், அரசியலில் இத்தகைய நபர்கள் வளர்ந்திருப்பது தொடர்பான பொருத்தமற்ற அல்லது தவறாக முன்மொழிகிற நிர்ணயிப்புகளாகும். “ஜனரஞ்சகமான” தலைவர் அல்லது ஆட்சி என்று குறிப்பிடும் போது, அது அரசியலில் பின்பற்றப்படுகிற ஒரு வழிமுறையாக குறிப்பிடலாமே தவிர, அதை ஒரு தத்துவமாக குறிப்பிட முடியாது. பொதுவான அரசியல் விமர்சகர்கள், ஜனரஞ்சகவாதம் என்கிற வார்த்தையை வலதுசாரி மற்றும் இடதுசாரி தலைவர்கள் அனைவருக்குமே பொருந்துவதாக பயன்படுத்துகிறார்கள் – அது ஹியூகோ சாவேசாக இருக்கட்டும் அல்லது டொனால்ட் டிரம்பாக இருக்கட்டும்; மெரின் லீ பென் – ஆக இருக்கட்டும் அல்லது ஜெர்மி கோர்பினாக இருக்கட்டும்- எல்லோருமே இவர்களுக்கு ஒன்றுதான். அதேபோலத்தான், “வலுவான தலைவர்’’ என்ற பதத்தையும் எர்டோகன் அல்லது ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் ஆகிய வலதுசாரி எதேச்சதிகாரிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்; வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ அல்லது பொலிவியாவின் ஈவோ மொரேல்ஸ் போன்ற இடதுசாரி தேசியவாதத் தலைவர்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.ஆனால் நம்மைப் பொருத்தவரை, உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள மார்க்சிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொள்வது அவசியம்.

ஒரு எதேச்சதிகாரி எப்படி உருவாகிறார்?

தமது மிக பிரபலமான “லூயிஸ் போனபார்ட்டின் 18 வது புருமையர்” என்ற நூலில் மார்க்ஸ் எழுதுகிறார் : “மனிதர்கள் தங்களது சொந்த வரலாற்றை தாங்களே உருவாக்குகிறார்கள்; ஆனால் தாங்கள் விரும்பியபடி அவர்கள் அந்த வரலாற்றை உருவாக்கவில்லை; அவர்கள் தாங்களே தேர்வு செய்துகொண்ட சூழ்நிலைமைகளின் அடிப்படையில் அந்த வரலாற்றை உருவாக்கவில்லை; மாறாக, தாங்கள் நேரடியாக எதிர்கொள்கிற, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற, கடந்த காலத்திலிருந்து தங்கள் கைவசம் மாற்றப்பட்டிருக்கிற சூழ்நிலைமைகளின் கீழ்தான் தங்களது வரலாற்றை உருவாக்குகிறார்கள்.” அந்த நூலில் மார்க்ஸ், போனபார்ட் ராஜ்ஜியம் எப்படி உதயமானது என்பதை விவரிக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், ஒரு எதேச்சதிகாரத் தலைவர் எப்படி உருவாகிறார் என்பதை விளக்குகிறார். இன்னும் விரிவாகச் சொல்வதானால், ஒரு முதலாளித்துவ சமூகத்தில் ஆளும் வர்க்கமானது அங்கு நடைமுறையில் உள்ள அரசியல் சாசன மற்றும் நாடாளுமன்ற வழிமுறைகளின் படி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாத நிலையில் அல்லது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பு முறை தகர்ந்து ஒரு கடும் நெருக்கடிக்குள்ளாகும் நிலையில், அதைப் பயன்படுத்தி ஒரு எதேச்சதிகாரி எப்படி உருவாகிறார் என்பதை மார்க்ஸ் விவரிக்கிறார்.

அத்தகைய ஒரு சூழல், ஒரு எதேச்சதிகார தலைவர் உருவாவதற்கான களமாக மாறுகிறது அல்லது ஆளும் வர்க்கங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சுயேச்சையான அதிகாரத்தை பெற்றுக் கொண்ட அரசு உருவாவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதன் பொருள், இப்படி உருவாகிற எதேச்சதிகார அரசு ஆளும் வர்க்கங்களுக்கெதிராகச் செல்லும் என்பதல்ல; மாறாக அந்த அரசாங்கம் ஆளும் வர்க்கங்களின் நலன்களை முழுமையாக பாதுகாக்கவே செயல்படும் என்பதே. உலக நிதி மூலதனம் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியிருக்கக்கூடிய சூழலில் தீவிர வலதுசாரி மற்றும் எதேச்சதிகார தலைவர்கள் உருவாகியிருப்பதை நாம் பார்க்க வேண்டும். நவீன தாராளமயத்தால் சமூகங்கள் மறு வரையறை செய்யப்பட்டிருப்பது மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நவீன தாராளமய கட்டமைப்பையே சூழ்ந்து முற்றுகையிட்டிருக்கக் கூடிய சூழல் ஆகியவற்றின் பின்னணியில் மேற்படி வலதுசாரி தலைவர்களின் எழுச்சியைப் பார்க்க வேண்டும். இத்தகைய பின்னணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வலதுசாரி தலைவர்கள், நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரானவர்கள் போன்றும் தேசிய வெறியுணர்வை உயர்த்திப் பிடிப்பவர்களாகவும் தங்கள் இனத்தவர் அல்லாத – நாட்டவர் அல்லாத மற்றவர்களை வெளியேற்றி தங்களது இனத்தவரை காப்பவராகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள். மார்க்ஸ் கூறியதுபோல, இப்படித் தேர்வு செய்யப்பட்ட எதேச்சதிகார தலைவர்கள் பலரும் போனபார்ட் ராஜ்ஜியத்தை நடத்திய- அதாவது சர்வாதிகார ராஜ்ஜியத்தை நடத்திய எதேச்சதிகாரிகளின் குணாம்சத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

நாற்பது ஆண்டு நவீன தாராளமயம்

நவீன தாராளமயமானது கடந்த நாற்பதாண்டு காலமாக சமூகத்தை மறு கட்டமைப்பு செய்து வந்திருக்கிறது. இப்படி மறு கட்டமைப்பு செய்ததன் விளைவு என்னவென்றால், தொழிலாளி வர்க்கத்தை வாழ்வின் விளிம்பிற்கு தள்ளியதே ஆகும். நவீன தாராளமயம், மனிதர்களை இனரீதியாக, மதரீதியாக இன்னும் பல பிரிவுகளாக பிளவுபடுத்தி அவர்களை தனித்தனி அடையாளங்களாக மாற்றி, அவர்களுக்கிடையே மோதலை உருவாக்கிய அடையாள அரசியலை உருவாக்கியது; இன அடைப்படையிலான, மத அடிப்படையிலான தேசிய வெறியுணர்வினை பரஸ்பரம் தூண்டிவிட்டது. இதே நாற்பதாண்டு காலத்தில் சோசலிசத்திற்கும் உலகளாவிய மனித மாண்புகளுக்கும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இப்படியாக பல்வேறு வடிவங்களிலான வலதுசாரி சித்தாந்தங்களும் இயக்கங்களும் வளர்வதற்கு ஒரு புதிய களம் என்பது ஏற்பட்டுவிட்டது.2007-08 உலகப் பொருளாதார நெருக்கடி என்பது, இன்னும் தீவிரமான நெருக்கடிகளை கொண்டு வரக் காத்திருக்கும் நவீன தாராளமய பொருளாதார அமைப்பின் உச்சகட்ட நெருக்கடியின் துவக்கமேயாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு சுட்டிக்காட்டியபடி, நவீன தாராளமய நெருக்கடியானது புதிய முரண்பாடுகளை உருவாக்கியிருக்கிறது; இந்த முரண்பாடுகளின் விளைவாக மோதல்களும், புதிய அரசியல் சக்திகளின் எழுச்சியும் பதற்றச் சூழலும் தீவிரமடைவதற்கான நிலைமை உருவாகியிருக்கிறது.நவீன தாராளமய அமைப்பு முறை நெருக்கடியின் உச்சத்திற்கு சென்று தனது இறுதிக் கட்டத்தை எட்டும்போது, ஆளும் வர்க்கங்கள் அரசியலமைப்புச் சட்டத்தையும், அரசு நிறுவனங்களையும் இணக்கமாகவும் வழக்கமான முறையிலும் நடத்திச் செல்வதற்கு இயலாத நிலைக்கு தள்ளப்படும். இறுதிக்கட்டத்தை எட்டும் நவீன தாராளமயமானது ஜனநாயகத்தையும் ஜனநாயக அரசியல் அமைப்புகளையும் அடித்து நொறுக்கும். இத்தகைய கட்டத்தில்தான் தீவிர வலதுசாரி மற்றும் எதேச்சதிகார அரசியல் முகங்கள் எழுகின்றன. அவர்கள் வீழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் நிறுவனங்களுக்கு மேலானவர்களாக தங்களை முதன்மைப்படுத்தி காட்டுகிறார்கள். டிரம்ப், எர்டோகன், நேதன்யாகு மற்றும் பொல்சானரோ போன்ற அனைத்து நபர்களும், அவர்கள் உருவான அரசியல் சூழலும் அவர்கள் பயன்படுத்துகிற பிற்போக்குவாத சித்தாந்தங்களும் பிளவுவாத தேசிய இனவெறியும் வேறு வேறாக இருந்தபோதிலும், மேலே குறிப்பிட்ட நடைமுறையின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டவர்களே.

ஊழலின் உச்சம்

இந்த காலகட்டத்தில் மூலதன ஆட்சியின் சாதகமான வடிவமான தாராளவாத ஜனநாயகமும் கூட நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள், குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினர், அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்கள் மேலும் மேலும் நிதி மற்றம் வர்த்தக பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யக்கூடிய கருவியாக அரசியல் கட்டமைப்பையே மாற்றி விட்டதை உணருகிறார்கள். இதன் விளைவாக, நவீன தாராளமய கண்ணோட்டத்தை தழுவிக் கொண்ட சமூக ஜனநாயக கட்சிகள்கூட கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. அந்தக் கட்சிகளும் கூட தங்களது கொள்கைகளிலிருந்து விலகி சிதைந்துவிட்டன. ஆளும் வர்க்க பெரும் பணக்காரர்களோடு இரண்டறக் கலந்து ஊழலின் உச்சத்திற்கு சென்றுவிட்டன. இத்தகைய சூழலில், பொதுவாக நவீன தாராளமய பொருளாதார அமைப்பில் மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி உணர்வை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிச சக்திகள் எழுந்துள்ளன. இந்த சக்திகள், இடம்பெயர்ந்து வரும் மக்களையும் மத மற்றும் இன சிறுபான்மை மக்களையும் குறி வைக்கின்றன; அவர்களுக்கு எதிராக வெறியுணர்வைத் தூண்டி விடுகின்றன; இடம் பெயர்ந்து வருவோர்க்கு எதிராக உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் செயல்படுகின்றன. உலகமய நிதி மூலதனம் மற்றும் நவீன தாராளமய ஆதிக்கமானது உலகின் எல்லாப் பகுதிகளிலும் இன ரீதியாக, மதரீதியாக, பிராந்திய ரீதியாக மக்களைப்பிளக்கும் அடையாளங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதுதான் வலதுசாரி அடையாள அரசியலுக்கும் பிளவுவாத தேசிய வெறிக்கும் அடிப்படையாக அமைகிறது. வெவ்வேறு நாடுகளில் “அந்நியர்கள்” என்ற பெயரில் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்- இந்தியாவில் முஸ்லிம்கள், துருக்கியில் குர்து இனமக்கள், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்த அகதிகள் போன்றவர்களை சொல்லலாம்.
மார்க்சியம் எப்படிச் செயலாற்றுகிறது?
மார்க்சியம் என்பது, இத்தகைய வலதுசாரி அச்சுறுத்தலின் தன்மை எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல. அதை எதிர்த்து போராடுவதற்கு அரசியல் தத்துவார்த்த ரீதியாக நம்மை வலுப்படுத்திக் கொள்வதற்கும் உதவுகிறது; உத்வேகம் அளிக்கிறது.அடிப்படையில் இந்த வலதுசாரி சக்திகளை, வர்க்க போராட்டத்தின் மூலமே முறியடிக்க முடியும். வர்க்கப் போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் சர்வதேச நிதி மூலதனத்திற்கு எதிராகவும் நடத்தப்படுகிற போராட்டங்களை உள்ளடக்கியது. எனினும் வர்க்கப் போராட்டம் என்பது முதன்மையாக தேசிய எல்லைகளுக்குள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் இதுபற்றி கீழ்க்கண்டவாறு எழுதினார்கள்: “ஒரு முழுமையான வடிவம் பெறவில்லையென்றாலும், உரிய வலு இல்லை என்ற போதிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் என்பது முதலில் ஒரு தேசியப் போராட்டமே. எனவே ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது சொந்த நாட்டில் உள்ள முதலாளித்துவத்துடனான பகைமையை முதலில் தீர்த்துக் கொண்டாக வேண்டும்.” மேலும், வர்க்க போராட்டத்தை அடிப்படை வர்க்கங்களின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டம் என்பதாக மட்டும் பார்க்கக் கூடாது. கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும், ஏங்கெல்சும் குறிப்பிட்டுள்ளபடி, “வர்க்கப் போராட்டம் என்பது அடிப்படையில் ஒரு அரசியல் போராட்டமாகும்.”இந்தியாவைப் பொருத்தவரை இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கெதிரான போராட்டம் என்பது அடிப்படையில் ஒரு அரசியல், தத்துவார்த்தப் போராட்டமாகும். இத்தகைய போராட்டம் தர அடிப்படையில் வலுப்பெற்றிருக்கிறது; அது நவீன தாராளமய அமைப்பு முறைக்கெதிரான போராட்டமாக இன்னும் வலுப்பெறும்போது வெகு மக்களின் போராட்டமாக அதன் தன்மை மாறும்.

இடதுசாரி அரசியல் சக்திகள்

உலகின் பல்வேறு பகுதிகளில் முதலாளித்துவ உலகமயத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வலதுசாரி தாக்குதலுக்கெதிரான, பிளவுவாத சக்திகளுக்கெதிரான போராட்டம் என்பது, தற்போது புத்துயிர் பெற்றுள்ள இடதுசாரி அரசியல் சக்திகளால் மீண்டும் முன்னுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது: இத்தகைய இடதுசாரி அரசியல் சக்திகள் என்பவை தாராளவாத ஜனநாயக மற்றும் சமரசப் போக்குள்ள சமூக ஜனநாயக அரசியல் சக்திகளிடமிருந்து வேறுபட்டவை. பிரிட்டனில் தொழிலாளர் கட்சிக்குள் ஜெர்மி கோர்பின், அமெரிக்காவில் பெர்னி சாண்டர்ஸ் தலைமையிலான ஜனநாயக சோசலிஸ்ட்டுகள், பிரான்சில் இடது முன்னணி மற்றும் நவீன மக்கள் இயக்கங்களான மஞ்சள் சட்டை இயக்கம், சுற்றுச்சூழல் இயக்கங்கள் போன்றவற்றை அத்தகைய இடதுசாரி அரசியல் சக்திகளாக நாம் பார்க்கிறோம். இவையெல்லாம் இன்னும் துவக்க நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. அரசியல் நிகழ்வுகளின் மையப்பகுதிக்கு தொழிலாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் கொண்டு வருவதை நோக்கி இந்த சக்திகள் அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது. மார்க்சிய மேதை எரிக் ஹாப்ஸ்பாம் தனது கடைசி நூலில் எழுதியது போல, “மீண்டும் ஒருமுறை காலம் இன்னும் வேகமாக மார்க்சை கைக்கொள்ள துவங்கியிருக்கிறது.
நன்றி தீக்கதிர்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *